எபேசியர் 4:11-13

எபேசியர் 4:11-13 பரிசுத்த பைபிள் (TAERV)

அதே கிறிஸ்து மக்களுக்கு வரங்களைக் கொடுத்தார். சிலரை அப்போஸ்தலராக்கினார், சிலரை தீர்க்கதரிசிகளாக்கினார், சிலரை சுவிசேஷகர்களாக்கினார். சிலரை தேவனின் மக்களைப் பற்றி அக்கறைகொள்ளும் மேய்ப்பர்களாக்கினார், சிலரை போதிப்பவர்களாக்கினார். கிறிஸ்துவின் பரிசுத்தவான்களைச் சேவை செய்ய தேவன் பல வரங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவின் சபையானது வல்லமை பெறவே அவர் வரங்களைக் கொடுத்தார். நாம் அனைவரும் அதே நம்பிக்கையில் ஒன்றுபட வேண்டும். தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவைப் பெறவேண்டி, அதுவரை இவ்வேலை தொடரவேண்டும். நாம் முழுமை பெற்றவர்களாக மாற வேண்டும். நாம் கிறிஸ்துவைப்போல் ஆகும் வரை வளர வேண்டும். அவரது முழுமையைப் பெற வேண்டும்.

எபேசியர் 4:11-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கிறிஸ்து சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தி வேலைக்காரர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், வேதாகம ஆசிரியர்களாகவும் இருக்கும்படி திருச்சபைக்குக் கொடுத்தார். கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதற்கு, இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இவ்விதமாய் கட்டியெழுப்புவதே அவர் இவர்களைக் கொடுத்த நோக்கமாயிருந்தது. இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப்பற்றிய விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவை பெற்று, நாம் முதிர்ச்சியடைந்த மக்களாவதே, அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.

எபேசியர் 4:11-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.