ஆமோஸ் 7:12-17

ஆமோஸ் 7:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான். ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார். இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே. இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஆமோஸ் 7:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் அமத்சியா ஆமோஸிடம், “தரிசனக்காரனே நாட்டைவிட்டு வெளியே போ; யூதா நாட்டிற்குத் திரும்பிப்போ; அங்கே உழைத்துச் சாப்பிடு; அங்கேயே உனது இறைவாக்கையும் சொல். இனிமேல் பெத்தேலில் இறைவாக்கைச் சொல்லாதே. ஏனெனில் இது அரசனின் பரிசுத்த வழிபாட்டு இடமும், அரசுக்குரிய ஆலயத்தின் இருப்பிடமுமாய் இருக்கிறது” என்றான். அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல; இறைவாக்கினனின் மகனும் அல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்தி மரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன். ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரனான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்,’ என்றார். ஆகவே இப்பொழுதும் நீ யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள், “ ‘நீ இஸ்ரயேலருக்கு விரோதமாக இறைவாக்கு சொல்லாதே, ஈசாக்கின் வீட்டிற்கு விரோதமாய் பிரசங்கிப்பதை நிறுத்து’ என்கிறாயே. “ஆதலால் யெகோவா சொல்வது இதுவே: “ ‘உன் மனைவி இந்த நகரத்தில் வேசியாவாள், உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள். உன் நாடும் அளக்கப்பட்டு பங்கிடப்படும், நீயும் இறைவனை அறியாதவர்களின் நாட்டிலே சாவாய். நிச்சயமாகவே இஸ்ரயேலர் நாடுகடத்தப்படுவார்கள். தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்.’ ”

ஆமோஸ் 7:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான். ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார். இப்போதும், நீ யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே. இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

ஆமோஸ் 7:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

அமத்சியாவும் ஆமோஸிடம் சொன்னான்: “தீர்க்கதரிசியே போ, யூதாவுக்குப் போய் அங்கு சாப்பிடு. அங்கே உனது பிரச்சாரத்தைச் செய். ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!” பிறகு ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதில் சொன்னான். “நான் தொழில்ரீதியான தீர்க்கதரிசி இல்லை. நான் தீர்க்கதரிசியின் குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் மந்தையைப் பாதுகாக்கிறவன். நான் காட்டத்தி மரங்களைக் கவனித்து வருபவன். நான் ஒரு மேய்ப்பன், நான் மந்தையின் பின்னால் போகிறபோது கர்த்தர் என்னை அழைத்தார். கர்த்தர், ‘போ, எனது இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறு’ என்று என்னிடம் சென்னார். எனவே கர்த்தருடைய செய்தியைக் கேள், ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம். ஈசாக்கின் குடும்பத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாதே’ என்று நீ சொல்கிறாய். ஆனால் கர்த்தர் கூறுகிறார்: ‘உன் மனைவி நகரத்தில் விபச்சாரி ஆவாள். உனது குமாரர்களும் குமாரத்திகளும் வாளால் கொல்லப்படுவார்கள். மற்ற ஜனங்கள் உனது நாட்டை எடுத்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். நீ அயல் நாட்டில் மரணமடைவாய். இஸ்ரவேல் ஜனங்கள் நிச்சயமாக இந்த நாட்டை விட்டுச் சிறையெடுக்கப்படுவார்கள்.’”