உபாகமம் 23:1-14
உபாகமம் 23:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
விதைகள் நசுக்கப்பட்டதினாலோ, ஆணுறுப்பு வெட்டப்பட்டதினாலோ ஆண்மையிழந்தவன் எவனும் யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது. முறைகேடான உறவினால் பிறந்தவனும், அவன் சந்ததியும் பத்தாம் தலைமுறைவரை யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது. அம்மோனியராவது மோவாபியராவது பத்தாம் தலைமுறைவரைக்கும் உள்ள அவர்களுடைய சந்ததிகளாவது யெகோவாவின், சபைக்குள் வரக்கூடாது. ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, அவர்கள் வழியிலே உங்களைச் சந்திக்க உணவுடனும், தண்ணீருடனும் வரவில்லை. அவர்கள் மெசொப்பொத்தோமியாவிலுள்ள பெத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமை, உங்கள்மேல் சாபம் கூறும்படி கூலிக்கு அமர்த்தினார்கள். ஆனாலும், உங்களுடைய இறைவனாகிய யெகோவா பிலேயாமுக்கும செவிசாய்க்கவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள்மேல் அன்பு கூர்ந்ததினால், அவனுடைய சாபத்தை உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார். ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டாம். ஏதோமியனை வெறுக்காதீர்கள், அவன் உங்கள் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதீர்கள். அவனுடைய நாட்டில் நீங்கள் அந்நியராய் இருந்தீர்கள். எகிப்தியரின் பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறையினர் யெகோவாவின் சபைக்குள் வரலாம். நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராக முகாமிட்டிருக்கும்பொழுது அசுத்தமான எல்லாவற்றிலுமிருந்து விலகியிருங்கள். இராக்காலத்தில் விந்து வெளிப்படுவதினால், உங்கள் மத்தியில் ஒருவன் அசுத்தப்பட்டிருந்தால், அவன் முகாமுக்கு வெளியே போய் அங்கே இருக்கவேண்டும். ஆனால் மாலை நேரம் வந்ததும் அவன் குளித்து சூரியன் மறையும் நேரத்தில் முகாமுக்கு மீண்டும் வரலாம். முகாமுக்கு வெளியே மலசலம் கழிப்பதற்கு உங்களுக்கு ஒரு இடத்தை வைத்திருக்கவேண்டும். உங்கள் ஆயுதங்களுடன் ஒன்றாக மண் தோண்டுவதற்கு எதையாவது வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளியே போய் மலசலம் கழித்தபின் ஒரு குழியைத் தோண்டி மலத்தை மண்ணால் மூடிவிடுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைப் பாதுகாக்கவும், உங்கள் பகைவர்களை உங்களிடம் ஒப்படைக்கவும், உங்கள் முகாமில் உலாவுகிறார். ஆகவே அவர் உங்கள் மத்தியில் வெட்கக்கேடான எதையும் கண்டு உங்களைவிட்டு விலகிக்போகாதபடி, நீங்கள் முகாமைப் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
உபாகமம் 23:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“விரை நசுக்கப்பட்டவனும், ஆணுறுப்பு வெட்டப்பட்டவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. “வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. “அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினாலும், உன்னை சபிக்கும்படியாக மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினாலும் இப்படிச் செய்யவேண்டும். உன் தேவனாகிய யெகோவா பிலேயாமுக்குச் செவிகொடுக்க விருப்பமில்லாமல், உன் தேவனாகிய யெகோவா உன்மேல் அன்புசெலுத்தியதால், உன் தேவனாகிய யெகோவா அந்த சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறச்செய்தார். நீ உயிருள்ளவரை அவர்களுக்கு ஒருபோதும் சமாதானத்தையும் நன்மையையும் செய்யாதே. “ஏதோமியனை வெறுக்காதே, அவன் உன்னுடைய சகோதரன்; எகிப்தியனை வெறுக்காதே, அவனுடைய தேசத்திலே நீ அந்நியனாக இருந்தாய். மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படலாம். “நீ படையெடுத்து உன்னுடைய எதிரிகளுக்கு விரோதமாகப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக. இரவு நேரத்தில் விந்து வெளியேறியதால் அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களுக்குள் இருந்தால், அவன் முகாமிற்கு வெளியே போய், முகாமிற்குள் வராமல், மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறையும்போது முகாமிற்குள் வரக்கடவன். “உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும். உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக் கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடவேண்டும். உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.
உபாகமம் 23:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஆண்மையில்லாதவனாக விதை நசுங்கப்பட்டவனும், உடலுறவு உறுப்பு துண்டிக்கப்பட்டவனும், இஸ்ரவேல் ஜனங்களது கர்த்தருடைய ஆராதனையில் சேரக்கூடாதவர்கள் ஆவார்கள். ஒருவனது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்யாமல் அவன் பிறந்திருந்தால், அப்படிபட்டவன் இஸ்ரவேலருடன் சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க கூடிவரக் கூடாது. அவர்கள் சந்ததியாரில் பத்தாவது தலைமுறைமட்டும் எவரும் இஸ்ரவேலர்களின் ஆராதனையில் சேரத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். “அம்மோனியனும், மோவாபியனும், இஸ்ரவேல் மனிதர்கள் ஆராதிக்கும் கர்த்தருடைய சபைக்கு ஆகாதவர்கள். அவர்களது சந்ததியாரில் பத்தாம் தலைமுறையினர் கூட என்றைக்கும் கர்த்தரை ஆராதிக்கும் இஸ்ரவேல் ஜனங்களோடே சேர்ந்து வர வேண்டாம். ஏனென்றால் எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் இந்த அம்மோனியரும், மோவாபியரும். உங்களுக்கு அப்பமும், தண்ணீரும் தர மறுத்தார்கள், அது மட்டுமின்றி மெசொபொத்தாமியா நகரமாகிய பேத்தோரில் பேயோரின் குமாரனான பிலேயாமுக்கு கூலிபேசி உங்களை சபிக்கும்படி செய்ததற்காகவும், அவர்களை தேவனுடைய சபைக்கு உரியவராகாது செய்ய வேண்டும். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் பிலேயாம் கூறியதைக் கேட்க மறுத்தார். கர்த்தர் அந்த சாபத்தையெல்லாம் உங்களுக்காக ஆசீர்வாதங்களாக்கினார். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களை நேசிக்கின்றார். நீங்கள் அந்த ஜனங்களுடன் ஒருபோதும் எவ்வித சமாதானத்திற்கும் முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு கொள்ளக் கூடாது. “நீங்கள் ஏதோமியர்களை வெறுக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் உங்கள் உறவினர்கள். நீங்கள் எகிப்தியர்களை வெறுக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் அந்த தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்கள். ஏதோமியருக்கும், எகிப்தியருக்கும் பிறந்த மூன்றாவது தலைமுறையின் குழந்தைகள் இஸ்ரவேலருடன் இணைந்து கர்த்தருடைய சபையில் ஆராதிக்கலாம். “நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடச் செல்லும்போது தீட்டான காரியங்கள் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருங்கள். உங்களது போர் முகாமில் ஒருவன் இரவின் கனவுகளினால் சரீரத்தில் அசுத்தமானால் அவன் அந்த முகாமை விட்டு வெளியே போகவேண்டும். அவன் போர் முகாமிற்குள் செல்லாமல் வெளியே தங்கி இருந்து, பின் அன்று மாலையில், தண்ணீரில் குளித்து சூரியன் மறைந்த பின்பே முகாமிற்குத் திரும்பலாம். “உங்கள் போர் முகாமிற்கு வெளிப் புறத்தில் மலம் கழிக்கும் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். உங்களது படைக் கருவிகளுடன் நீங்கள் தரையைத் தோண்டுவதற்காக சிறியகோலையும் வைத்திருக்கவேண்டும். பின் நீங்கள் மலம், சிறுநீர் கழிக்கின்றபோது அச்சிறிய கோலைக் கொண்டு மண்ணைத் தோண்டி அதில் கழிவைச் செய்த பின்பு மூடிவிட வேண்டும். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது போர் முகாமில் உங்களோடே இருந்து, உங்களைக் காத்து, உங்கள் எதிரிகள் உங்களிடம் தோல்வியடைய உதவுகிறார் ஆகையால் அந்தப் போர் முகாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அப்போது கர்த்தர் உங்களுடைய சுத்தமற்ற காரியங்களைக் காணாமலும் உங்களை விட்டுப் போகாமலும் இருப்பார்.
உபாகமம் 23:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும். உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். நீ உன் ஆயுள் நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே. ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாம். நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக. இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல், சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன். நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்க வேண்டும். உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்து போனதை மூடிப்போடக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.