பிரசங்கி 10:17-20

பிரசங்கி 10:17-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது. மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும். விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.

பிரசங்கி 10:17-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உயர்குடியில் பிறந்தவனை அரசனாகக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். குடிபோதைக்கு அல்லாமல் தங்கள் பெலத்திற்காக உரிய நேரத்தில் சாப்பிடுகிற இளவரசர்களைக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும். மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது, திராட்சை இரசம் வாழ்க்கையை களிப்புள்ளதாக்குகிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் தேவையானது பணமே. உனது சிந்தனையிலும் அரசனை நிந்திக்காதே, உனது படுக்கை அறையிலும் பணக்காரனை சபிக்காதே, ஏனெனில் ஆகாயத்துப் பறவை உன் வார்த்தைகளைக் கொண்டு செல்லலாம், சிறகடிக்கும் பறவை நீ சொல்வதைப் போய்ச் சொல்லலாம்.

பிரசங்கி 10:17-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது. மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும். விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.

பிரசங்கி 10:17-20 பரிசுத்த பைபிள் (TAERV)

ராஜா நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும் நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டால், நாட்டுக்கு நல்லதுதான். இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம் பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காக அல்ல. ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும். வீட்டுக்கூரை விழுந்துவிடும். ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது. ராஜாவைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப்பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.