பிரசங்கி 1:15-18

பிரசங்கி 1:15-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வளைந்ததை நேராக்கமுடியாது; இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது. “பாருங்கள், எனக்குமுன் எருசலேமில் ஆளுகை செய்த எல்லோரையும்விட, நான் ஞானத்தில் வளர்ந்து பெருகியிருக்கிறேன்; ஞானத்திலும் அறிவிலும் அதிகமானதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். பின்பு நான் ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் விளங்கிக்கொள்ளவும் அதில் முழுமையாய் ஈடுபட்டேன். ஆனால் இதுவும் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே என்று அறிந்துகொண்டேன். ஏனெனில் அதிக ஞானத்தினால் அதிக துக்கம் வருகிறது; அதிக அறிவினால் அதிக கவலையும் வருகிறது.

பிரசங்கி 1:15-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது. “இதோ, நான் பெரியவனாக இருந்து, எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஞானமடைந்து தேறினேன்; என்னுடைய மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது,” என்று நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன். ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன். அதிக ஞானத்திலே அதிக சலிப்பு உண்டு; அறிவுபெருத்தவன் நோய்பெருத்தவன்.

பிரசங்கி 1:15-18 பரிசுத்த பைபிள் (TAERV)

நீ இவற்றை மாற்ற இயலாது. ஏதாவது வளைந்து இருந்தால், அது நேராக இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. நான் எனக்குள், “நான் மிகவும் ஞானமுள்ளவன். எனக்கு முன்னால் எருசலேமை ஆண்ட மற்ற ராஜாக்களைவிட நான் ஞானமுள்ளவன். உண்மையில் ஞானம் என்பதும் அறிவு என்பதும் எத்தகையவை என்பதை நான் அறிவேன்” என்று கூறினேன். முட்டாள்தனமாகச் சிந்திப்பதைவிட, ஞானமும் அறிவும் எவ்வகையில் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன். ஆனால் ஞானத்தை அடைய முயல்வது காற்றைப் பிடிக்க முயல்வது போன்றது என்பதை நான் கற்றுக்கொண்டேன். மிகுதியான ஞானத்திலே மிகுதியான சலிப்பும் உள்ளது. அதிகமான ஞானத்தைப் பெறுகிற எவனும் அதிகமான வருத்தத்தையும் அடைகிறான்.