கொலோசெயர் 1:15-20

கொலோசெயர் 1:15-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

கொலோசெயர் 1:15-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கண்ணுக்குத் தெரியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற்பேறானவர் இவரே. இவர் மூலமே எல்லாம் படைக்கப்பட்டன, காணப்படுகிறவைகளோ, காணப்படாதவைகளோ, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாம் இவர் மூலமே படைக்கப்பட்டன. அரியணைகளோ, வல்லமைகளோ, ஆளுகிறவர்களோ, அதிகாரங்களோ எல்லாமே இவராலேயே, இவருக்கென்றே படைக்கப்பட்டன. இவரே எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருக்கிறார். எல்லாம் அவரோடிணைந்து நிலைநிற்கிறது. இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையாயிருக்கிறார். இவரே அதன் ஆரம்பமும் இறந்தவர்களிடையே இருந்து முதலாவதாய் உயிருடன் எழுந்தவரும் ஆவார். இதனால் எல்லாவற்றிலும் இவருக்கே முதன்மை இருக்கிறது. இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார். கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார்.

கொலோசெயர் 1:15-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர். எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.

கொலோசெயர் 1:15-20 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவராலும் தேவனைக் காண இயலாது. ஆனால் இயேசு தேவனைப் போன்றவர். படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர். பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை. அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள், அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை. எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார். அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன. கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்). எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன. அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர். கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது. பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும் கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார். சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.