ஆமோஸ் 4:2-8

ஆமோஸ் 4:2-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார். அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். பெத்தேலுக்குப் போய்த் துரோகம்பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி, புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோயிற்று. இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 4:2-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்: “நிச்சயமாய் ஒரு காலம் வரும். அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும், உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும் தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுவர் வெடிப்புகளின் வழியாக ஓடிப்போவீர்கள். அர்மோன் மலைப் பக்கமாக நீங்கள் இழுத்தெறியப்படுவீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள். கில்காலுக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள். காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்று வருடத்திற்கொரு முறை உங்கள் பத்தில் ஒரு பாகத்தையும் கொண்டுவாருங்கள். புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள். உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி அவற்றைக்குறித்துப் புகழுங்கள், இஸ்ரயேலரே, இவற்றைத் செய்வதற்குத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். “ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும், பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன். அப்படியிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில் நான் வேண்டிய மழையை அனுப்பாமல் விட்டேன். நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்பி, இன்னொரு நகரத்திற்கு அதை அனுப்பாமல் விட்டேன். ஒரு வயலுக்கு மழை பெய்தது. இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்தது. மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும், குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

ஆமோஸ் 4:2-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, யெகோவாகிய ஆண்டவர் உங்களை கொக்கிகளாலும், உங்களுடைய பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார். அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரண்மனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாகப் புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி, புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால் நான் உங்களுடைய பட்டணங்களில் எல்லாம் உங்களுடைய பற்களுக்கு ஓய்வையும், உங்களுடைய இடங்களில் எல்லாம் ஆகாரக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது. இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 4:2-8 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தராகிய ஆண்டவர் வாக்குறுதி கொடுத்தார். அத்துன்பங்கள் உங்களுக்கு வரும் என்று அவர் தமது பரிசுத்தத்தால் வாக்களித்தார். ஜனங்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி உங்களைச் சிறைப்பிடிப்பார்கள். அவர்கள் மீன் தூண்டிலைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பிடிப்பார்கள். உங்கள் நகரம் அழிக்கப்படும். பெண்கள் நகரச்சுவர்களிலுள்ள வெடிப்புகள் வழியே அவசரமாக வெளியேறி பிணக் குவியல்களின் மேல் விழுவார்கள். கர்த்தர் இவற்றை கூறுகிறார். “பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்! கில்காலுக்குப் போய் மேலும் பாவம் செய்யுங்கள். உங்களது பலிகளை காலை நேரத்தில் செலுத்துங்கள். மூன்று நாள் விடுமுறைக்கு உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டு வாருங்கள். புளித்த மாவுள்ள நன்றிக் காணிக்கையைக் கொடுங்கள். ஒவ்வொருவரிடமும் சுயசித்தக் காணிக்கைகளைப்பற்றிக் கூறுங்கள். இஸ்ரவேலே, அவற்றைச் செய்ய நீ விரும்புகிறாய். எனவே போய் அவற்றைச் செய்” கர்த்தர் இவற்றைக் கூறினார். “நான், உங்களை என்னிடம் வரச்செய்ய வேண்டுமென பலவற்றை முயற்சி செய்தேன். நான் நீங்கள் உண்ண எந்த உணவையும் தரவில்லை. உங்கள் நகரங்கள் எதிலும் உண்ண உணவு கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லை” என்று கர்த்தர் கூறினார். “நான் அறுவடைக்கு மூன்று மாதத்திற்கு முன்பு மழையையும் நிறுத்தினேன். எனவே விளைச்சல் விளையவில்லை. பிறகு நான் ஒரு நகரத்தில் மழை பெய்யும்படிச் செய்தேன். ஆனால் அடுத்த நகரில் மழை பெய்யவில்லை. நாட்டின் ஒரு பகுதியில் மழை பெய்தது. ஆனால் நாட்டின் அடுத்தப் பகுதியில் வறட்சி ஏற்பட்டது. எனவே இரண்டு அல்லது மூன்று நகரங்களிலுள்ள ஜனங்கள் அடுத்த நகருக்கு தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றனர். ஆனால் எல்லோருக்கும் அங்கு தண்ணீர் போதுமானதாக இல்லை. இருந்தாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.