எபேசியர் 5:25-33
எபேசியர் 5:25-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
எபேசியர் 5:25-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கணவர்களே, கிறிஸ்து திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போலவே, நீங்களும் மனைவியிடம் அன்பாய் இருங்கள். கிறிஸ்து வார்த்தையின் மூலம் தண்ணீரினால் திருச்சபையைச் சுத்திகரித்து பரிசுத்தமாக்கும்படியும், மகிமையுள்ள திருச்சபை எவ்வித மாசும், மறுவும், வேறு எவ்வித குறைபாடும் அற்றதாகவும், பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் தம்முன் நிறுத்திக்கொள்ளும்படியே கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார். இவ்விதமாகவே கணவர்களும் தங்கள் மனைவிகளில், தங்கள் சொந்த உடல்களைப்போல் அன்பு செலுத்தவேண்டும். தன் மனைவியில் அன்பாயிருக்கிறவன் தன்னிலேயே அன்பாயிருக்கிறான். ஒருவனும் தன் சொந்த உடலை ஒருபோதும் வெறுத்ததில்லை. மாறாக, தனது உடலுக்கு வேண்டியதைக் கொடுத்து அதைப் பராமரிக்கிறான். இதுபோலவே, கிறிஸ்துவும் தமது திருச்சபையைப் பராமரிக்கிறார். நாமும் கிறிஸ்துவிடைய உடலின் அங்கங்களாய் இருக்கிறோமே. இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள் இது ஒரு மிக ஆழ்ந்த இரகசியம். ஆனால் நானோ கிறிஸ்துவையும், திருச்சபையையும் பற்றிப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் ஒவ்வொருவனும், தன்னில் தான் அன்பாயிருப்பது போலவே, தன் மனைவியிலும் அன்பாயிருக்கவேண்டும். ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை மதித்து நடக்கவேண்டும்.
எபேசியர் 5:25-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான். தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம். இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.
எபேசியர் 5:25-33 பரிசுத்த பைபிள் (TAERV)
கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார். சபையைப் புனிதமாக்கவே அவர் இறந்தார். சரீரத்தைத் தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்துவது போலவே திருவசனத்தைப் பயன்படுத்தி சபையைத் தூய்மை செய்கிறார். கிறிஸ்து இறந்து போனதால் அவர் சபையை அழகுமிக்க மணமகளைப் போன்று ஆக்க, தம்மையே தந்தார். இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக ஆக்க விரும்பினார். இதுபோல கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும். ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார். ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். “ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது. எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.