தானியேல் 3:1-30

தானியேல் 3:1-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நேபுகாத்நேச்சார் தொண்ணூறு அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் கொண்டதாக ஒரு தங்க உருவச்சிலையைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்திலுள்ள, “தூரா” என்னும் சமவெளியில் நிறுத்தினான். அதன்பின் அவன் தான் நிறுத்திய உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்கு வரும்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள், மற்றும் எல்லா மாகாண அலுவலர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அதன்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள் மற்றும் எல்லா மாகாண அலுவலர்களும் நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தியிருந்த உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்காக வந்துசேர்ந்து, அதற்குமுன் நின்றார்கள். அப்பொழுது அரச அறிவிப்பாளன் உரத்த சத்தமாய், “நாட்டு மக்களே, பிற நாடுகளே, பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதரே, நீங்கள் செய்யவேண்டும் என்று அரசன் கட்டளையிட்டிருப்பது இதுவே: கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் முதலான எல்லா இசைக்கருவிகளின் சத்தத்தை நீங்கள் கேட்டவுடனே, நீங்கள் எல்லோரும் இங்கு கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தி வைத்திருக்கும் தங்கச் சிலையை வணங்கவேண்டும். அப்படிக் கீழே விழுந்து வணங்காதவன் எவனோ, அவன் உடனே பற்றியெரியும் நெருப்புச்சூளையில் போடப்படுவான் என்றான்.” கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ் ஆகியவற்றின் சத்தத்தையும், எல்லாவித இசைகளையும் கேட்டபோது, எல்லா மக்களும், நாடுகளும், பல்வேறு மொழிகளையும் பேசும் மனிதரும் கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்திய அந்தத் தங்கச் சிலையை வணங்கினார்கள். அந்த நேரத்தில் சோதிடர் சிலர் அரசனிடம் முன்னேவந்து, யூதர்கள்மேல் பகிரங்கமாய்க் குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் நேபுகாத்நேச்சார் அரசனிடம், “அரசே, நீர் நீடூழி வாழ்க. அரசே! கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் சத்தத்தையும், மற்றும் எல்லாவித இசையையும் கேட்டதும், எல்லாரும் கீழே விழுந்து தங்கச் சிலையை வணங்கவேண்டும் என்று நீர் கட்டளை பிறப்பித்திருக்கிறீர். அவ்வாறு எவனாகிலும் கீழே விழுந்து வணங்காது போனால், அவன் பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்படவேண்டும் எனவும் கட்டளையிட்டீரே. ஆனால் அரசே! பாபிலோன் மாகாணங்களுக்குத் தலைவர்களாக உம்மால் நியமிக்கப்பட்ட யூதர்கள் சிலர் இருக்கிறார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய இவர்கள் உமக்குச் செவிகொடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உமது தெய்வங்களுக்குப் பணிசெய்யாமலும், நீர் நிறுத்திய தங்கத்தினாலான உருவச்சிலையை வணங்காமலும் இருக்கிறார்கள் என முறையிட்டார்கள்.” அதைக்கேட்ட அரசன் நேபுகாத்நேச்சார் கடுங்கோபங்கொண்டு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்துவரக் கட்டளையிட்டான். எனவே அவர்கள் அரசனின் முன் கொண்டுவரப்பட்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் எனது தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், நான் நிறுத்தியுள்ள தங்கச் சிலையை வணங்காமலும் இருப்பது உண்மையா?” என்று கேட்டான். “இப்பொழுதும் கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் சத்தத்தையும், மற்ற எல்லா இசைகளையும் நீங்கள் கேட்கும்போது, கீழே விழுந்து நான் நிறுத்திய சிலையை வணங்கினீர்களென்றால் உங்களுக்கு நல்லது. அப்படி நீங்கள் வணங்காவிட்டால், உடனே பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்படுவீர்கள். அப்பொழுது எனது கையிலிருந்து உங்களை விடுவிக்கிற தெய்வம் எது என்றான்?” அதற்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம், “நேபுகாத்நேச்சாரே, இதுபற்றி நாங்கள் உம்மோடு வாதிடவேண்டிய அவசியமில்லை. அரசே, நாங்கள் பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்பட்டால், நாங்கள் ஆராதிக்கிற இறைவன் அதிலிருந்து எங்களைக் காப்பாற்ற முடியுமானவராய் இருக்கிறார். உமது கையிலிருந்தும் அவர் எங்களை விடுவிப்பார். அவ்வாறு விடுவிக்காமற்போனாலுங்கூட, அரசே, நாங்கள் உமது தெய்வங்களுக்கு பணிசெய்யவோ, நீர் நிறுத்திய சிலையை வணங்கவோ மாட்டோம். இதை நீர் அறிய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்றார்கள்.” அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்மீது கடுங்கோபம் கொண்டான். அவர்களைப்பற்றி அவன் கொண்டிருந்த மனப்பாங்கு மாற்றமடைந்தது. அவன் அந்த சூளையை வழக்கத்தைவிட ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான். பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக் கட்டி, பற்றியெரிகிற நெருப்புச்சூளையிலே போடும்படி தனது படையிலுள்ள வலிமையான போர் வீரருக்குக் கட்டளையிட்டான். அப்படியே இந்த மனிதர் தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் கட்டப்பட்டு, பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் எறியப்பட்டார்கள். அரசனின் கட்டளை அவசரமானதாயிருந்ததாலும் சூளையோ மிகவும் சூடாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டுசென்ற வீரர்களையோ நெருப்பு ஜூவாலை எரித்துப்போட்டது. அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள். அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?” அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள். அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.” அப்பொழுது நேபுகாத்நேச்சார் சுவாலித்து எரிகிற சூளையின் வாயில் அருகே நெருங்கிப்போய், “சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, மகா உன்னதமான இறைவனின் அடியவர்களே, உடனே வெளியேறுங்கள்; இங்கே வாருங்கள்” என்று சத்தமிட்டான். அப்படியே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள். அப்பொழுது சிற்றரசர்களும், நிர்வாக அதிகாரிகளும், ஆளுநர்களும், அரச ஆலோசகர்களும் அவர்களைச் சுற்றி நெருங்கி வந்தார்கள். நெருப்போ அவர்களுடைய உடலுக்கு ஒரு தீங்குகூட விளைவிக்காமலும், தலைமயிர் கருகாமலும் இருப்பதைக் கண்டார்கள். அவர்களுடைய மேலுடைகள் எரியவும் இல்லை. அவர்கள்மேல் நெருப்பின் புகை வாடையும் இருக்கவில்லை. அப்பொழுது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத்தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே. ஆகவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் இறைவனுக்கு எதிராக எதையாவது கூறும் எந்த மக்களும், எந்த மொழி பேசுவோரும் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்படுவர். அவர்களுடைய வீடுகளும் இடிபாடுகளின் குவியலாக்கப்படும். இது எனது உறுதியான கட்டளை. ஏனெனில், வேறு எந்த தெய்வத்தினாலும் இவ்விதமாகக் காப்பாற்ற முடியாது என்றான்.” அதன்பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அரசன், பாபிலோன் மாகாணத்தில் பதவி உயர்வு கொடுத்தான்.

தானியேல் 3:1-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும், ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையை உண்டாக்கி, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரர்களையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரர்களையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைப்பிதழ் அனுப்பினான். அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரர்களும், நீதிபதிகளும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு முன்பாக நின்றார்கள். அறிவிப்பாளன் உரத்த சத்தமாக: சகல மக்களே, தேசத்தார்களே, பல மொழி பேசுகிறவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் கீழேவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டும். எவனாகிலும் கீழேவிழுந்து, அதைப் பணிந்துகொள்ளாவிட்டால், அவன் அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான். ஆதலால் சகல மக்களும், எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான இசைக்கருவிகளின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல மக்களும் தேசத்தார்களும் பல மொழி பேசுகிறவர்களும் கீழேவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள். அந்நேரத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்மேல் குற்றம்சுமத்தி, ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான இசைக்கருவிகளின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனிதனும் கீழேவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும், எவனாகிலும் கீழேவிழுந்து பணிந்துகொள்ளாவிட்டால், அவன் எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே. பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனிதர்கள் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் கடுங்கோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்த மனிதர்களை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்து விட்டபோது, நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தெய்வங்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது உண்மைதானா? இப்போதும் எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான இசைக்கருவிகளின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, கீழேவிழுந்து, நான் உண்டாக்கிய சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாமலிருந்தால், அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு பதில்சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற நெருப்புச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்பது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்கு மிகவும் கோபம்கொண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாக அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளைகொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற நெருப்புச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய மனிதர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாக இருந்ததாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்ததாலும், நெருப்பு ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று மனிதர்களும் கட்டப்பட்டவர்களாக எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, உடனடியாக எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று மனிதர்களை அல்லவோ கட்டுண்டவர்களாக நெருப்பிலே போட்டோம் என்றான்; அவர்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற நெருப்புச்சூளையின் வாசலருகில் வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்த மனிதர்களுடைய உடல்கள் நெருப்பினால் பாதிக்கப்படாமலும், அவர்களுடைய தலைமுடி கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், நெருப்பின் வாசனை அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் உடல்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த மக்களும், எந்த தேசத்தானும், எந்த மொழி பேசுகிறவனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாக காப்பாற்றக்கூடிய தேவன் வேறொருவரும் இல்லையென்றான். பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.

தானியேல் 3:1-30 பரிசுத்த பைபிள் (TAERV)

நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் தங்கத்தினால் செய்த ஒரு விக்கிரகம் இருந்தது. அந்த விக்கிரகம் 60 முழம் உயரமும் 6 முழம் அகலமுமானது. பிறகு அவன் அந்த விக்கிரகத்தைப் பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான். பின்னர் ராஜா தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், கருவூலக்காரரையும், ஆலோசகரையும், ஆளுநரையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் கூடி வருமாறு அழைத்தான். ராஜா, அவர்கள் அனைவரும் விக்கிரகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினான். எனவே அவர்களெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அமைத்திருந்த விக்கிரகத்தின் முன் வந்து நின்றார்கள். பிறகு ராஜாவுக்காக அறிவிப்பு செய்யும் கட்டியக்காரன் உரத்தக்குரலில், “பல தேசங்களிலிருந்தும், பலமொழி இனங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் எல்லா இசைக்கருவிகளின் சப்தங்களைக் கேட்டதும் பணிந்து வணங்கவேண்டும். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு மற்றும் மற்ற இசைக்கருவிகளின் ஒலியை கேட்கும்போது, நீங்கள் தங்க விக்கிரகத்தை தொழுதுகொள்ளவேண்டும். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த விக்கிரகத்தை அமைத்திருக்கிறார். எவனாவது கீழே விழுந்து தங்க விக்கிரகத்தை தொழாமலிருந்தால் அவன் சீக்கிரமாக அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவான். இது அனைவருக்குமுரிய அரச கட்டளையாகும்” என்றான். எனவே அவர்கள், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டதும் மிக விரைவாக கீழே விழுந்து தங்க விக்கிரகத்தைக் தொழுதுகொண்டார்கள். சகல தேசத்தாரும், இனத்தாரும், மொழிக்காரர்களும் கீழே விழுந்து ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுவிய தங்க விக்கிரகத்தைத் தொழுதுகொண்டார்கள். பின்னர், சில கல்தேயர்கள் ராஜாவிடம் வந்தனர். அந்த ஆட்கள் யூதர்களுக்கு விரோதமாகப் பேசத்தொடங்கினர். அவர்கள் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம், “ராஜாவே! நீர் என்றும் வாழ்க. ராஜாவே, நீர் ஒரு கட்டளை கொடுத்தீர். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகல இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் ஒவ்வொருவரும் இந்தத் தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளவேண்டும் என்று சொன்னீர். அதோடு, எவனாவது தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளாமலிருந்தால் அவன் அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர். சில யூதர்கள் ராஜாவான உமது கட்டளையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். நீர் அந்த யூதர்களை பாபிலோன் மாகாணத்தின் முக்கியமான அதிகாரிகளாக ஆக்கினீர். அவர்கள் பெயர்களாவன: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் உமது தெய்வத்தைத் தொழுவதில்லை. அவர்கள் உம்மால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைப் பணிந்து வணங்கவில்லை” என்று புகார் கூறினார்கள். நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். அவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்தான். எனவே அவர்கள் ராஜா முன்பு கொண்டுவரப்பட்டார்கள். நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரே நீங்கள் எனது தெய்வத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? நீங்கள், என்னால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? இப்பொழுது நீங்கள் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் நான் நிறுவிய தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழவேண்டும். நான் செய்திருக்கிற இவ்விக்கிரகத்தை நீங்கள் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் இதனைத் தொழாவிட்டால், மிகவும் சூடான எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவீர்கள். பிறகு உங்களை என் அதிகாரத்திலிருந்து எந்தத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவிடம்: “நேபுகாத்நேச்சாரே, நாங்கள் உம்மிடம் இவற்றைப்பற்றி விளக்கிடத் தேவையில்லை. நீர் எங்களை எரிகிற அக்கினி சூளையில் போட்டால் நாங்கள் சேவிக்கிற எங்கள் தேவன் எங்களைக் காப்பாற்றுவார். அவர் விரும்பினால் உமது வல்லமையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவார். ஆனால் எங்களை அவர் காப்பாற்றாவிட்டாலும்கூட, நாங்கள் உமது தெய்வங்களைச் சேவிக்கமாட்டோம். நீர் நிறுவிய தங்க விக்கிரகத்தை தொழமாட்டோம். இது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கவேண்டும்” என்றார்கள். பின்னர் நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கெதிரான கோபம் அவனது முகத்தில் வெளிப்பட்டது. அவன், வழக்கத்தை விடச் சூளையை ஏழு மடங்கு மிகுதியாகச் சூடாக்கும்படிக் கட்டளையிட்டான். பிறகு நேபுகாத்நேச்சார் தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக் கட்டும்படி கட்டளையிட்டான். ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான். எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர். ராஜா கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர். பின்னர் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான். அவனது ஆலோசகர்கள்: “ஆம் ராஜாவே” என்றனர். ராஜா அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான். பிறகு நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலருகே சென்று உரத்தகுரலில், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்! உன்னதமான தேவனுடைய பணியாட்களே, வெளியே வாருங்கள்” என்றான். எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நெருப்பிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வரும்போது, அவர்களைச் சுற்றி தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் சூழ்ந்து நின்றனர். நெருப்பானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைச் சுடாமலிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் வெந்துபோகவில்லை. அவர்களின் தலைமயிர் கருகவில்லை. அவர்களின் சால்வைகள் எரிக்கப்படவில்லை அவர்கள்மேல் அக்கினியின் மணம் வீசவில்லை. பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர். எனவே, நான் இப்போது இந்தச் சட்டத்தை ஏற்படுத்துகிறேன். எந்த தேசத்தினராகவும், மொழியினராகவும் உள்ள என் ஜனங்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன். அவர்களது வீட்டை எருக்களமாகிப் போடுவேன். வேறு எந்த தேவனும் தம் ஜனங்களை இதுபோல் காப்பாற்ற முடியாது” என்றான். பிறகு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.

தானியேல் 3:1-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான். அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள். கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான். ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள். அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி, ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும், எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே. பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது, நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா? இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவுசொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலேபோடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்த பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான். பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்