ஆமோஸ் 4:9-13

ஆமோஸ் 4:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

ஆமோஸ் 4:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன். நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் தாக்கினேன். உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் எகிப்தில் செய்ததுபோல, உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன். உங்கள் வாலிபரை வாளினால் கொன்றேன். அவர்களுடன் கைப்பற்றப்பட்ட உங்கள் குதிரைகளையும் கொன்றேன்; கூடாரங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் நாசிகளை நிரப்பினேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் சோதோம், கொமோராவை கவிழ்த்துப் போட்டதுபோல், உங்களில் சிலரையும் கவிழ்த்துப் போட்டேன். நீங்கள் நெருப்பினின்று இழுத்தெடுக்கப்பட்ட கொள்ளியைப்போல் இருந்தீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே; இதை நான் செய்யப்போவதால், இஸ்ரயேலே, உன் இறைவனை நீ சந்திக்க ஆயத்தப்படு.” மலைகளை உருவாக்குகிறவரும், காற்றை உண்டாக்குகிறவரும் அவரே, மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே, பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே, சேனைகளின் இறைவனாகிய யெகோவா என்பது அவர் பெயர்.

ஆமோஸ் 4:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நோயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்களுடைய சோலைகளிலும் திராட்சைத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எகிப்திலே உண்டானதற்கு ஒப்பான கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்களுடைய வாலிபர்களை வாளாலே கொன்றேன்; உங்களுடைய குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்களுடைய முகாம்களின் நாற்றத்தை உங்களுடைய நாசிகளிலும் ஏறச்செய்தேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால் இஸ்ரவேலே, இப்படியே உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறதினால் உன்னுடைய தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.

ஆமோஸ் 4:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் உங்கள் விளைச்சலை வெப்பத்தாலும் நோயாலும் மரிக்கும்படிச் செய்தேன். நான் உங்களது தோட்டங்களையும் திராட்சத் தோட்டங்களையும் அழித்தேன். உங்களது அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றன. ஆனாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை” என்று கர்த்தர் கூறினார். “நான் எகிப்திற்குச் செய்ததுபோல உங்களுக்கு எதிராக வியாதிகளை அனுப்பினேன். நான் உங்களது இளைஞர்களை வாள்களால் கொன்றேன். நான் உங்கள் குதிரைகளை எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் பாளயம் பிணங்களால் துர்நாற்றம் வீசும்படி செய்தேன். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை” என்று கர்த்தர் கூறினார். “நான் சோதோமையும் கொமோராவையும் அழித்ததுபோன்று உங்களை அழித்தேன். அந்நகரங்கள் முழுவதுமாக அழிந்தன. நீங்கள் நெருப்பிலிருந்து வெளியே இழுக்கப்பட்ட எரிந்த குச்சியைப் போன்றவர்கள். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை” என்று கர்த்தர் கூறினார். “எனவே இஸ்ரவேலே, நான் இவற்றை உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, உனது தேவனை சந்திக்கத் தயாராக இரு.” நான் யார்? நானே மலைகளைப் படைத்தவர். நான் உங்கள் இருதயங்களையும் உண்டாக்கினவர். நான் ஜனங்களுக்கு எவ்வாறு பேசவேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன். நான் இருளை விடியற் காலையாக மாற்றினேன். நான் பூமியின் மேலுள்ள மலைகைளின் மேல் நடக்கிறேன். நான் யார்? எனது நாமம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர்.