ஆமோஸ் 6:1-6

ஆமோஸ் 6:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ! நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப்போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள். தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து, தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.

ஆமோஸ் 6:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சீயோனில் உல்லாசமாய் இருக்கிறவர்களே, சமாரியா மலையில் பாதுகாப்பாய் இருக்கிறதாக எண்ணுகிறவர்களே, இஸ்ரயேல் மக்கள் தேடிவரும் முதன்மையான நாட்டின் உயர்குடி மனிதரே உங்களுக்கு ஐயோ கேடு, கல்னே பட்டணத்துக்குப் போய் அதைப் பாருங்கள், அங்கிருந்து ஆமாத் எனும் பெருநகரத்திற்குப் போங்கள். அதன்பின் பெலிஸ்தியாவிலுள்ள காத்திற்குச் செல்லுங்கள். உங்கள் இரு அரசுகளைவிட அவை சிறந்தவையோ? அவர்களுடைய நாடு உங்கள் நாட்டைவிடப் பெரியதோ? அவை எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் தீமையின் நாளைப் பற்றி எண்ணாதிருக்கிறீர்கள். அதனால் வன்முறை ஆட்சியை அருகில் கொண்டுவருகிறீர்கள். நீங்களோ தந்தம் பதித்த கட்டில்களில் படுக்கிறீர்கள். பஞ்சணை இருக்கைகளில் சொகுசாய் சாய்ந்திருக்கிறீர்கள். மந்தையில் சிறந்த ஆட்டுக்குட்டிகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்து விருந்து கொண்டாடுகிறீர்கள். தாவீதைப்போல் உங்கள் யாழ்களை மீட்டுகிறீர்கள். புதிய இசைக்கருவிகளை உண்டாக்கிக் கொள்கிறீர்கள். பெரிய கிண்ணங்களில் நிறைய திராட்சை இரசம் குடிக்கிறீர்கள், சிறந்த நறுமண தைலங்களைப் பூசிக்கொள்கிறீர்கள்; ஆயினும் யோசேப்பின் மக்களுக்கு வரப்போகும் அழிவிற்காக நீங்கள் துக்கப்படுகிறதில்லை.

ஆமோஸ் 6:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சீயோனிலே கவலையற்றிருப்பவர்களும் சமாரியாவின் மலையை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், தேசத்தின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ, நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள். தீங்குநாள் தூரமென்று எண்ணிக் கொடுமையின் இருக்கை கிட்டவரும்படிச் செய்து, தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் சவுக்கியமாகப் படுத்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள்.

ஆமோஸ் 6:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

சீயோனில் வாழ்க்கையை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு சமாரியா மலையில் மிகவும் பாதுகாப்பு இருப்பதாக எண்ணும் ஜனங்களே, உங்களுக்கு மிகுந்த கேடு வரும். நீங்கள் மிக முக்கியமான நாட்டின் முக்கியமான தலைவர்கள். “இஸ்ரவேல் வீட்டார்” உங்களிடம் ஆலோசனைக்காக வருகிறார்கள். கல்னேவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கிருந்து ஆமாத் என்னும் பெருநகருக்குப் போங்கள். பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள். நீங்கள் இந்த இராஜ்யங்களை விடச் சிறந்தவர்களா? இல்லை. அவர்கள் நாடுகள் உங்கள் நாட்டைவிட பெரியவையா? நீங்கள் அந்தத் தண்டனை தரும் நாளை நோக்கி விரைகிறீர்கள். அந்த வன்முறை ஆட்சியை மிகவும் பக்கத்தில் கொண்டு வருகிறீர்கள். ஆனால் இப்போது, நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறீர்கள். நீங்கள் தந்தக் கட்டில்களில் படுக்கிறீர்கள். நீங்கள் மஞ்சங்களில் நீட்டி நிமிர்ந்து கிடக்கிறீர்கள். நீங்கள் மந்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் ஆட்டுக்குட்டிகளையும் மாட்டுத் தொழுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுக் குட்டிகளையும் உண்கிறீர்கள். நீங்கள் உங்கள் வீணைகளை மீட்டுகிறீர்கள். தாவீதைப் போன்று உங்கள் இசைக் கருவிகளில் பயிற்சி செய்கிறீர்கள். நீங்கள் அழகான கிண்ணங்களில் மது குடிக்கிறீர்கள். நீங்கள் சிறந்த மணப் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள். யோசேப்பின் குடும்பம் அழிக்கப்படுவதைக் கண்டு கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்.