பிரசங்கி 4:1-13

பிரசங்கி 4:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை. ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே. மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான். வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம். பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன். ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

பிரசங்கி 4:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மீண்டும் நான் பார்த்தபோது: சூரியனுக்குக் கீழே அநேக ஒடுக்குதல்களைக் கண்டேன். ஒடுக்கப்படுகிறவர்களின் கண்ணீரையும், அவர்களை ஆறுதல்படுத்த யாரும் இல்லாதிருப்பதையும் கண்டேன்; அவர்களை ஒடுக்குவோரின் பக்கத்திலேயே வல்லமை இருந்தது, அவர்களை ஆறுதல்படுத்த யாருமே இல்லை. ஆதலால் இன்னும் உயிரோடிருந்து வாழ்கிறவர்களைப் பார்க்கிலும், ஏற்கெனவே செத்து மடிந்துபோனவர்களே மகிழ்ச்சிக்குரியவர்கள் என்று அறிவித்தேன். இவ்விரு கூட்டத்தினரைவிட, இன்னமும் பிறவாதவர்களே மேலானவர்கள். அவர்கள் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீமையைக் காணவில்லையே. தனது அயலவனைக் குறித்து மனிதன் கொண்டிருக்கும் பொறாமையிலிருந்தே, எல்லா உழைப்பும் திறமையும் ஏற்படுகிறது என்று நான் கண்டுகொண்டேன். இதுவும் அர்த்தமற்றதே; காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்கிறான். காற்றைத் துரத்திப்பிடிப்பது போன்ற பயனற்ற உழைப்பினால், இரு கைகளையும் நிரப்புவதைவிட, மன அமைதியுடன் ஒரு கையை நிரப்பிக்கொள்வது மேலானது. சூரியனுக்குக் கீழே இன்னும் அர்த்தமற்ற ஒன்றை நான் கண்டேன்: தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மகனோ, சகோதரனோ இல்லை. அப்படியிருந்தும் அவனுடைய கடும் உழைப்பிற்கோ முடிவே இருக்கவில்லை. ஆனாலும் அவன் கண்கள் அவனுடைய செல்வத்தில் திருப்தியடையவுமில்லை. அவன், “நான் யாருக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன்; ஏன் நான் என் வாழ்வை சந்தோஷமாய் அனுபவியாதிருக்கிறேன்” என்று கேட்டான். இதுவும் அர்த்தமற்றதும், அவலத்துக்குரிய ஒரு நிலையாயும் இருக்கிறது. தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையிலிருந்து நல்ல பயனைப் பெறுவார்கள். ஒருவன் விழுந்தால், அவன் நண்பன் அவன் எழும்ப உதவிசெய்ய முடியும். ஆனால் கீழே விழும்போது எழுந்திருக்க உதவிசெய்ய யாரும் இல்லாத மனிதனோ, பரிதாபத்திற்குரியவன். அத்துடன் இருவர் ஒன்றாய்ப் படுத்திருந்தால், தங்களை சூடாக வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருவன் தனிமையாய் தன்னை எப்படிச் சூடாக வைத்துக்கொள்ள முடியும். ஒரு தனி மனிதன் இலகுவில் வீழ்த்தப்படலாம்; ஆனால் இருவராய் இருந்தால் அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள். முப்புரிக்கயிறு விரைவில் அறாது. எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரியாத முதியவனும் மூடனுமான அரசனைவிட, ஞானமுள்ள ஏழை வாலிபனே சிறந்தவன்.

பிரசங்கி 4:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுபவர்கள் இல்லை; ஒடுக்குகிறவர்களிடம் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுபவர்கள் இல்லை. ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே. மனிதன் படும் எல்லா பிரயாசமும், பயன்படும் எல்லா செயல்களும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாக இருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். வருத்தத்தோடும் மனக்கலக்கத்தோடும் இரண்டு கைப்பிடிநிறையக் கொண்டிருப்பதைவிட, அமைதியாக ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம். பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன். ஒருவன் தனிமையாக இருக்கிறான்; அவனுக்கு யாருமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்திற்கு முடிவில்லை; அவனுடைய கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அனுபவிக்காமல் யாருக்காக பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை. தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது. இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன்.

பிரசங்கி 4:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏராளமான ஜனங்கள் மோசமாக நடத்தப்படுவதை மீண்டும் நான் பார்த்தேன். அவர்களது கண்ணீரைப் பார்த்தேன். துக்கப்படும் அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான் பார்த்தேன். கொடுமையானவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன். புண்பட்ட அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் நான் பார்த்தேன். இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன். பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள். பிறகு நான் “ஏன் ஜனங்கள் இவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள்?” என்று நினைத்தேன். ஜனங்கள் வெற்றிபெறவும் மற்றவர்களை விடச் சிறப்புபெறவும் முயற்சி செய்வதை நான் பார்த்தேன். ஏனென்றால் ஜனங்கள் அனைவரும் பொறாமை உடையவர்கள். அவர்கள் தம்மைவிட மற்றவர் அதிகம் பெறுவதை விரும்பமாட்டார்கள். இது அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப்போன்றது என எண்ணினேன். சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும் அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து திருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன். மீண்டும், அர்த்தமில்லாத சிலவற்றை நான் பார்த்தேன். ஒருவனுக்குக் குடும்பம் இல்லாமல் இருக்கலாம். அவனுக்கு ஒரு மகனோ அல்லது சகோதரனோகூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் அவன் தொடர்ந்து கடினமாக உழைக்கிறான். அவன் தன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதில்லை. அவன் மிகுதியாக உழைக்கிறான். அவன் வேலைசெய்வதை நிறுத்தி, “நான் யாருக்காகக் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏன் வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது?” என்று தன்னைத்தான் கேட்பதில்லை. இதுவும் மிக மோசமானதும், அர்த்தமற்றதுமான ஒன்றாகும். ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால், அவர்கள் தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம். ஒருவன் விழுந்தால், இன்னொருவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் தனியாக இருந்து விழும்போது உதவுவதற்கு யாரும் இல்லாமல் கிடப்பது மிகவும் மோசமானது. இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாக இராது. ஒருவனாக இருப்பவனைப் பகைவன் எளிதில் தோற்கடித்துவிடுவான். அவனால் இருவரைத் தோற்கடிப்பது கடினம். மூன்று பேராய் இருப்பது இன்னும் பலம். அவர்கள் மூன்று புரிகளை உடைய கயிறு அறுப்பதற்குக் கடினமாய் இருப்பதைப் போன்றவர்கள். ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும் உள்ள இளைய தலைவன், முதியவனாகவும் முட்டாளாகவும் உள்ள ராஜாவைவிடச் சிறந்தவன். முதிய ராஜா எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான்.