உபாகமம் 20:1-8

உபாகமம் 20:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போருக்குப் போகும்போது, குதிரைகளையும், தேர்களையும் உங்களுடைய படையைவிட பெரிய படையையும் கண்டால், அவற்றிற்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இருப்பார். நீங்கள் போருக்குப்போக ஆயத்தமாகும்போது, ஆசாரியன் முன்னேவந்து இராணுவவீரருக்கு உரை நிகழ்த்தவேண்டும். அவன் சொல்லவேண்டியதாவது: “இஸ்ரயேலின், கேளுங்கள், இன்று நீங்கள் உங்கள் பகைவரை எதிர்த்துப் போர் புரியப்போகிறீர்கள். சோர்வடையாதீர்கள் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள் அவர்களுக்குமுன் பீதியடையாதீர்கள். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பதற்காக உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போர்புரிய உங்களுடன் போகிறார்.” மேலும் அதிகாரிகள் இராணுவவீரரிடம் சொல்லவேண்டியதாவது: “புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகலாம். அவன் யுத்தத்தில் செத்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யக்கூடும். திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதன் பலனை அனுபவியாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்; அவன் யுத்தத்தில் செத்தால், வேறொருவன் அத்தோட்டத்தின் பலனை அனுபவிப்பான். தனக்கு நிச்சயித்த பெண்ணை இன்னும் திருமணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம். அவன் போரில் செத்தால், அந்தப் பெண்ணை வேறொருவன் திருமணம்செய்வான்” என்று சொல்லவேண்டும். மேலும் அதிகாரிகள் அவர்களிடம், “பயப்படுகிற அல்லது உள்ளத்தில் சோர்வுடைய யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லவேண்டும். ஏனெனில், அவனுடைய உடன் இராணுவவீரர் அவனைப்போல் சோர்வடையாமல் இருக்கவேண்டுமே. அதற்காகவே இப்படிச் சொல்லவேண்டும்.

உபாகமம் 20:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டுப்போகும்போது, குதிரைகளையும், இரதங்களையும், உன்னைவிட பெரிய கூட்டமாகிய மக்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாதே; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார். நீங்கள்போர்செய்யத் துவங்கும்போது, ஆசாரியன் சேர்ந்து வந்து, மக்களிடத்தில் பேசி: இஸ்ரவேலர்களே, கேளுங்கள்; இன்று உங்கள் எதிரிகளுடன் போர்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் வருந்தவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும், கலங்கவும், திகைக்கவும் வேண்டாம். உங்களுக்காக உங்கள் எதிரிகளுடன் போர்செய்யவும் உங்களை இரட்சிக்கவும் உங்களுடன்கூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்லவேண்டும். அன்றியும் அதிபதிகள் மக்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யவேண்டியதாகும். திராட்சைத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அனுபவிக்கவேண்டியதாகும். ஒரு பெண்ணைத் தனக்கு நிச்சயம் செய்துகொண்டு, அவளைத் திருமணம்செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அவளைத் திருமணம்செய்ய வேண்டியதாகும் என்று சொல்லவேண்டும். பின்னும் அதிபதிகள் மக்களுடனே பேசி: பயந்தவனும் மிகவும் பெலவீனமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரர்களின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகச்செய்யாதபடி, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

உபாகமம் 20:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

“நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்து, போருக்காகக் செல்லும்போது குதிரைகளையும், இரதங்ளையும், உங்களிடமிருப்பவர்களைவிட மிகுதியான ஜனங்களையும் அவர்களிடம் கண்டால், அவற்றைக் கண்டு பயப்படாதிருங்கள். ஏனென்றால் எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கின்றார். “நீங்கள் போருக்குச் செல்கின்றபோது, ஆசாரியன் போர் வீரர்களுடன் சேர்ந்து வந்து அவர்களுடன் பேசவேண்டும். ஆசாரியன் உங்களிடம், ‘இஸ்ரவேல் ஜனங்களே நான் கூறுவதை கேளுங்கள், நீங்கள் இன்று போரில் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடப் போகின்றீர்கள். நீங்கள் மனந்தளர்ந்துவிடாதீர்கள்! நீங்கள் அவர்களைக் கண்டு கலக்கமோ, விரக்தியோ அடைந்து விடாதீர்கள்! உங்கள் எதிரிகளைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு வருகின்றார். அவர் உங்கள் எதிரிகளை எதிர்த்து நீங்கள் போரிட துணைசெய்வார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வெற்றிப் பெற துணைபுரிவார்!’ என்று கூறவேண்டும். “அந்த லேவிய அதிகாரிகள் வீரர்களிடம்: ‘இங்கே யாராவது புது வீட்டைக்கட்டி இன்னும் அவ்வீட்டைப் பிரதிஷ்டை செய்யாமல் இங்கு போருக்காக வந்திருப்பீர்கள் என்றால், அவன் அவ்வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஏனென்றால் போரில் அவன் கொல்லப்பட்டால் அவனது வீட்டினை மற்றொருவன் பிரதிஷ்டை பண்ண நேரிடும். தன் தோட்டத்தில் திராட்சையைப் பயிரிட்டு, அதன் பலனை அனுபவிக்காதவர் யாரும் இங்கே இருந்தால், அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். ஏனெனில் யுத்தத்தில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் அவன் தோட்டத்துத் திராட்சையை அனுபவிக்க நேரிடும். திருமணம் நிச்சயிக்கப்பட்டவன் யாரேனும் இங்கு இருந்தால் அவன் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். போரில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் இவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்ள நேரிடும்’ என்று சொல்வார்கள். “மேலும் அவ்வதிகாரிகள் ஜனங்களிடம் கண்டிப்பாகக் கூறவேண்டியது, ‘இங்கே தன்னம்பிக்கை இழந்து, பயந்துகொண்டு இருக்கின்ற தைரியமற்றவர்கள் யாராவது இருந்தால் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அப்போதுதான் மற்ற வீரர்கள் மனந்தளர்ந்திட இவன் காரணமாக இருக்கமாட்டான்.’

உபாகமம் 20:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்து வந்து, ஜனங்களிடத்தில் பேசி: இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும். அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும். திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அநுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும். ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும். பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.