தானியேல் 11:29-36

தானியேல் 11:29-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நியமிக்கப்பட்ட காலத்தில் அவன் திரும்பவும் தென்திசையின்மேல் படையெடுப்பான். ஆனால் இந்தத் தடவை ஏற்படும் முடிவு முந்திய தடவையைப் போலல்லாது வித்தியாசமானதாய் இருக்கும். மேற்குக் கரையோர நாடுகளின் கப்பல்கள் அவனை எதிர்க்கும். அதனால் அவன் சோர்வடைந்து தன் நாட்டிற்குத் திரும்புவான். அப்பொழுது அவன் திரும்பி பரிசுத்த ஆலயத்திற்கு எதிராகத் தன் கடுங்கோபத்தை வெளிப்படுத்துவான். அவன் பரிசுத்த உடன்படிக்கையை கைவிடுகிறவர்களுக்குத் தயவு காட்டுவான். “அவனுடைய ஆயுதப்படைகள் ஆலயப் பகுதிகளை அசுத்தமாக்கி, அன்றாட பலியையும் நிறுத்திவிடுவார்கள். பின்பு அவர்கள், ‘பாழாக்கும் அருவருப்பை’ அங்கே வைப்பார்கள். அவன் உடன்படிக்கையை மீறியவர்களை முகஸ்துதியினால் சீர்கெடுப்பான். ஆனாலும் தங்கள் இறைவனை அறிந்த மக்கள் திடங்கொண்டு அவனை எதிர்த்து நிற்பார்கள். “ஞானமுள்ளவர்கள், பலருக்கு அறிவுறுத்தல் கொடுப்பார்கள். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் வாளினால் விழுவார்கள், எரிக்கப்படுவார்கள், சிறைப்பிடிக்கப்படுவார்கள், கொள்ளையிடப்படுவார்கள். அவர்கள் விழும்போது, அவர்களுக்கு ஒரு சிறு உதவியே கிடைக்கும். அவர்களோடு சேர்ந்துகொள்கின்ற பலர் உண்மைத்தனம் இல்லாதவர்களாய் இருப்பார்கள். ஞானமுள்ளவர்களில் சிலர் இடறுவார்கள். அதனால் அவர்கள் முடிவு காலம்வரை புடமிடப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப் படுவார்கள். ஏனெனில் நியமிக்கப்பட்ட காலத்தின் முடிவு இனிமேல்தான் வர இருக்கிறது. “அரசன் தான் விரும்பியபடியெல்லாம் செய்வான். அவன் எல்லா தெய்வங்களுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி மேன்மைப்படுத்துவான். தெய்வங்களுக்கெல்லாம் இறைவனானவருக்கு எதிராகக் கேள்விப்படாதவற்றையெல்லாம் சொல்வான். அந்த கோபத்தின் காலம் நிறைவேறும் வரைக்கும், அவன் வெற்றிபெறுவான். ஏனெனில் தீர்மானிக்கப்பட்டது நிறைவேற வேண்டும்.

தானியேல் 11:29-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடத்தை முன்நடத்தையைப்போல் இருக்காது. அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனவேதனையடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபம்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான். ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட படைகள் எழும்பி, பாதுகாப்பான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அனுதினபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள். உடன்படிக்கைக்குத் துரோகிகளாக இருக்கிறவர்களை முகதாட்சணியம்செய்து வஞ்சக மார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற மக்கள் திடன்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். மக்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாட்கள்வரை பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள். இப்படி அவர்கள் விழும்போது கொஞ்சம் ஒத்தாசையால் உதவிபெறுவார்கள்; அப்பொழுது அநேகர் முகதாட்சணியம்செய்து அவர்களை ஒட்டிக்கொள்வார்கள். அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலம்வரை இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாட்கள் செல்லும். ராஜா தனக்கு விருப்பமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீரும்வரை அவனுக்குக் கைகூடிவரும்; தீர்மானிக்கப்பட்டது நடந்தேறும்.

தானியேல் 11:29-36 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஏற்ற காலத்தில் வடபகுதி ராஜா தென் பகுதி ராஜாவை மறுபடியும் தாக்குவான். ஆனால் இந்த முறை அவன் முன்புபோல வெற்றிபெறமாட்டான். கித்தீமிலிருந்து கப்பல்கள் வந்து வட பகுதி ராஜாவுக்கு எதிராகப் போரிடும். அக்கப்பல்கள் வந்து அவனை அச்சுறுத்துவதை அவன் காண்பான். பிறகு அவன் திரும்பிப் போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபங்கொள்வான். அவன் திரும்பி, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைவிட்டவர்களை ஆதரிப்பான். வடபகுதி ராஜா தனது படையை எருசலேம் ஆலயத்தில் பயங்கரமான செயல்களைச் செய்ய அனுப்புவான். அவர்கள் ஜனங்களைத் தினபலி கொடுக்காதபடிக்குத் தடுப்பார்கள். பிறகு அவர்கள் உண்மையிலேயே பயங்கரமான செயல்களைச் செய்வார்கள். அழிவுக்குக் காரணமாகும் அந்தப் பயங்கரமான காரியத்தை ஏற்படுத்துவார்கள். “வடபகுதி ராஜா பொய்களையும் இச்சகப் பேச்சையும் பயன்படுத்தி பரிசுத்த உடன்படிக்கையைப் பின்பற்றுவதை யூதர்கள் கைவிடும்படி செய்வான். அந்த யூதர்கள் மீண்டும் மிக மோசமான பாவங்களைச் செய்வார்கள். ஆனால் தேவனை அறிந்த, அவருக்குக் கீழ்ப்படிகிற யூதர்கள் பலம் பெறுவார்கள். அவர்கள் திரும்பி எதிர்த்து போரிடுவார்கள். “அந்த யூதர்களில் ஞானமுள்ளவர்கள் பலருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஆனாலும் ஞானிகள் கூட கொடுமைப்படுத்தப்படுவார்கள். சில ஞானமுள்ள யூதர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் எரிக்கப்படுவார்கள், அல்லது சிறைபடுத்தப்படுவார்கள். சில யூதர்களின் சொத்துக்களும் வீடுகளும் கொள்ளையடிக்கப்படும். அறிவுமிக்க யூதர்கள் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கொஞ்சம் உதவியும் பெறுவார்கள். ஆனால் அவர்களோடு சேரும் அநேக யூதர்கள் போலிகளாக இருப்பார்கள். அறிவுமிக்க யூதர்களில் சிலர் தவறுகள் செய்து விழுவார்கள். ஆனாலும் கொடுமைக் காலம் வர வேண்டும். ஏனென்றால் அப்பொழுது அவர்கள் பலமுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் ஆகமுடியும். இது முடிவுகாலம் வரும்வரை இருக்கும். பிறகு, சரியான நேரத்தில் முடிவு காலம் வரும். “வடபகுதி ராஜா தான் விரும்புகிறதையெல்லாம் செய்வான். அவன் தன்னைப் பற்றியே பேசுவான். அவன் தன்னையே புகழுவான். தன்னைத் தேவனை விட பெரியவனாக நினைப்பான். அவன் இதுவரை எவரும் கேட்காதவற்றையெல்லாம் பேசுவான். அவன் தெய்வங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பவருக்கெதிராக அவ்வாறு பேசுவான். அனைத்து தீமைகளும் ஏற்படும்வரை அவன் வெற்றிபெறுவான். தேவன் என்ன திட்டமிட்டிருக்கிறாரோ அது நடைபெறும்.

தானியேல் 11:29-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது. அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அனுசரிப்பான். ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட சேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள். உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள். இப்படி அவர்கள் விழுகையில் கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைவார்கள்; அப்பொழுது அநேகர் இச்சக வார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள். அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும். ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.