உபாகமம் 16:1-3

உபாகமம் 16:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப் பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

உபாகமம் 16:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆபீப் மாதத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ஆபீப் மாதத்தில் ஒரு இரவில் அவர் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். நீங்கள் உங்கள் ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை எடுத்து, அதை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவாகப் பலியிடுங்கள். அதை யெகோவா தமது பெயர் விளங்குவதற்காக தாம் தெரிந்துகொள்ளும் இடத்திலே பலியிடுங்கள். அதை புளிப்பூட்டப்பட்ட அப்பத்தோடு சாப்பிடவேண்டாம், ஏழுநாட்களுக்கு உபத்திரவத்தின் அப்பமான புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள், நீங்கள் எகிப்திலிருந்து அவசரமாய் வெளியேறினீர்களே. எனவே உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த வேளையை நினைவுகூருங்கள்.

உபாகமம் 16:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“ஆபீப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடுவாயாக; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

உபாகமம் 16:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆபிப் மாதம் வருவதைக் கவனித்து, அந்த மாதத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவை நீங்கள் கொண்டாட வேண்டும். ஏனென்றால், ஆபிப் மாதத்திலேயே இரவு நேரத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். நீங்கள் எல்லோரும் கர்த்தர் தமக்குச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்திற்கு, அந்தக் கொண்டாட்ட தினத்தில் செல்லவேண்டும். அங்கே, உங்கள் கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடு, மாடுகளைப் பலியிடுவாயாக. அந்த நாளில் புளிப்புள்ள அப்பத்தை நீங்கள் உண்ணக்கூடாது. புளிப்பில்லாத அப்பங்களையே ஏழு நாட்களுக்கு உண்ண வேண்டும், இந்த அப்பங்கள் ‘துன்பத்தின் அப்பங்கள்’ என்று அழைக்கப்படும்! இவை எகிப்தில் நீங்கள் அடைந்த துன்பங்களை நினைவூட்டுவதாக இருக்கும். எவ்வளவு விரைவாக நீங்கள் அந்த தேசத்திலிருந்து வெளியேறினீர்கள் என்பதை பஸ்காதோறும் நீங்கள் உயிரோடு இருக்கின்ற நாளெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.