தானியேல் 10:1-6

தானியேல் 10:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான். அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை. முதலாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

தானியேல் 10:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பெர்சியாவின் அரசன் கோரேஸின் மூன்றாவது வருடத்திலே, “பெல்தெஷாத்சார்” என அழைக்கப்படும் தானியேலுக்கு ஒரு வெளிப்படுத்துதல் கொடுக்கப்பட்டது. அச்செய்தி உண்மையானது. அது ஒரு பெரிய யுத்தத்தைப்பற்றியது. அந்த செய்தியைப்பற்றிய விளக்கம் ஒரு தரிசனத்தின் மூலம் அவனுக்குக் கிடைத்தது. தானியேலாகிய நான் அந்நாட்களில் மூன்று வாரங்களுக்குத் துக்கங்கொண்டாடினேன். மூன்று வாரங்கள் முடியும் நாள்வரை நான் சிறந்த உணவைச் சாப்பிடவில்லை. இறைச்சியையோ, திராட்சை இரசத்தையோ என் உதடுகள் தொடவும் இல்லை. எனது உடலில் எண்ணெய் தேய்க்கவும் இல்லை. முதலாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், பெரிய ஆறான இதெக்கேல் ஆற்றின் கரையில் நான் நின்றேன். நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, எனக்கு முன்பாக மென்பட்டு உடை உடுத்தி, இடுப்பிலே ஊப்பாசின் சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட இடைக்கச்சையைக் கட்டிய ஒருவர் நின்றார். அவரது உடல் பத்மராகக் கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப்போலிருந்தது. அவரது கண்கள் சுடர் விட்டெரியும் பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரல் மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது.

தானியேல் 10:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் மாபெரும் போருக்குரியதுமாக இருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் அர்த்தத்தை அறிந்துகொண்டான். அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரம்முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை. முதலாம் மாதம் இருபத்துநான்காம்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கும்போது, சணல்உடை அணிந்து, தமது இடுப்பில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் கண்டேன். அவருடைய உடல் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் மக்கள்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

தானியேல் 10:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

கோரேசு பெர்சியாவின் ராஜா. கோரேசின் மூன்றாவது ஆட்சியாண்டில், தானியேல் இவற்றைக் கற்றுக்கொண்டான். (தானியேலின் இன்னொரு பெயர் பெல்தெஷாத்சார்). இவை உண்மையானவை, ஆனால் இவை புரிந்துகொள்வதற்குக் கடினமானது. ஆனால் தானியேல் இவற்றைப் புரிந்துகொண்டான். இவையெல்லாம் அவனுக்கு ஒரு தரிசனத்தில் விளக்கப்பட்டது. தானியேல் சொல்கிறதாவது, “அந்தக் காலத்தில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களுக்குத் துக்கமாக இருந்தேன். அந்த மூன்று வாரங்களில் நான் எவ்வித ருசிகரமான உணவையும் உண்ணவில்லை. நான் எவ்வித இறைச்சியையும் உண்ணவில்லை. நான் எவ்வித திராட்சைரசத்தையும் குடிக்கவில்லை. நான் என் தலையில் எவ்வித எண்ணெயையும் தடவவில்லை. நான் இவ்விதச் செயல்கள் எவற்றையும் மூன்று வாரங்களுக்குச் செய்யவில்லை.” அந்த ஆண்டின் முதல் மாதத்தின் 28வது நாளில் நான் இதெக்கேல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஏறிட்டுப் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மெல்லிய சணல் ஆடை அணிந்திருந்தார். அவரது இடுப்பில் சுத்தமான தங்கக் கச்சையைக் கட்டியிருந்தார். அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது.