பிரசங்கி 2:1-15

பிரசங்கி 2:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது. நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன். வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டும், என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன். நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன். மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன். வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடுமாடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது. வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது. என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான். இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன். ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன். மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

பிரசங்கி 2:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“வா, இப்பொழுது நன்மையானது என்னவென்று கண்டுபிடிக்கும்படி இன்பத்தை அனுபவித்துச் சோதித்துப் பார்ப்போம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அதுவும் அர்த்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டது. சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன். திராட்சை இரசத்தினால் என்னை உற்சாகப்படுத்தியும், மூடத்தனமாயும் நடந்து பார்த்தேன்; அப்பொழுது இன்னும் என் மனமே ஞானத்தினால் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. மனிதர் தங்களுடைய வாழ்வின் குறுகிய நாட்களில், வானத்தின் கீழே செய்யப் பயனுள்ளது என்ன என்று பார்க்க விரும்பினேன். பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினேன். அழகிய சோலைகளையும் பூந்தோட்டங்களையும் எனக்காக உண்டாக்கி, எல்லாவித பழமரங்களையும் அதில் நட்டேன். செழித்து வளர்ந்த தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்குக் குளங்களைக் கட்டினேன். ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன்; மேலும் வீட்டில் பிறந்த அடிமைகளையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும், அதிகமான ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் எனக்கிருந்தன. நான் தங்கத்தையும் வெள்ளியையும் எனக்கெனக் குவித்தேன்; அரசர்களிடமிருந்தும் மாகாணங்களிலிருந்தும் கிடைத்த செல்வங்களைச் சேர்த்தேன். பாடகர்களும் பாடகிகளும் எனக்கிருந்தனர்; மனித இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பல பெண்களையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் மிகப்பெரியவனானேன். இவை எல்லாவற்றின் மத்தியிலும் என் ஞானம் என்னைவிட்டு நீங்காமல் இருந்தது. என் கண்கள் ஆசை வைத்த எதையும் நான் பெறாமல் விடவில்லை; என் இருதயத்துக்கு எந்த இன்பங்களையும் நான் கொடுக்க மறுக்கவில்லை. என் எல்லா வேலையிலும் என் இருதயம் மகிழ்ந்தது, என் எல்லா உழைப்புக்குமான வெகுமதி இதுவே. அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும், அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது, இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பின்பு நான் ஞானத்தை ஆராய்ந்து பார்க்கவும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் அறிந்துகொள்ளவும் என் மனதை திருப்பினேன். அரசனுக்குப்பின் அவனுடைய இடத்தில் வருகிறவன், முன்பு அவனால் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் இவனால் அதிகமாய் என்ன செய்யமுடியும்? இருளைப் பார்க்கிலும் வெளிச்சம் நல்லதாய் இருப்பதுபோலவே, மூடத்தனத்தைப் பார்க்கிலும் ஞானம் நல்லது எனக் கண்டேன். ஒரு ஞானமுள்ளோரின் கண்கள் வெளிச்சத்தை நோக்கியிருக்கின்றன, மூடரோ இருளில் நடப்பார்கள்; ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே முடிவே ஏற்படுகிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். பின்பு நான், மூடரின் முடிவே என்னையும் மேற்கொள்ளும், “ஆகவே ஞானமுள்ளவனாய் இருப்பதால் நான் பெறும் இலாபம் என்ன?” என்று என் இருதயத்தில் சிந்தித்தேன். “இதுவும் அர்த்தமற்றதே” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன்.

பிரசங்கி 2:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாக இருந்தது. சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன். வானத்தின்கீழ் மனுமக்கள் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பெற்று அனுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்வரை, என்னுடைய இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என்னுடைய உடலை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என்னுடைய உள்ளத்தில் வகைதேடினேன். நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன். மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன். வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது. வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித சம்பாதித்தேன். எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட நான் பெரியவனும் செல்வம் நிறைந்தவனுமானேன்; என்னுடைய ஞானமும் என்னோடுகூட இருந்தது. என்னுடைய கண்கள் விரும்பிய ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை செய்யவில்லை; என்னுடைய இருதயத்திற்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என்னுடைய மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என்னுடைய பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனிதன் என்ன செய்யமுடியும்? செய்ததையே செய்வான். இருளைவிட வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாக மதியீனத்தைவிட ஞானம் உத்தமமென்று கண்டேன். ஞானியின் கண்கள் அவனுடைய முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லோருக்கும் ஒரே விதமாக நடக்கிறது என்று கண்டேன். மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

பிரசங்கி 2:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் எனக்குள்: “நான் வேடிக்கை செய்வேன். என்னால் முடிந்தவரை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். ஆனால் நான் இவையும் பயனற்றவை என்று கற்றுக்கொண்டேன். எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது. எனவே என் மனதை ஞானத்தால் நிரப்பும்போது என் உடலை திராட்சைரசத்தால் நிரப்ப முடிவு செய்தேன். இந்த முட்டாள்தனத்தை நான் முயற்சி செய்தேன். ஏனென்றால் நான் மகிழ்ச்சியடைவதற்குரிய வழியைக் கண்டுபிடிக்க எண்ணினேன். ஜனங்களின் குறுகிய வாழ்வில் அவர்கள் என்ன நன்மை செய்யக்கூடும் என்று பார்க்க விரும்பினேன். பிறகு நான் பெரிய செயல்களைச் செய்யத் துவங்கினேன். வீடுகளைக் கட்டினேன். திராட்சைத் தோட்டங்களை எனக்காக நட்டேன். நான் தோட்டங்களை அமைத்தேன், பூங்காவனங்களை உருவாக்கினேன். எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன். நான் எனக்காக குளங்களை அமைத்தேன். அதன் மூலம் பழமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினேன். நான் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன். என் வீட்டிலும் அடிமைகள் பிறந்தனர். பல பெருஞ்செல்வங்கள் எனக்குச் சொந்தமாயின. எனக்கு மாட்டுமந்தையும் ஆட்டுமந்தையும் இருந்தன. எருசலேமில் மற்றவர்களைவிட எனக்கு ஏராளமான செல்வங்கள் இருந்தன. நான் எனக்காகப் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்தேன். ராஜாக்களிடமிருந்தும் அவர்களின் நாடுகளிலிருந்தும் பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டேன். எனக்காகப் பாடிட ஆண்களும் பெண்களும் இருந்தனர். எவரும் விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தன. நான் செல்வந்தனாகவும் புகழுடையவனாகவும் ஆனேன். எனக்குமுன் எருசலேமில் வாழ்ந்த எந்த மனிதரையும்விட நான் பெரிய ஆளாக இருந்தேன். எப்பொழுதும் எனது ஞானம் எனக்கு உதவுவதாக இருந்தது. என் கண்கள் பார்த்து நான் விரும்பியதை எல்லாம் பெற்றேன். நான் செய்தவற்றிலெல்லாம் மனநிறைவு பெற்றேன். என் இதயம் பூரித்தது, இம்மகிழ்ச்சியே எனது அனைத்து கடின உழைப்பிற்கும் கிடைத்த வெகுமதி. ஆனால் பின்னர் நான் செய்த அனைத்தையும் கவனித்தேன். நான் செய்த கடின உழைப்பை எல்லாம் நினைத்துப் பார்த்தேன். அவை அனைத்தும் காலவிரயம் என்று முடிவுசெய்தேன். இது காற்றைப் பிடிப்பதுபோன்றது. நம் வாழ்க்கையில் நாம் செய்த அனைத்திலிருந்தும் இலாபகரமானது எதுவுமில்லை. ஒரு ராஜாவால் செய்ய முடிந்ததைவிட ஒரு மனிதனால் அதிகமாகச் செய்யமுடியாது. சில ராஜாக்கள் ஏற்கெனவே நீங்கள் செய்ய விரும்புவதையே செய்திருக்கிறார்கள். அந்த ராஜாக்கள் செய்தவையும் காலவிரயம் என்று நான் கற்றுக்கொண்டேன். எனவே மீண்டும் நான் ஞானமுள்ளவனாக இருப்பதைப்பற்றியும், அறிவற்றவனாக இருப்பதைப்பற்றியும் பைத்தியக்காரத்தனமான செயல்களைப்பற்றியும் எண்ணினேன். இருட்டைவிட ஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிட ஞானம் சிறந்தது என்று கண்டேன். ஞானமுள்ளவன் தான் செல்லுமிடத்தை அறிய சிந்தனையைக் கண்களாகப் பயன்படுத்துகிறான். ஆனால் முட்டாளோ, இருட்டில் நடப்பவனைப் போன்றுள்ளான். ஆனால் ஞானமுள்ளவனுக்கும் முட்டாளுக்கும் ஒரே வழியிலேயே முடிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டேன். இருவரும் மரித்துப்போகின்றனர். நான் எனக்குள், “ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும் எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று எண்ணினேன். நான் எனக்குள், “ஞானமுள்ளவனாக இருப்பதும் பயனற்றதே” என்று சொன்னேன்.