தானியேல் 1:1-9

தானியேல் 1:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவின் அரசன் யோயாக்கீம் ஆட்சி செய்த மூன்றாம் வருடத்தில், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டான். அப்பொழுது யெகோவா, யூதாவின் அரசன் யோயாக்கீமை, இறைவனின் ஆலயத்திலுள்ள சிலபொருட்களுடன் நேபுகாத்நேச்சாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார். அவன் இவற்றை பாபிலோனிலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துக்கொண்டு போனான். அவற்றைத் தனது தெய்வத்துக்குரிய திரவிய களஞ்சியத்தில் வைத்தான். அதன்பின் அரசன் தன் அரண்மனை அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாஸிடம், “நீ இஸ்ரயேலின் அரச குடும்பத்திலிருந்தும், பெருங்குடிமக்களிலிருந்தும் சிலரைத் தெரிவுசெய்துகொண்டு வா” என அவனுக்கு உத்தரவிட்டான். அவர்கள் எவ்வித சரீர குறைபாடு அற்றவர்களும், வசீகரமுடையவர்களுமாயிருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் எல்லா விதமான கல்வியையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களும், அறிவில் சிறந்தவர்களும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலுடையவர்களுமாயிருக்க வேண்டும். அரண்மனையில் பணிசெய்யத் தகுதியுடையவர்களுமான வாலிபராய் இருக்கவேண்டும். அவன் அவர்களுக்குப் பாபிலோனிய மொழியையும், இலக்கியங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கூறினான். அத்துடன், அரசனுடைய பந்தியில் தான் சாப்பிடும் உணவிலும், குடிக்கும் திராட்சை இரசத்திலும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கென அரசன் ஒதுக்கிக் கொடுப்பான். இவ்வாறு அவர்கள், மூன்று வருடம் பயிற்சி பெறவேண்டும். பின்னர் அவர்கள் அரச பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கட்டளையிட்டான். அவர்களில் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோரும் இருந்தார்கள். பிரதம அதிகாரி தானியேலுக்கு, பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு, சாத்ராக் என்றும், மீஷாயேலுக்கு, மேஷாக் என்றும், அசரியாவுக்கு, ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்களைக் கொடுத்தான். ஆனால் தானியேலோ, அரச உணவினாலும், திராட்சை இரசத்தினாலும் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாதென தன் மனதில் உறுதி செய்திருந்தான். அவ்வாறே தன்னைக் கறைப்படுத்தாதிருக்கும்படி, பிரதம அதிகாரியிடம் அனுமதியும் கேட்டான். அப்பொழுது பிரதம அதிகாரி தானியேலுக்குத் தயவும், அனுதாபமும் காட்டும்படி இறைவன் செய்தார்.

தானியேல் 1:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்து, அதை முற்றுகையிட்டான். அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தெய்வத்தின் கருவூலத்திற்குள் வைத்தான். அப்பொழுது இஸ்ரவேல் மக்களுக்குள்ளே ராஜவம்சத்தார்களிலும் உயர்குடிமக்களிலும் எந்தவொரு குறைபாடும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணர்களும், ராஜாவின் அரண்மனையிலே வேலைசெய்யத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபர்களைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் மொழியையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கட்டளையிட்டான். ராஜா, தான் சாப்பிடும் உணவிலேயும் தான் குடிக்கும் திராட்சைரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருடங்கள் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவிற்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான். அவர்களுக்குள் யூதா மக்களாகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். அதிகாரிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவிற்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவிற்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் ராஜா குறித்திருக்கிற உணவினாலும் அவர் குடிக்கும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்செய்துகொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி அதிகாரிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். தேவன் தானியேலுக்கு அதிகாரிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.

தானியேல் 1:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

நேபுகாத்நேச்சார் பாபிலோனின் ராஜாவாக இருந்தான். நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சார் அவனது படையுடன் எருசலேமை முற்றுகையிட்டான். யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் இது நடந்தது. கர்த்தர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை, நேபுகாத்நேச்சார் தோற்கடிக்கும்படி அனுமதித்தார். தேவனுடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் அனைத்துப் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டான். நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை அவனது விக்கிரக தெய்வங்களின் ஆலயத்தில் வைத்தான். பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அஸ்பேனாஸ் என்பவனுக்கு ஒரு கட்டளை கொடுத்தான். (அஸ்பேனாஸ், ராஜாவுக்குப் பணிவிடை செய்யும் அலிகளில் மிக முக்கியமான தலைவன்). ராஜா, அஸ்பேனாசிடம் அவனது வீட்டிற்கு சில யூதர்களை அழைத்துவரும்படி சொன்னான். நேபுகாத்நேச்சார் முக்கியமான குடும்பங்களிலிருந்தும் இஸ்ரவேல் அரசகுடும்பங்களிலிருந்தும், யூதர்களை விரும்பினான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஆரோக்கியமான இளம் யூதர்களை மட்டுமே விரும்பினான். தம் உடம்பில் தழும்போ, காயமோ, குறைபாடுகளோ இல்லாத இளைஞர்களை ராஜா விரும்பினான். ராஜா அழகான சுறுசுறுப்பான இளைஞர்களை விரும்பினான். இளைஞர்களில் எல்லாவற்றையும் எளிதாகவும், வேகமாகவும், கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவர்களை ராஜா விரும்பினான். ராஜா, தன் வீட்டில் வேலை செய்யத் தகுதியுள்ள இளைஞர்களை விரும்பினான். ராஜா அஸ்பேனாசிடம், அந்த இஸ்ரவேல் இளைஞர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும், மொழியையும் கற்றுக்கொடுக்கும்படி கூறினான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உணவையும் திராட்சைரசத்தையும் இளைஞர்களுக்குக் கொடுத்தான். அது ராஜா உண்ணும் உணவின் தரத்தில் இருந்தது. ராஜா இஸ்ரவேலிலிருந்து கொண்டுவரப்பட்ட இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற வேண்டும் என விரும்பினான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் பாபிலோன் ராஜாவின் பணியாட்களாக இருக்கவேண்டும். அந்த இளைஞர்களுள் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். இந்த இளைஞர்களெல்லாம் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அஸ்பேனாஸ் அந்த இளைஞர்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தான். தானியேலுக்குப் பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்குச் சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்கள் கொடுக்கப்பட்டன. தானியேல் ராஜாவின் வளமான உணவையும், திராட்சைரசத்தையும் உண்ண விரும்பவில்லை. தானியேல் அந்த உணவினாலும் திராட்சைரசத்தாலும் தன்னைத்தானே அசுத்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாசிடம் தன்னைத் தானே அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான். தேவன், அஸ்பேனாஸ் தானியேலிடம் தயவும் இரக்கமும் கொள்ளும்படி செய்தார்.

தானியேல் 1:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கைபோட்டான். அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான். அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.