ஆமோஸ் 3:7-15

ஆமோஸ் 3:7-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? நீங்கள் சமாரியாவின் பர்வதங்களில் வந்துகூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள். அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும். மாரிக்காலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 3:7-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆண்டவராகிய யெகோவா ஒன்றும் செய்வதில்லை. சிங்கம் கர்ஜித்தது, யார் பயப்படாதிருப்பான்? ஆண்டவராகிய யெகோவா பேசியிருக்கிறார், யாரால் இறைவாக்கு சொல்லாமல் இருக்கமுடியும்? அஸ்தோத்தின் கோட்டைகளுக்கும், எகிப்தின் கோட்டைகளுக்கும் பிரசித்தப்படுத்துங்கள். “சமாரியாவின் மலைகளின்மேல் ஒன்றுகூடுங்கள், இஸ்ரயேலில் நடக்கும் பெரும் கலவரத்தையும், அங்குள்ள மக்களிடையே நடக்கும் ஒடுக்குதலையும் பாருங்கள்.” “சரியானதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும் தங்கள் கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “பகைவன் ஒருவன் நாட்டை ஆக்கிரமிப்பான். அவன் அரண்களை இடித்து, உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.” யெகோவா சொல்வது இதுவே: “அப்பொழுது சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு மேய்ப்பன் தன் ஆட்டின் இரு கால் எலும்புகளையோ, காதின் துண்டொன்றையோ மீட்டெடுப்பதுபோல் இஸ்ரயேலர் தப்புவிக்கப்படுவார்கள். சமாரியாவில் படுக்கையின் ஓரங்களுடனும், தமஸ்குவிலுள்ள இருக்கைகளின் மூலைகளுடனும் மட்டுமே அவர்கள் தப்புவிக்கப்படுவார்கள்.” “இதைக் கேட்டு யாக்கோபின் குடும்பத்திற்கெதிராக நாடு முழுவதும் சாட்சி சொல்லுங்கள்” என்று யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார். “இஸ்ரயேலின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும் நாளிலே பெத்தேலிலுள்ள தெய்வத்தின் மேடைகளை அழிப்பேன். மேடைகளின் கொம்புகள் வெட்டுண்டு தரையில் விழும். செல்வந்தர்களின் அழகான வீடுகளை அழிப்பேன். குளிர்க்கால வீடுகளை இடிப்பேன். அவற்றுடன் கோடைகால வீடுகளையும் இடிப்பேன். தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் அழிக்கப்படும். அரண்மனைகள் பாழாகிவிடும்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

ஆமோஸ் 3:7-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களுக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார். சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாமல் இருப்பான்? யெகோவாகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? நீங்கள் சமாரியாவின் மலைகளில் கூடிவந்து, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரண்மனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரண்மனைகள்மேலும் கூறுங்கள். அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால் எதிரி வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன்னுடைய பெலத்தை உன்னிலிருந்து அகன்றுபோகச் செய்வான்; அப்பொழுது உன்னுடைய அரண்மனைகள் கொள்ளையிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையோ ஒரு காதின் துண்டையோ சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிப்பதைப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் மக்கள் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மெத்தையின் மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலுடைய பாவங்களுக்காக அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையிலே விழும். மழைகாலத்து வீட்டையும் கோடைக்காலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 3:7-15 பரிசுத்த பைபிள் (TAERV)

எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும், எகிப்துக்கும் போய் இச்செய்தியைக் கூறுங்கள். “சமாரியாவின் மலைகளுக்கு வாருங்கள். நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக் காண்பீர்கள். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது. அந்த ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பொருட்களை எடுத்துத் தங்கள் கோபுரங்களில் ஒளித்து வைத்தார்கள். அவர்கள் போரில் எடுத்தப் பொருட்களால் அவர்களது கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன.” எனவே கர்த்தர் சொல்கிறார்: “ஒரு பகைவன் அந்த நாட்டிற்கு வருவான். அந்தப் பகைவன் உன் பலத்தை எடுத்துப்போடுவான். நீ உயர்ந்த கோபுரங்களில் ஒளித்து வைத்த பொருட்களை அவன் எடுப்பான்.” கர்த்தர் கூறுகிறார், “ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம். மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம். ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான். அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள் அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும். அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள். சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.” என் ஆண்டவரும், சர்வ வல்லமையுள்ள தேவனுமாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார் “யாக்கோபின் குடும்பத்தை (இஸ்ரவேல்) எச்சரிக்கை செய். இஸ்ரவேல் பாவம் செய்தது. நான் அவர்களைத் தங்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் பெத்தேலில் உள்ள பலிபீடங்களையும் அழிப்பேன். பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையில் கிடக்கும். நான் மழைக்கால வீட்டைக் கோடைகால வீட்டோடு அழிப்பேன். தந்தத்தால் ஆன வீடுகள் அழிக்கப்படும். பல வீடுகள் அழிக்கப்படும்” என்று கர்த்தர் கூறுகிறார்.