உபாகமம் 32:15-52
உபாகமம் 32:15-52 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெஷூரன் கொழுப்பு மிகுந்து அடங்காதவன் ஆனான். அவர்கள் வயிறாரத்தின்று, கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமுடையவர்களானார்கள். அப்பொழுது அவர்கள் தங்களைப் படைத்த இறைவனையே கைவிட்டு, தங்கள் இரட்சிப்பின் கற்பாறையையும் புறக்கணித்தார்கள். இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி, தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள். அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல. அவர்கள் முன்பு அறிந்திராத தெய்வங்களே அவை. சமீபத்தில் தோன்றியதும், உங்கள் முற்பிதாக்கள் பயப்படாததுமான தெய்வங்கள். உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள். உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள். யெகோவா இதைக்கண்டு தனது மகன்களும், மகள்களுமான அவர்களோடு கோபம் கொண்டதனால் அவர்களைப் புறக்கணித்து சொன்னதாவது: “அவர்களுக்கு என் முகத்தை மறைப்பேன்; அவர்களின் முடிவு எப்படியாகும் என பார்ப்பேன். மேலும் அவர், அவர்கள் கொடுமையில் ஊறிய தலைமுறையினர், நம்பிக்கை துரோகம் செய்யும் பிள்ளைகள். தெய்வம் அல்லாதவற்றால் எனக்கு எரிச்சல்மூட்டி, பயனற்ற விக்கிரகங்களினால் கோபத்தை மூட்டினார்கள். நான் மக்களென மதிக்கப்படாதவர்களால் அவர்களுக்கு எரிச்சல் மூட்டுவேன், பகுத்தறிவு இல்லாத தேசத்தால், நான் அவர்களுக்குக் கோபமூட்டுவேன். எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். “நான் அவர்கள்மேல் பேரழிவுகளைக் குவிப்பேன்; அவர்கள்மேல் என் அம்புகளை கணக்கின்றி எய்வேன். நான் அவர்களுக்கு எதிராக வாட்டும் பஞ்சத்தை அனுப்புவேன்; விழுங்கும் கொள்ளைநோய்களையும், சாகடிக்கும் வாதைகளையும் அனுப்புவேன். கூரிய பற்களையுடைய காட்டு மிருகங்களையும், புழுதியில் ஊரும் விஷப்பாம்புகளையும் அனுப்புவேன். வீதிகளிலே, வாளானது அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கும்; அவர்களுடைய வீடுகளில் பயங்கரம் ஆளுகை செய்யும். இளைஞரும், இளம்பெண்களும் அழிவார்கள்; குழந்தைகளும் நரைத்துப்போன கிழவர்களும் அழிவார்கள். நான் அவர்களைச் சிதறடிப்பேன்; மனுக்குலத்தில் இருந்து அவர்களைப்பற்றிய ஞாபகத்தையும் அற்றுப்போகப்பண்ணுவேன். ‘எங்கள் கைகளே வெற்றிகொண்டன, யெகோவா இவற்றைச் செய்யவில்லை’ என்று, தப்பான எண்ணங்கொண்டு அவர்களுடைய பகைவன், ஏளனம் செய்வான் என்றே தயங்கினேன்.” இஸ்ரயேல் ஒரு உணர்வற்ற நாடு, நிதானிக்கும் ஆற்றல் அவர்களிடமில்லை. அவர்கள் ஞானமுள்ளவர்களாயிருந்து, இதை விளங்கிக்கொண்டு, தங்களது முடிவை நிதானித்தறிந்தால் நலமாயிருக்கும். அவர்களில் ஆயிரம்பேரை ஒருவன் துரத்துவதெப்படி? பத்தாயிரம்பேரை இருவர் ஒடவைப்பது எப்படி? அவர்களுடைய கற்பாறையான யெகோவா அவர்களை விற்றுப்போடாவிட்டால், அல்லது யெகோவா அவர்களைக் கைவிடாவிட்டால் இது எப்படி நடக்கும்? நமது பகைவர் ஒத்துக்கொள்வதுபோல், அவர்களுடைய கல் நம்முடைய கற்பாறையானவரைப் போன்றது அல்ல. பகைவர்களின் திராட்சைக்கொடி சோதோமின் திராட்சைக் கொடியிலிருந்து உண்டானது. கொமோராவின் வயல்களிலிருந்து வந்தது. அவர்களின் திராட்சைப் பழங்கள் நஞ்சு நிறைந்தவை. அவர்களுடைய திராட்சைக் குலைகள் கசப்பு நிறைந்தவை. அவர்களின் திராட்சை இரசம் பாம்புகளின் விஷமாயிருக்கிறது. அது நாகபாம்பின் கொடிய நஞ்சாயிருக்கிறது. “யெகோவா சொல்கிறதாவது: இதை நான் சேர்த்துவைத்து, என் களஞ்சியங்களில் முத்திரையிடவில்லையோ? பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன். ஏற்றகாலத்தில் அவர்களின் கால்கள் சறுக்கும். அவர்களுடைய பேரழிவின் நாள் நெருங்கிற்று. அவர்களின் பேரழிவு அவர்கள்மேல் விரைந்துவருகிறது” என்றார். யெகோவா தமது மக்களை நியாயந்தீர்ப்பார். அவர் தன் பணியாட்கள்மேல் கருணைகாட்டுவார். அவர்களின் பெலன் அற்றுப்போவதையும் அவர்களில் அடிமையோ, சுயாதீனரோ ஒருவனும் தப்பாமல் இருப்பதையும் காணும்போது அவர் இரக்கம் காட்டுவார். ஆனாலும் அவர், “இப்பொழுது அவர்களுடைய தெய்வங்கள் எங்கே? அவர்கள் அடைக்கலம் புகுந்த கல் எங்கே? அவர்களுடைய பலிகளின் கொழுபைத்தின்ற தெய்வங்கள் எங்கே? பானகாணிக்கைகளின் திராட்சை இரசத்தைக் குடித்த தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு உதவிசெய்ய எழுந்திருக்கட்டும். அவை உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கட்டும்” என்பார். “இப்பொழுது பாருங்கள், நான், நானே அவர்! என்னைவிட வேறு தெய்வமில்லை. நானே கொல்கிறேன்; நானே உயிர்ப்பிக்கிறேன். நானே காயப்படுத்தினேன், நானே குணப்படுத்துவேன். என் கையிலிருந்து விடுவிக்க ஒருவராலும் முடியாது.” நான் என் கைகளை வானத்திற்கு உயர்த்தி அறிவிக்கிறதாவது: “நான் என்றென்றும் வாழ்வது நிச்சயம்போல, பளபளக்கும் என் வாளை நான் கூராக்கி, நீதி வழங்கும்படி என் கை அதைப் பற்றிக்கொள்ளும்போது, என் எதிரிகளிடம் பழிவாங்குவேன்; என்னை வெறுத்தவர்களுக்குப் பதில் செய்வேன். செத்தும், சிறைப்பட்டும் போனவர்களின் இரத்தத்தினால் நான் என் அம்புகளை வெறிகொள்ளச் செய்வேன். எனது வாளோ அவர்களின் சதையைத் தின்னும்; அது பகைவரின் தலைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தும் என்பதும் நிச்சயம்.” நாடுகளே, அவருடைய மக்களோடு சேர்ந்து களிகூருங்கள். அவர் தன் பணியாட்களின் இரத்தத்துக்காகப் பழிவாங்குவார். அவர் தமது பகைவரைப் பழிவாங்கி, தமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்திசெய்வார். பின்பு மோசே நூனின் மகனான யோசுவாவுடன் வந்து, இந்தப் பாட்டின் சொற்களையெல்லாம் மக்கள் கேட்கும்படி பேசினான். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரயேலர் எல்லாருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவன் அவர்களிடம், “நான் இன்று பயபக்தியுடன் உங்களுக்கு அறிவித்த இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்தின் வார்த்தைகளுக்கெல்லாம் கவனமாய் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கும் கட்டளையிடுங்கள். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும் வீண் வார்த்தைகள் அல்ல. அவையே உங்களுக்கு உயிர்கொடுக்கும். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் இந்த வார்த்தைகளினால் நீடித்து வாழ்வீர்கள்” என்றான். அதே நாளில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் நாட்டிலே இருக்கும் அபாரீம் மலைத்தொடரில் ஏறி நேபோ மலைக்குப்போ. அங்கிருந்து இஸ்ரயேலருக்கு நான் உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் கானான் நாட்டைப் பார். நீ ஏறும் அந்த மலையிலேயே இறப்பாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து தன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது போல், நீயும் உன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய். சீன் பாலைவனத்தில் மேரிபா காதேஷ் தண்ணீர் அருகே இஸ்ரயேலர் முன்னிலையில் நீங்கள் இருவரும் எனக்கு நம்பிக்கையற்றவர்களாய் இருந்தீர்கள். இஸ்ரயேலர் மத்தியிலே நீ எனது பரிசுத்தத்தையும் பேணிக்காத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே உனக்கு இப்படி நடக்கும். ஆகையால் நீ தூரத்திலிருந்து மட்டுமே அந்த நாட்டைப் பார்ப்பாய். இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் நாட்டிற்குள் நீ போகமாட்டாய்” என்றார்.
உபாகமம் 32:15-52 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான். அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, அவர்களைப் புறக்கணித்து: என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். “தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும். எங்கள் கை உயர்ந்ததென்றும், யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று, நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். “அவர்கள் யோசனை இல்லாத மக்கள், அவர்களுக்கு உணர்வு இல்லை. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய திராட்சைச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது. அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. “இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ? பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும். யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். “நான் நானே அவர், என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன். மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”. மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான். அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி: “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்; நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய். நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார்.
உபாகமம் 32:15-52 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஆனால் யெஷுரன் கொழுத்துப்போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான் (ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.) அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான். தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான். கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர். கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள். அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர். அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும். அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும். நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய். உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய். “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார். ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்! அதனால் கர்த்தர் கூறினார், ‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன். அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்! அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர். அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள். அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர். இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல. அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர். எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன். எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது. அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது. அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது. அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது! “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன். நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன். அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள். பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும். நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும். வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள். அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள். படைவீரர்கள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கொல்வார்கள். அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள். “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன். எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்! அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன். பகைவருக்கு அது புரியாது, அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள்: “கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’ “இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை. அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும். என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்! ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா? இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா? கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்! அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்! எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல. நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்! பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும். அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும். அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும். “கர்த்தர் கூறுகிறார், ‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்! அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன். அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது. அவர்களது தண்டனை விரைவில் வரும்.’ “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார். அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார். அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார். அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார். பின்னர் கர்த்தர் கூறுவார், ‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே? அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன. அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன. எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும். அவை உங்களைக் காக்கட்டும்! “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்! வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன். நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன். நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும். நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும். எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது. நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்! நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன். எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன். எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள். கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள். எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும். அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’ “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார். அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார். அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.” மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் குமாரனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான். மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும். இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான். கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர், “அபாரீம் எனும் மலைகளுக்குப் போ, எரிகோவிற்கு எதிர்ப்புறமாக இருக்கிற மோவாப் நாட்டிலுள்ள நேபோ மலையின்மேல் ஏறு. பிறகு நீ, இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்வதற்காக நான் கொடுக்கிற, கானான் நாட்டினைப் பார்க்க முடியும். நீ அந்த மலைமீது மரணமடைவாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் மலைமீது மரித்து முற்பிதாக்களிடம் சேர்ந்ததுபோல் நீயும் உன் முற்பிதாக்களிடம் சேருவாய். ஏனென்றால், நீங்கள் இருவரும் எனக்கு எதிராக பாவம் செய்தீர்கள். நீங்கள் காதேசிலே மேரிபாவின் தண்ணீர் அருகில் இருந்தீர்கள். அது சீன் வனாந்தரத்திலே இருந்தது. அங்கே, இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக, நான் பரிசுத்தமானவர் என்று நீ கனப்படுத்தவில்லை. எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார்.
உபாகமம் 32:15-52 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான். அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். கர்த்தர் அதைக்கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து: என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைப் கோபப்படுத்துவேன். என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும். தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன். அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், கன்னியையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும். எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று, நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பேர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன். அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார். அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி? தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது. அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ? பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும். கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை. நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன். மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன். கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும். ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார். மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலேவையுங்கள். இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான். அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்; நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய். நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.