எஸ்தர் 9:20-22

எஸ்தர் 9:20-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மொர்தெகாய் இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்து, அருகிலும் தூரத்திலும் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்கள் எங்குமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பினான். அதில் வருடந்தோறும் ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைக் கொண்டாடும்படி கேட்கப்பட்டிருந்தது. இதை யூதர்கள் தங்கள் பகைவரிடமிருந்து விடுதலை பெற்ற காலமாகவும், அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறிய மாதமாகவும், தங்களுடைய அழுகை கொண்டாட்டமாக மாறிய நாளாகவும் கொண்டாடும்படி எழுதப்பட்டிருந்தது. அந்த நாட்களை விருந்துண்டு மகிழும் நாட்களாகவும், ஒருவருக்கொருவர் உணவுகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் நாட்களாகவும், ஏழைகளுக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கும் நாட்களாகவும் கைக்கொள்ளும்படி எழுதினான்.

எஸ்தர் 9:20-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மொர்தெகாய் இந்தக் காரியங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பி, ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதத்தின் பதினான்காம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்கள் தங்களுடைய பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்களுடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் அநுசரித்து, அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷம்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மம் செய்யவும்வேண்டும் என்று திட்டம் செய்தான்.

எஸ்தர் 9:20-22 பரிசுத்த பைபிள் (TAERV)

மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு ராஜாவின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான்.

எஸ்தர் 9:20-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி, வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து, அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.