தானியேல் 10:15-21

தானியேல் 10:15-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன், அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என்வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன். ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன். அப்பொழுது மனுஷரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி, பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன். அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.

தானியேல் 10:15-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவன் என்னிடம் சொல்லும்போது, நான் பேச முடியாதவனாய் முகங்குப்புற விழுந்து வணங்கினேன். உடனே மனிதனைப் போன்ற ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். அப்பொழுது நான் என் வாயைத் திறந்து பேசத் தொடங்கினேன். நான் எனக்குமுன் நின்றவரைப் பார்த்து, “ஐயா, இந்தத் தரிசனத்தால் நான் வேதனையில் மூழ்கி, எதுவும் செய்யமுடியாதவனாய் இருக்கிறேன். ஐயா, உமது அடியவனாகிய நான் உம்மோடு எப்படிப் பேசலாம்? எனக்குப் பெலன் இல்லை. என்னால் மூச்சுவிடவும் முடியவில்லை என்றேன்.” திரும்பவும் மனிதனைப்போல் காணப்பட்ட அவர் என்னைத் தொட்டு எனக்குப் பெலன்தந்தார். “மிக மதிப்பிற்குரிய மனிதனே, பயப்படாதே. உன்னுடன் சமாதானம் இருப்பதாக. இப்பொழுது திடன்கொண்டு தைரியமாயிரு என்றார்.” என்னுடன் அவர் அப்படிப் பேசியபோது, நான் பெலன்கொண்டு, “பேசும் ஐயா, நீர் எனக்கு பெலனைக் கொடுத்திருக்கிறீர்” என்று சொன்னேன். தொடர்ந்து அவர் என்னிடம், “நான் ஏன் இங்கு வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் மிக விரைவாக பெர்சிய இளவரசனுக்கு எதிராகத் திரும்பவும் சண்டைக்குப் போகப்போகிறேன். நான் போகிறபோது கிரேக்க இளவரசனும் என்னை எதிர்த்து வருவான். ஆனால் முதலில் நான் உனக்கு உண்மையின் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதைச் சொல்கிறேன். உங்கள் இளவரசன் மிகாயேலைத் தவிர அந்த இளவரசர்களை எதிர்க்க வேறு ஒருவரும் எனக்கு உதவிசெய்யவில்லை.

தானியேல் 10:15-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லும்போது, நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன். அப்பொழுது மனிதனின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: ஐயா, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன். ஆகையால் என் ஐயாவுடைய அடியேன் என் ஐயாவோடே எப்படிப் பேசமுடியும்? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன். அப்பொழுது மனிதசாயலான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைப் பெலப்படுத்தி, பிரியமானவனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடன்கொள், திடன்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசும்போது நான் திடன்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன். அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே போரிடத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாகப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.

தானியேல் 10:15-21 பரிசுத்த பைபிள் (TAERV)

அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை. பிறகு மனிதனைப்போன்று தோற்றமளித்த ஒருவன் என் உதடுகளைத் தொட்டான். நான் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவனிடம் நான், “ஐயா, நான் கலக்கமடைந்தேன், பயப்படுகிறேன். ஏனென்றால், நான் பார்த்த தரிசனம் இத்தகையது. நான் உதவியற்றவனாக உணருகிறேன். ஐயா, நான் உமது ஊழியனான தானியேல். நான் உம்மோடு எப்படிப் பேசமுடியும்? எனது பலம் போய்விட்டது. எனக்கு மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது” என்றேன். மனிதனைப் போன்று தோற்றமளித்தவன் என்னை மீண்டும் தொட்டான். அவன் என்னைத் தொட்ட பின் நான் திடமாக உணர்ந்தேன். பிறகு அவன் என்னிடம், “தானியேலே, பயப்படாதே தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். சமாதானம் உன்னுடன் இருப்பதாக. இப்போதும் திடங்கொள்” என்றான். அவன் என்னோடு பேசியபோது நான் பலமடைந்தேன். பிறகு நான் “ஐயா, நீர் எனக்குப் பலத்தைக் கொடுத்தீர். இப்பொழுது நீர் பேசலாம்” என்றேன். அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான். ஆனால் தானியேலே, நான் போகும்முன், சத்தியமாகிய புத்தகத்திலே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உனக்குச் சொல்லவேண்டும். மிகாவேலைத் தவிர வேறுயாரும் அத்தீய தூதர்களுக்கெதிராக என்னுடன் நிற்பதில்லை. மிகாவேல் உன் ஜனங்களின் அதிபதியாக ஆளுகை செய்கிறான்.