ஆமோஸ் 5:18-27

ஆமோஸ் 5:18-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும். சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும். கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ? உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன். உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். நியாயம் தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது. இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ? நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திரராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே. ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 5:18-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவின் நாளை விரும்புகிற உங்களுக்கு ஐயோ கேடு, யெகோவாவின் நாளை ஏன் விரும்புகிறீர்கள்? அந்த நாள் வெளிச்சமாயிராமல் இருளாயிருக்கும். ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன், கரடியைச் சந்தித்ததுபோல் அது இருக்கும். அவன் தன் வீட்டிற்குள் வந்து சுவரில் கையை ஊன்றியபோது, அவனைப் பாம்பு கடித்ததுபோல் இருக்கும். யெகோவாவின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாய் இருக்குமல்லவோ? ஒளிக்கீற்று எதுவுமின்றி காரிருளாயிருக்குமல்லவோ? உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்; உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை. தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும் நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும், அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும், அவற்றைப் பார்க்கவும் மாட்டேன். உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள். உங்கள் பாடல்களின் இசையை நான் கேட்கமாட்டேன். அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும். நீதி என்றும் வற்றாத நீரோடையைப்போல் ஓடட்டும். இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாய் நீங்கள் எனக்கு பலிகளையும், காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ? ஆனால் நீங்களோ, உங்கள் அரசனின் விக்கிரகத் தேரைத் தூக்கிச் சுமந்தீர்கள். உங்களுக்கென செய்த விக்கிரகங்களின் கூடாரத்தையும், நட்சத்திரத் தெய்வங்களையும் சுமந்துகொண்டு போனீர்கள். ஆதலால் நான் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் நாடுகடத்துவேன் என்று, சேனைகளின் இறைவன் என்னும் பெயருடைய யெகோவா சொல்கிறார்.

ஆமோஸ் 5:18-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ, அதினால் உங்களுக்கு என்ன உண்டு? யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருளாக இருக்கும். சிங்கத்திற்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டிற்குள்ளே வந்து சுவரின்மேல் தன்னுடைய கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும். யெகோவாவுடைய நாள் வெளிச்சமாக இல்லாமல், இருளும் பிரகாசமற்ற காரிருளுமாக இருக்குமல்லவோ? உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. உங்களுடைய தகனபலிகளையும் உணவுபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்களுடைய மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன். உன் பாடல்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரட்டும். இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருடங்கள்வரையில் பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ? நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய சிலைகளின் பல்லக்கையும் சுமந்துகொண்டு வந்தீர்களே. ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோகச்செய்வேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 5:18-27 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களில் சிலர் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய நாளைப்பார்க்க விரும்புகிறீர்கள். நீங்கள் அந்நாளை ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்? கர்த்தருடைய அந்தச் சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தையே கொண்டு வரும். நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன், கரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள். நீங்கள், ஒருவன் பாதுகாப்பிற்காகத் தன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது. பாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள். கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும். அந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும். அந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத அந்தகாரமான நாளாயிருக்கும். “நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன். நான் அவற்றை ஏற்கமாட்டேன். நான் உங்கள் ஆன்மீகக் கூட்டங்களால் மகிழவில்லை. நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் தரும் சமாதான பலியில் உள்ள கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூடமாட்டேன். நீங்கள் இங்கிருந்து உங்கள் இரைச்சலான பாடல்களை அகற்றுங்கள். நான் உங்கள் வீணைகளில் வரும் இசையைக் கேட்கமாட்டேன். நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும். நன்மையானது ஓடையைப் போன்று உங்கள் நாட்டில் வற்றாமல் ஓடட்டும். இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாகக் கொடுத்தீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் ராஜாவாகிய சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள். நீங்களாக நட்சத்திரத்தை உங்கள் தெய்வமாக்கினீர்கள். எனவே நான் உங்களை தமஸ்குவுக்கு அப்பால் சிறையாகச் செல்லச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவன்.