பிரசங்கி 10:1-16

பிரசங்கி 10:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான். அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே. மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன். படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான். இரும்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம். தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன். ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம். மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும். ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!

பிரசங்கி 10:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

செத்த ஈக்கள் நறுமணத் தைலத்திலும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ஒரு சிறு மூடத்தனம் ஞானத்திற்கும், மதிப்பிற்கும் மேலோங்கி நிற்கும். ஞானமுள்ளவர்களின் இருதயம் நியாயத்தின் பக்கம் சாய்கிறது, மூடர்களின் இருதயமோ வழிவிலகிப் போவதையே தேடுகிறது. ஒரு மூடன் வீதியில் போகும்போதே, புத்தியற்றவனாக நடந்து எல்லோருக்கும் தான் எவ்வளவு மதியீனன் என்பதைக் காண்பிக்கிறான். ஒரு ஆளுநனின் கோபம் உனக்கெதிராக மூண்டால், நீ உன் பதவியைவிட்டு விலகாதே; நிதானமாயிருந்தால் பெரிய குற்றமும் மன்னிக்கப்படும். சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீமையும் உண்டு, ஒரு ஆளுநனிடமிருந்து வரும் ஒருவிதத் தவறே அது. மூடர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்; செல்வந்தர்களோ தாழ்ந்த பதவிகளையே வகிக்கிறார்கள். அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்; பிரபுக்களோ அடிமைகளைப்போல் நடந்து செல்வதையும் கண்டிருக்கிறேன். குழி ஒன்றை வெட்டுகிறவன் அதில் விழக்கூடும்; பழைய சுவரை இடிப்பவனையும் பாம்பு கடிக்கக்கூடும். கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்; மரக்கட்டையை பிளக்கிறவனுக்கு அதனாலே ஆபத்து உண்டாகலாம். ஒரு கோடரி மழுங்கிப் போய் அதின் முனை கூர்மையாக்கப்படாமல் இருந்தால், அதிக பலம் வேண்டியிருக்கும். ஆனால் தொழில் திறமையோ வெற்றியைக் கொண்டுவரும். ஒரு பாம்பை வசியப்படுத்துமுன் அது கடிக்குமானால், அதை வசியப்படுத்தும் வித்தைத் தெரிந்தும் பயனில்லை. ஞானமுள்ளவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தயவுள்ளவைகள்; மூடனோ தன் உதடுகளாலேயே அழிக்கப்படுகிறான். அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை; முடிவிலோ கொடிய பைத்தியக்காரத்தனமானவை. மூடன் வார்த்தைகளை அதிகமாக்குகிறான். ஒரு மனிதனும் வரப்போவதை அறியான். அவனுக்குப்பின் என்ன நடக்கும் என்பதை யாரால் அவனுக்குச் சொல்லமுடியும்? மூடனின் வேலை அவனையே களைப்படையச் செய்யும்; ஏனெனில், பட்டணத்திற்குப் போகும் வழி அவனுக்குத் தெரியாது. அடிமையை அரசனாகவும் விடியற்காலமே விருந்து உண்கிறவர்களை பிரபுக்களாகவும் கொண்ட நாடே, உனக்கு ஐயோ!

பிரசங்கி 10:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும். ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான். அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே. மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன். படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான். இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம். தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன். ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும். மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும். ராஜா சிறுபிள்ளையுமாக, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ

பிரசங்கி 10:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச் செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியான ஞானத்தையும், மரியாதையையும் முட்டாள்தனம் கெடுத்துவிடும். ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான வழியில் நடத்திச்செல்லும். முட்டாளின் எண்ணங்கள் அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும். ஒரு முட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான். எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்று கண்டுகொள்வான். எஜமான் உன்மீது கோபத்தோடு இருக்கிறான் என்பதற்காக உனது வேலையை விட்டுவிடாதே. நீ அமைதியாகவும் உதவியாகவும் இருந்தால் பெரிய தவறுகளைக்கூட நீ திருத்திக்கொள்ளலாம். இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள் செய்கின்ற தவறுகள். முக்கியமான பொறுப்புகள் முட்டாள்களுக்குக்கொடுக்கப்படுகின்றன. செல்வம் உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப் பெறுகின்றனர். பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்று பின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள் குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன். குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன் பாம்பு கடித்து மரிப்பான். பெருங்கற்களை நகர்த்திக்கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான். ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம் அவன்மேலேயே விழுந்துவிடலாம். ஆனால் ஞானம் அந்த வேலையையும் எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால் வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக் கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும். ஞானமும் இதைப் போன்றதுதான். ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறு எவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமை பயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான். ஞானமுள்ளவனின் வார்த்தைகள் பாராட்டைப் பெற்றுத்தரும். ஆனால் முட்டாளின் வார்த்தைகள் அழிவைக்கொண்டுவரும். முட்டாள் முட்டாள்தனமானவற்றைக் கூறத் தொடங்குவான். முடிவில் அவன் பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான். ஒரு முட்டாள் எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும் பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை. முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவு சுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான். எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச் செய்வான். ஒரு ராஜா குழந்தையைப்போன்று இருந்தால், அது நாட்டிற்குப் பெருங்கேடாகும். ராஜா தன் காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக் கேடுதான்.