எபேசியர் 1:15-19

எபேசியர் 1:15-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இக்காரணத்தினாலே, கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் வைத்திருந்திருக்கிற விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும் நான் கேள்விப்பட்டதிலிருந்து, என் மன்றாட்டுகளில் உங்களை நினைவுகூர்ந்து, உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் இறைவனை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ளும்படி, அவர் உங்களை ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும்படி மன்றாடுகிறேன். இதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இறைவனாயிருக்கிற மகிமையுள்ள பிதாவை நோக்கி மன்றாடுகிறேன். உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்ததன் எதிர்பார்ப்பை அறிந்து நீங்கள் பரிசுத்தவான்களில் அவருடைய மகிமையான உரிமைச்சொத்தின் நிறைவைக் குறித்தும் தெரிந்துகொள்வீர்கள். விசுவாசிக்கிறவர்களாகிய நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற அளவிடமுடியாத பெரிதான வல்லமையைக்குறித்தும் அறிந்துகொள்வீர்கள். இந்த வல்லமை நம்மிடம் செயலாற்றுகிற அவருடைய ஆற்றல் மிகுந்த சக்தியைப் போலவே இயங்குகிறது.

எபேசியர் 1:15-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபேசியர் 1:15-19 பரிசுத்த பைபிள் (TAERV)

அதனால்தான் எனது பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொண்டு உங்களுக்காக எப்போதும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், தேவனின் மக்களின் மேலுள்ள உங்கள் அன்பையும் குறித்து நான் கேள்விப்பட்டதில் இருந்து நான் இதனை எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமானவரிடம் எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதில் தேவனை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தரவேண்டும் என வேண்டுகிறேன். உங்கள் இதயத்தில் மிகப் பெரிய புரிந்துகொள்ளுதல் ஏற்பட வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். பிறகு தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பது விசுவாசத்தோடு தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். தம் தூய்மையான மக்களுக்குக் கொடுப்பதற்காகத் தந்த ஆசீர்வாதங்கள் மிகப் பெரியதும், புகழுடையதும் என்பதை நீங்கள் உணர வேண்டும். தேவனுடைய வல்லமை மிக உயர்ந்தது, அளக்க இயலாதது என்றும் தேவன் மேல் நம்பிக்கையுள்ள நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வல்லமை இறந்துபோன இயேசுவைத் தேவன் உயிர்த்தெழும்பும்படி செய்தது.

எபேசியர் 1:15-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.