ஆமோஸ் 6:7-14

ஆமோஸ் 6:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும். நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான். இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார். கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள். நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக்கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழி தொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 6:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆதலால் நாடுகடத்தப்படும்போது, நீங்களே முதலாவதாகக் கொண்டுபோகப்படுவீர்கள். உங்கள் விருந்தும், களியாட்டமும் முடிவுக்கு வரும். ஆண்டவராகிய யெகோவா தமது பெயரில் ஆணையிட்டிருக்கிறார்; சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார். யாக்கோபின் அகந்தையை நான் அருவருக்கிறேன். அவனுடைய கோட்டைகளையும் வெறுக்கிறேன். ஆதலால் அவர்களுடைய சமாரியா நகரத்தையும், அதிலுள்ள அனைத்தையும் பகைவனிடம் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது ஒரு குடும்பத்தில் பத்துபேர் எஞ்சியிருந்தால், அவர்களும் சாவார்கள். உடல்களை எரிக்கவேண்டிய உறவினன் ஒருவன் அவற்றை எடுத்துச் செல்வதற்கு வந்து, அங்கு மறைந்திருக்கிற எவனையாவது பார்த்து, “இன்னும் உன்னுடன் வேறு யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்கும்போது அவன், “இல்லை” என்பான். மேலும் அவன், “சத்தமிடாதே! நாம் யெகோவாவின் பெயரை வாயால் உச்சரிக்கக் கூடாது” என்பான். ஏனென்றால், யெகோவா கட்டளையிட்டிருக்கிறார். அவர் பெரிய வீட்டைத் துண்டுகளாகவும் சிறிய வீட்டைத் துகள்களாவும் நொறுக்குவார். செங்குத்தான பாறைகளில் குதிரைகள் ஓடுமோ? அங்கே எருதுகளால் ஒருவன் உழுவானோ? ஆயினும் நீங்களோ நீதியை நஞ்சாகவும், நீதியின் பலனைக் கசப்பாகவும் மாற்றினீர்கள். லோதேபார் என்ற இடத்தைக் கைப்பற்றி மகிழ்கிறவர்களே, “எங்கள் சொந்த வலிமையினாலே கர்னாயீமை பிடித்தோம்” என்று சொல்கிறவர்களே, நீங்களே இப்படிச் செய்தீர்கள்? ஆனால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, “இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களை எதிர்க்க ஒரு நாட்டைத் தூண்டிவிடுவேன். அவர்கள் ஆமாத்தின் நுழைவாசல்முதல், அரபா பள்ளத்தாக்குவரை உங்களை ஒடுக்குவார்கள்” என்கிறார்.

ஆமோஸ் 6:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகையால் அவர்கள் சிறையிருப்பிற்குப் போகிறவர்களின் முதல் வரிசையிலே போவார்கள்; இப்படியே உல்லாசமாகப் படுத்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும். நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரண்மனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாக இருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான். இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார். கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கனியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள். நாங்கள் எங்களுடைய லோதேபார் பட்டணத்தினாலே எங்களுக்குக் கர்னாயிம் பட்டணத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு தேசத்தை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் நுழைகிற வழி தொடங்கிச் சமமான நாட்டின் ஆறுவரைக்கும் உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 6:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த ஜனங்கள் இப்பொழுது மஞ்சங்களில் வசதியாகப் படுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நல்ல நேரங்கள் முடிவடையும். அவர்கள் அந்நிய நாட்டுக்குக் கைதிகளைப்போன்று கொண்டுசெல்லப்படுவார்கள். எடுத்துக்கெள்ளப்படுகிறவர்களில் இவர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது சொந்த நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி கொடுத்தார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இந்த வாக்குறுதியை அளித்தார். “நான், யாக்கோபு பெருமைக்கொள்கிற காரியங்களை வெறுக்கிறேன். நான் அவனது பலமுள்ள கோபுரங்களை வெறுக்கிறேன். எனவே நான் பகைவன் இந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள விடுவேன்.” அப்போது, சில வீடுகளில் பத்துபேர் உயிர் பிழைக்கலாம், ஆனால் அவர்களும் மரித்துப்போவார்கள். ஒருவன் மரிக்கும் போது ஒரு உறவினன் வந்து உடலைப் பெற்று வெளியே எடுத்துக்கொண்டு எரிக்க வருவான். உறவினன், எலும்பை வெளியே கொண்டுபோக வருவான். வீட்டின் உட்புறத்திலே மறைந்திருக்கிற யாரையாவது அழைப்பான். “உன்னோடு வேறு மரித்த உடல்கள் உள்ளனவா?” என்று கேட்பான். அந்த மனிதன், “இல்லை” என்று பதில் சொல்லுவான். ஆனால் அந்த உறவினன், “நீ மௌனமாயிரு! நாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லக் கூடாது” என்று சொல்வான். பார், தேவனாகிய கர்த்தர் கட்டளை கொடுப்பார். பெரிய வீடுகள் துண்டுகளாக உடைக்கப்படும். சிறிய வீடுகள் சிறிய துண்டுகளாக உடைக்கப்படும். ஜனங்கள் குதிரைகளைத் தளர்ந்த பாறைகளின் மேல் ஓடும்படிச் செய்வார்களா? இல்லை. ஜனங்கள் பசுக்களைப் உழுவதற்கு பயன்படுத்துவார்களா? இல்லை. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தலை கீழாகத் திருப்பினீர்கள். நீங்கள் நன்மையையும் நேர்மையையும் விஷமாக மாற்றினீர்கள். நீங்கள் லோடேபரில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நீங்கள், “நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் கர்ணாயீமை எடுத்துக் கொண்டோம்” என்று சொல்கிறீர்கள். “ஆனால் இஸ்ரவேலே, நான் உங்களுக்கு எதிராக ஒரு நாட்டைக் கொண்டு வருவேன். அந்நாடு உன் முழு நாட்டுக்கும் அது லெபோ ஆமாத் முதல் அரபா ஓடைவரை துன்பங்களைக் கொண்டுவரும்.” சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறினார்.