யாத்திராகமம் 15:22-27

யாத்திராகமம் 15:22-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும், ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து; நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.

யாத்திராகமம் 15:22-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்திற்கு நடத்திச் சென்றான். அவர்கள் மூன்று நாட்களாக பாலைவனத்தில் பயணம் செய்தார்கள், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அவர்கள் மாரா என்னும் இடத்திற்கு வந்தபோது, அவ்விடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த இடம் மாரா என அழைக்கப்பட்டது. எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள். மோசே யெகோவாவிடம் அழுது விண்ணப்பித்தான், அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிமையாக மாறியது. பின்பு யெகோவா ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அங்கே அவர்களைச் சோதித்தார். அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய எல்லா விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மேல் கொண்டுவந்த வியாதிகளில் எதையும் உங்கள்மேல் கொண்டுவரமாட்டேன்; ஏனெனில் நானே உங்களைச் சுகமாக்குகிற யெகோவா” என்றார். அதன்பின் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.

யாத்திராகமம் 15:22-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது. அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார். பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.

யாத்திராகமம் 15:22-27 பரிசுத்த பைபிள் (TAERV)

செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் சென்றான். அவர்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்தனர். ஜனங்களுக்குக் குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் ஜனங்கள் மாராவிற்கு வந்தனர். மாராவில் தண்ணீர் இருந்தது. ஆனால் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. (இதனால் அந்த இடம் மாரா என்று அழைக்கப்பட்டது) மோசேயிடம் வந்து ஜனங்கள், “நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?” என்று முறையிட ஆரம்பித்தனர். மோசே கர்த்தரை வேண்டினான், கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காட்டினார். மோசே அம்மரத்தை தண்ணீருக்குள் போட்டான். அவன் அவ்வாறு செய்தபோது, அது நல்ல குடிதண்ணீராக மாறிற்று. அவ்விடத்தில், கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்த்து அவர்களுக்கு ஒரு சட்டத்தைக் கொடுத்தார். ஜனங்களின் நம்பிக்கையையும் சோதித்துப் பார்த்தார். கர்த்தர், “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் சரியெனக் கூறும் காரியங்களை நீங்கள் செய்யவேண்டும். கர்த்தரின் எல்லாக் கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்தால், எகிப்தியர்களைப்போல நோயுறமாட்டீர்கள். கர்த்தராகிய நான் எகிப்தியருக்கு கொடுத்த எந்த நோயையும் உங்களுக்கு வரவிடமாட்டேன். நானே கர்த்தர். உங்களைக் குணப்படுத்துகிறவர் நான் ஒருவரே” என்றார். பின்பு ஜனங்கள் ஏலிமுக்குப் பயணமாயினர். ஏலிமில் பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே தண்ணீர் இருந்த இடத்தினருகே ஜனங்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள்.