எபேசியர் 5:20-24

எபேசியர் 5:20-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எப்பொழுதும், எல்லாவற்றிற்காகவும் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில், பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் நிமித்தம், ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். மனைவிகளே, நீங்கள் கர்த்தருக்குப் பணிந்து நடப்பதுபோல, உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில் கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பதுபோல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கிறான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராக இருக்கிறார். அப்படியே திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்து நடப்பதுபோல, மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்கவேண்டும்.

எபேசியர் 5:20-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார். எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

எபேசியர் 5:20-24 பரிசுத்த பைபிள் (TAERV)

பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள். ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள். மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள்.

எபேசியர் 5:20-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.