பிரசங்கி 7:1-10

பிரசங்கி 7:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜனனநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும். ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே. இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.

பிரசங்கி 7:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது, பிறக்கும் நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும், துக்க வீட்டிற்குப் போவதே சிறந்தது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் நியதியும் மரணமே; உயிரோடிருக்கிறவர்கள் இதைக் மனதிற்கொள்ளவேண்டும். சிரிப்பைப் பார்க்கிலும் துக்கமே நல்லது; ஏனெனில் துக்கமுகம் இருதயத்திற்கு நன்மையைக் கொடுக்கும். ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது; ஆனால் மூடர்களின் இருதயமோ களிப்பு வீட்டிலேயே இருக்கிறது. மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நல்லது. பானைக்குக்கீழ் சடசட என எரியும் முட்களின் சத்தத்தைப்போலவே, மூடர்களின் சிரிப்பும் இருக்கும். இதுவும் அர்த்தமற்றதே. பலவந்தமாய் எடுத்த ஆதாயம், ஒரு ஞானியையும் மூடனாக்கும். இலஞ்சம் வாங்குதல் இருதயத்தைக் கறைப்படுத்தும். ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது. உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும். “இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல.

பிரசங்கி 7:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும், ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது. விருந்து வீட்டிற்குப் போவதைவிட துக்கவீட்டிற்குப் போவது நலம்; இதிலே எல்லா மனிதர்களின் முடிவும் காணப்படும்; உயிரோடு இருக்கிறவன் இதைத் தன்னுடைய மனதிலே சிந்திப்பான். சிரிப்பைவிட துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும். ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்; இதுவும் மாயையே. இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும். ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன். உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும். இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.

பிரசங்கி 7:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப் பெறுவது நல்லது. ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும் சிறந்ததுதான். விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச் செல்வது சிறந்தது. ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே. வாழ்கின்ற அனைவரும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும். சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது. ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமது இதயம் நல்லதாகிறது. ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான். ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது. அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது. அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது. முட்கள் வேகமாக எரியும், எனவே பானை சூடாகாது. எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார். அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும். ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது. ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது. விரைவாகக் கோபம் அடையாதே. ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும். “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே. என்ன நடந்தது?” என்று கேட்காதே. அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.