ஆமோஸ் 9:2-15

ஆமோஸ் 9:2-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்; அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன். அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும். அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை. தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள். ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு, அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஆமோஸ் 9:2-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும், நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன். என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும் அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன். தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன். “நன்மைக்காக அல்ல, தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.” யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார், அது உருகுகிறது, அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்; முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது, பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது. யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார், பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்; கடல்நீரை அழைத்து பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார். யெகோவா என்பது அவர் பெயர். இஸ்ரயேலின் மக்களே, நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப்போல் அல்லவோ இருக்கிறீர்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும், சீரியரை கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? “நிச்சயமாக ஆண்டவராகிய யெகோவாவின் கண்கள் பாவமுள்ள அரசின்மேல் இருக்கின்றன. பூமியின்மேல் இராதபடி அந்த அரசை அழிப்பேன். எனினும் யாக்கோபின் குடும்பத்தை நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நானே கட்டளையிட்டு, தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பதுபோல, எல்லா நாடுகளுக்குள்ளேயும் இஸ்ரயேல் குடும்பத்தை அரித்தெடுப்பேன். ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது. என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும், பேராபத்து எங்களை மேற்கொள்ளவோ சந்திக்கவோ மாட்டாது என்று சொல்கின்ற எல்லோரும் வாளினால் சாவார்கள். “அந்த நாளில் “நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் அமைப்பேன். நான் அதன் உடைந்த இடங்களை பழுதுபார்த்து, அதன் பாழிடங்களை சீரமைப்பேன். முன் இருந்ததுபோல அதைக் கட்டுவேன், அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும், என் பெயரைத் தரித்திருக்கும் எல்லா நாடுகளையும் உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இவற்றைச் செயற்படுத்தப்போகிற யெகோவா அறிவிக்கிறார். “நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது அறுவடை செய்கிறவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்; நடுகிறவனை திராட்சைப் பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான். மலைகளிலிருந்து புது திராட்சை இரசம் வடிந்து எல்லாக் குன்றுகளின்மேலும் ஓடும், நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன். “அவர்கள் பாழடைந்த பட்டணங்களை திரும்பக் கட்டி, அவற்றில் குடியிருந்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து, இனியொருபோதும் வேரோடு பிடுங்கப்படமாட்டார்கள் என்று” உங்கள் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்.

ஆமோஸ் 9:2-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன். அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். சேனைகளின் யெகோவாகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகள் எல்லோரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாகப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும். அவர் வானத்தில் தமது மேல் அறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழ் அறைகளை அஸ்திபாரப்படுத்தி, கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம். இஸ்ரவேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியர்களின் மக்களைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தர்களைக் கப்தோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? இதோ, யெகோவாகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை. தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிகள் எல்லோரும் வாளால் சாவார்கள். ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக, அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார். இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று யெகோவா சொல்லுகிறார். என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள். அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார்.

ஆமோஸ் 9:2-15 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் தரையில் ஆழமாகத் தோண்டிப் போனாலும் நான் அவர்களை அங்கிருந்து வெளியே எடுப்பேன். அவர்கள் வானம் வரை ஏறிப்போனாலும் நான் அவர்களை அங்கிருந்து தரைக்குக் கொண்டு வருவேன். அவர்கள் கர்மேல் மலையின் உச்சியில் ஒளிந்தாலும் நான் அவர்களை அங்கே காண்பேன். நான் அவர்களை அங்கிருந்து எடுப்பேன். அவர்கள் என்னிடமிருந்து ஓடிக் கடலின் ஆழத்திற்குப் போனாலும் நான் பாம்புக்கு கட்டளையிடுவேன், அது அவர்களைக் கடிக்கும். அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பகைவர்களால் கொண்டு செல்லப்பட்டால் நான் வாளுக்குக் கட்டளையிடுவேன். அது அங்கே அவர்களைக் கொல்லும். ஆம் நான் அவர்களைக் கவனிப்பேன். ஆனால் நான் அவர்களுக்குத் துன்பம் தரும் வழிகளைக் கொடுப்பதற்கே பார்ப்பேனேயல்லாமல் நன்மையைத்தருவதற்கல்ல” என்றார். எனது சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் பூமியைத் தொட அது உருகும். பிறகு நாட்டில் உள்ள ஜனங்கள் எல்லோரும் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுவார்கள். நாடானது எகிப்தின் நைல் நதி போன்று உயர்ந்து தாழும். கர்த்தர் ஆகாயங்களுக்கு மேல் தனது உயர்ந்த அறைகளைக் கட்டினார். அவர் பூமிக்குமேல் தன் ஆகாயத்தை வைத்தார். அவர் கடலின் தண்ணீரை அழைத்து பூமியின் மேல் மழையாக அதனைக் கொட்டுகிறார். யேகோவா என்பது அவரது நாமம். கர்த்தர் இதனைச் சொல்கிறார்: “இஸ்ரவேலே நீ எனக்கு எத்தியோப்பியர்களைப் போன்றிருக்கிறாய். நான் இஸ்ரவேலரை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன். நான் கப்தோரிலிருந்து பெலிஸ்தியரைக் கொண்டு வந்தேன். கீரிலிருந்து சீரியரைக்கொண்டு வந்தேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் பாவமுள்ள இராஜ்யத்தை (இஸ்ரவேல்) கவனித்துக் கொண்டிருக்கிறார். கர்த்தர் சொன்னார்: “பூமியின் முகத்திலிருந்து இஸ்ரவேலர்களைத் துடைப்பேன். ஆனால் நான் யாக்கோபின் குடும்பத்தை முழுமையாக அழிக்கமாட்டேன். நான் இஸ்ரவேல் நாட்டை அழிப்பதற்குக் கட்டளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் இஸ்ரவேல் ஜனங்களை அனைத்து நாடுகளிலும் சிதறவைப்பேன். ஆனால் இது ஒருவன் மாவை ஜல்லடையில் சலிப்பது போன்றது. அவன் ஜல்லடையில் சலிக்கும்போது, நல்ல மாவு கீழே விழுந்துவிடும், ஆனால் கோதுமை உமி பிடிபடும். யாக்கோபின் குடும்பத்திற்கும் இவ்விதமாகவே இருக்கும். “என் ஜனங்களிலுள்ள பாவிகள், ‘நமக்கு எந்தக் கேடும் ஏற்படாது’ என்கிறார்கள். ஆனால் அந்த ஜனங்கள் அனைவரும் வாளால் கொல்லப்படுவார்கள்.” “தாவீதின் கூடாரம் விழுந்திருக்கிறது. ஆனால் அந்நேரத்தில், நான் மீண்டும் அவன் கூடாரத்தை அமைப்பேன். நான் சுவர்களில் உள்ள துவாரங்களைச் சரிசெய்வேன். நான் அழிந்துபோன கட்டிடங்களை மீண்டும் கட்டுவேன். நான் அவற்றை முன்பு இருந்தது போன்று கட்டுவேன். பிறகு ஏதோமில் உயிருடன் விடப்பட்டவர்களும், என் நாமத்தால் அழைக்கப்பட்ட எல்லோரும் கர்த்தரிடம் உதவிக்காக வருவார்கள்.” கர்த்தர் அவற்றைச் சொன்னார், அவர் அவை நடக்கும்படிச் செய்வார். கர்த்தர் கூறுகிறார்: “நிலத்தை உழுகிறவன், அறுவடை செய்பவனை முந்திச் செல்லும் காலம் வரும். திராட்சை ஆலையை வைத்திருப்பவன் திராட்சை பயிரிட்டு பழங்களைப் பறிப்பவனைத் தேடிவரும் காலம் வரும். இனிய மதுவானது குன்றுகளிலும் மலைகளிலும் கொட்டும். இஸ்ரவேலே நான் என் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வருவேன். அவர்கள் அழிந்த நகரங்களை மீண்டும் கட்டுவார்கள். அவர்கள் அந்நகரங்களில் வாழ்வார்கள். அவர்கள் திராட்சைகளைப் பயிரிடுவார்கள். அவர்கள் அவற்றிலிருந்து வரும் மதுவை குடிப்பார்கள். அவர்கள் தோட்டங்களைப் பயிரிடுவார்கள். அவர்கள் அவற்றிலுள்ள அறுவடையை உண்பார்கள். நான் என் ஜனங்களை அவர்கள் நிலத்தில் நாட்டுவேன். அவர்கள் மீண்டும் பிடுங்கப்படமாட்டார்கள். அவர்கள் நான் கொடுத்த நாட்டிலேயே இருப்பார்கள்” என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்.