தானியேல் 4:19-33
தானியேல் 4:19-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேல், சிறிது நேரம் மிகவும் குழப்பமடைந்து நின்றான். அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் திகிலைக் கொடுத்தது. அதைக்கண்ட அரசன், “பெல்தெஷாத்சாரே, இக்கனவினாலோ, அதன் விளக்கத்தினாலோ நீ கலங்கவேண்டாம் என்றான்.” அதற்கு பெல்தெஷாத்சார், “என் தலைவனே இக்கனவு உமது பகைவர்களுக்கும், அதன் விளக்கம் உமது எதிரிகளுக்கும் பலித்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்குமே! நீர் ஒரு மரத்தைக் கண்டீரே; அது விசாலமானதாயும், வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காணக்கூடியதாய் ஆகாயத்தைத் தொட்டது. அதோடு இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டது. அவை எல்லோருக்கும் போதுமான உணவாயும் இருந்தன. வெளியின் மிருகங்களுக்கு அம்மரம் புகலிடம் கொடுத்தது. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகட்ட இடமும் இருந்தது. அரசே! நீரே அந்த மரம். நீர் பெரியவராயும், வல்லமையுடையவராயும் ஆகியிருக்கிறீர். உமது மேன்மை ஆகாயத்தைத் தொடும் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. உம்முடைய ஆளுகை பூமியின் தூரமான பகுதி வரைக்கும் விரிவடைந்திருக்கிறது. “அரசே! பரலோகத்திலிருந்து பரிசுத்த தூதுவன் ஒருவன் இறங்கி வருவதையும் கண்டீர். அவன், ‘இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்துப்போடுங்கள்; ஆனால் அதன் அடிமரத்தை இரும்பினாலும், வெண்கலத்தினாலும் கட்டி, புற்தரையில் இருக்கும்படி விடுங்கள். அதன் வேர்களைத் தரையில் விட்டுவிடுங்கள். அவன் ஆகாயத்துப் பனியில் நனையட்டும். அப்படி ஏழு காலங்கள் கடந்துபோகும் வரைக்கும் காட்டு மிருகங்களைப்போல் வாழட்டும் என்றும் சொல்லக்கேட்டீரே.’ “அரசே, விளக்கம் இதுவே; அரசனாகிய என் தலைவருக்கு எதிராக மகா உன்னதமானவர் பிறப்பித்த கட்டளை இதுவே: நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும். ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டு வை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோகமே ஆளுகை செய்கிறது என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது அரசு உமக்கே திரும்பிக் கொடுக்கப்படும். ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேளும். நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களையும், ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடும். அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம் என்றான்.” இவையெல்லாம் நேபுகாத்நேச்சார் அரசனுக்கு நிறைவேறியது. பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு ஒரு நாள் அரசன், பாபிலோனின் அரச அரண்மனை மொட்டைமாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அப்பொழுது அரசன், “நான் கட்டிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டினேன், என தனக்குள் சொல்லிக்கொண்டான்.” இந்த வார்த்தைகள் அவனுடைய உதட்டில் இன்னும் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “நேபுகாத்நேச்சார் அரசனே, உனக்குத் தீர்ப்பிடப்பட்டது இதுவே: உனது அரச அதிகாரம் உன்னிடமிருந்து இப்பொழுதே பறிக்கப்பட்டுவிடும். நீ மனிதரிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப்போல் புல்லைத் தின்பாய். மகா உன்னதமானவர், மனிதர்களின் அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவர்களுக்கு அரசாட்சியைக் கொடுப்பவர் என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும் என அச்சத்தம் சொல்வதைக் கேட்டான்.” உடனடியாக நேபுகாத்நேச்சாரைப் பற்றிச் சொல்லப்பட்டது நிறைவேறியது. அவன் மனிதரிலிருந்து துரத்தப்பட்டு, மாடுகளைப்போல் புல்லைத் தின்றான். அவனுடைய உடல் ஆகாயத்துப் பனியில் நனைந்து அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல் வளர்ந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப்போல் வளர்ந்தது.
தானியேல் 4:19-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் சற்றுநேரம் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, கனவும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கச்செய்யவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் மறுமொழியாக: என் எஜமானனே, அந்தச் கனவு உம்முடைய பகைவர்களிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய எதிரிகளிடத்திலும் பலிக்கக்கடவது. நீர் கண்ட மரம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைவரை காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானம்வரை எட்டினது. அதின் இலைகள் அழகாகவும், அதின் பழங்கள் அதிகமாகவும் இருந்தது; எல்லா உயிரினங்களுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழ் காட்டுமிருகங்கள் தங்கினது, அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வசித்தது. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானம்வரைக்கும், உமது ராஜரீகம் பூமியின் எல்லைவரைக்கும் எட்டியிருக்கிறது. இந்த மரத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு போடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியில் நனைவதாக; ஏழு வருடங்கள் அவன்மேல் கடந்துபோகும்வரை மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கவேண்டும் என்றும், வானத்திலிருந்து இறங்கிவந்து சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே. ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்மேல் வந்த உன்னதமான தேவனுடைய தீர்மானமும் என்னவென்றால்: மனிதர்களிலிருந்து நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உம்முடைய வாழ்நாளில் கடந்துபோகவேண்டும். ஆனாலும் மரத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் தேவனின் அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்ஜியம் உமக்கு நிலைநிற்கும். ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு மனமிரங்கி, உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான். இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ஆட்சி உன்னைவிட்டு நீங்கியது. மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
தானியேல் 4:19-33 பரிசுத்த பைபிள் (TAERV)
தானியேல் (பெல்தெஷாத்சார்) ஒருமணி நேரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தான். அவனது சிந்தனை அவனைப் பாதித்தது. எனவே, ராஜா அவனிடம்: “பெல்தெஷாத்சாரே (தானியேல்) கனவோ அல்லது அதன் பொருளோ உன்னைக் கலங்கப் பண்ண வேண்டியதில்லை” என்றான். பிறகு பெல்தெஷாத்சார் (தானியேல்) ராஜாவுக்குப் பதில் சொன்னான். என் எஜமானரே! அந்தக் கனவு உமது பகைவரைக் குறித்ததாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்தக் கனவின் பொருளும் உமக்கு விரோதமானவர்களைக் குறித்ததாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். நீர் உமது கனவில் ஒரு மரத்தைப் பார்த்தீர். அம்மரம் பெரிதாகவும் பலமானதாகவும் வளர்ந்தது. அதின் உச்சி வானத்தைத் தொட்டது. அது பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அதன் இலைகள் அழகாய் இருந்தன. அதில் ஏராளமாகப் பழங்கள் இருந்தன. அப்பழங்கள் ஏராளமானவர்களுக்கு உணவாகியது. அது காட்டுமிருங்களுக்கு வீடாகியது. அதன் கிளைகள் பறவைகளுக்குக் கூடாகியது. நீர் பார்த்த மரம் இதுதான். ராஜாவே, நீரே அந்த மரம். நீர் சிறப்பும், வல்லமையும் பெற்றிருக்கிறீர். நீர் வானத்தைத் தொடும் மரத்தைப்போன்று உயர்ந்து உமது வல்லமை பூமியின் அனைத்துப் பாகங்களையும் போய் அடைந்திருக்கிறது. “ராஜாவே, நீர் பரலோகத்திலிருந்து ஒரு பரிசுத்தமான தேவதூதன் வருவதைப் பார்த்தீர். அவன், இம்மரத்தை வெட்டு, இதனை அழித்துப்போடு, அதற்கு இரும்பாலும் வெண்கலத்தாலுமான விலங்கைப் போடு. அதன் தண்டையும் வேர்களையும் பூமியிலேயே விட்டுவிடு. அதனைப் புல்வெளியில் விட்டுவிடு. அது பனியில் நனையும். அவன் காட்டு மிருகத்தைப் போன்று வாழ்வான். ஏழு பருவங்கள் (காலங்கள்) அவன் இவ்வாறு இருக்கும்போதே கடந்துபோகும். “கனவின் பொருள் இதுதான், ராஜாவே, மிக உன்னதமான தேவன் அரசருக்கு இவை ஏற்படும்படி கட்டளையிட்டார். ராஜாவான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர். “மரத்தின் தண்டையும் வேர்களையும் பூமியில் விடவேண்டும் என்பதன் பொருள் இதுதான்: உமது இராஜ்யம் உம்மிடம் திருப்பிக்கொடுக்கப்படும். உமது இராஜ்யத்தை உன்னதமான தேவன் ஆளுகிறார் என்பதை நீர் கற்கும்போது இது நிகழும். எனவே, ராஜாவே, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும். நீர் பாவம் செய்வதை நிறுத்தி சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். தீமை செய்வதை நிறுத்தும். ஏழை ஜனங்களிடம் இரக்கமாயிரும். பிறகு நீர் வெற்றியுள்ளவராக இருப்பீர்.” அவை யாவும் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன. கனவுக்கண்ட 12 மாதத்திற்குப் பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள தன் அரண்மனையின் மாடியின் மேல் நடந்துகொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்துக் கொண்டு, “பாபிலோனைப் பார்! நான் இந்தப் பெரியநகரத்தைக் கட்டினேன். இது எனது அரண்மனை! எனது வலிமையினால் நான் இந்த அரண்மனையைக் கட்டினேன். நான் எவ்வளவு பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த இடத்தைக் கட்டினேன்” என்று கூறினான். இந்த வார்த்தைகள் ராஜாவின் வாயில் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அச்சத்தம் சொன்னது: “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, இவையெல்லாம் உனக்கு நிகழும். உன்னிடமிருந்து ராஜா என்னும் அதிகாரம் எடுத்துக் கொள்ளப்படும். நீ ஜனங்களிடமிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவாய். நீ காட்டுமிருகங்களோடு வாழ்வாய். நீ பசுவைப்போன்று புல்லைத் தின்பாய். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்), நீ உனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும் முன் கடந்துபோகும். பிறகு உன்னதமான தேவன் மனிதரின் இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதை நீ கற்பாய். அந்த உன்னதமான தேவன் அவர் விரும்புகிறவர்களுக்கு இராஜ்யங்களைக் கொடுக்கிறார்.” அக்காரியங்கள் உடனே நிகழ்ந்தன. நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பசுவைப்போன்று புல்லைத் உண்ணத்தொடங்கினான். அவன் பனியால் நனைந்தான். அவனது தலைமுடி கழுகின் சிறகுகள் போன்று நீளமாக வளர்ந்தன. அவனது நகங்கள் பறவையின் நகத்தைப்போன்று வளர்ந்தது.
தானியேல் 4:19-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பேருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது. நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது. இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியில் நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே. ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்துபோகவேண்டும். ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும். ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான். இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.