எபேசியர் 2:1-3
எபேசியர் 2:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. ஒருகாலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்தோம். நமது மாம்சத்திலிருந்து எழும் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கிறவர்களாகவும், மாம்சத்திலிருந்து எழும் ஆசைகளின்படியும் யோசனைகளின்படியும், நடக்கிறவர்களாகவும் இருந்தோம். மற்றவர்களைப் போலவே, இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம்.
எபேசியர் 2:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம்.
எபேசியர் 2:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம் ஆம், கடந்த காலத்தில் பாவங்களில் வாழ்ந்தீர்கள். உலகம் வாழ்கிறபடி வாழ்ந்தீர்கள். பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய மறந்த அந்த மக்களுக்குள் தீய ஆவி வேலை செய்கிறது. கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.
எபேசியர் 2:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.