யாத்திராகமம் 23:14-33

யாத்திராகமம் 23:14-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“வருடத்தில் மூன்றுமுறை நீங்கள் எனக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும். “முதலாவதாக புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி, ஏழுநாட்களுக்கு புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஆபீப் மாதத்தில், குறிக்கப்பட்ட காலத்தில் இதைச் செய்யுங்கள். ஏனெனில் அந்த மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வெளியேவந்தீர்கள். “ஒருவரும் வெறுங்கையுடன் என்முன் வரக்கூடாது. “நீங்கள் விதைத்த உங்கள் வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு, அறுவடைப் பண்டிகையைக் கொண்டாடுங்கள். “பின்பு ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், உங்கள் வயலின் விளைச்சலைச் சேர்க்கிற சேர்ப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். “இவ்வாறாக வருடத்தில் மூன்றுமுறை எல்லா ஆண்களும் ஆண்டவராகிய யெகோவா முன்பாக வரவேண்டும். “பலியின் இரத்தத்தை புளிப்பூட்டப்பட்ட எதனுடனும் சேர்த்து எனக்குச் செலுத்தவேண்டாம். “எனது பண்டிகைக் காணிக்கைகளின் கொழுப்பை மறுநாள் காலைவரை பலியிடாமல் வைத்திருக்கக்கூடாது. “உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். “பாருங்கள், வழியெல்லாம் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன்னால் ஒரு தூதனை அனுப்புகிறேன். அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவேண்டாம். ஏனெனில் என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்கமாட்டார். அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன். என் தூதன் உங்களுக்கு முன்சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்திற்கு உங்களைக் கொண்டுபோவார். நானும் அவர்களை அழித்தொழிப்பேன். நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் தெய்வச்சிலைகளையும் துண்டுகளாக நொறுக்கவேண்டும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன். உங்கள் நாட்டில் ஒருவரும் கருச்சிதைவடையவோ, மலட்டுத்தன்மை உடையவர்களாகவோ இருக்கமாட்டார்கள். உங்களுக்கு முழுமையான ஆயுள் காலத்தை நான் கொடுப்பேன். “நான் உங்களுக்கு முன்பாக என் பயங்கரத்தை அனுப்பி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டினரையும் கலங்கப்பண்ணுவேன். உங்கள் பகைவரையெல்லாம் புறமுதுகு காட்டி ஓடச்செய்வேன். ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் உங்கள் வழியைவிட்டுத் துரத்திவிட உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்புவேன். ஆனால் நான் அவர்களை ஒரு வருடத்திற்குள்ளாகவே துரத்திவிடமாட்டேன். அப்படிச் செய்தால், நாடு பாழாய்ப் போய்விடும், காட்டு விலங்குகளும் உங்களால் சமாளிக்க முடியாத அளவு பெருகிவிடும். நீங்கள் அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும் அளவுக்குப் பெருகுகிறவரைக்கும், நான் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை உங்கள் முன்னின்று துரத்துவேன். “செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல் வரைக்கும், பாலைவனம்தொடங்கி யூப்பிரடீஸ் நதிவரைக்கும் உங்கள் எல்லையை நிலைப்படுத்துவேன். அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது நீங்கள் அவர்களை உங்கள் முன்னிலையில் இருந்து வெளியே துரத்திவிடுவீர்கள். அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்யவேண்டாம். உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார்.

யாத்திராகமம் 23:14-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி. புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபீப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம். நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி. வருடத்தில் மூன்றுமுறை உன்னுடைய ஆண்மக்கள் எல்லோரும் யெகோவாவாகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரட்டும். எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரைக்கும் வைக்கவும் வேண்டாம். உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் இருக்கிறது. நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன். என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன். நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும். உங்களுடைய தேவனாகிய யெகோவாவையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். கர்ப்பம் களைகிறதும், மலடும் உன்னுடைய தேசத்தில் இருப்பதில்லை; உன்னுடைய ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவேன். எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன். உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன். தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஓராண்டிற்குள்ளே உனக்கு முன்பாக துரத்திவிடாமல், நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக துரத்திவிடுவேன். செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.

யாத்திராகமம் 23:14-33 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஒவ்வொரு ஆண்டும் மூன்று விசேஷ விடுமுறைகள் உங்களுக்கு இருக்கும். அந்நாட்களில் என்னைத் தொழுதுகொள்ளும்படி விசேஷ இடத்தில் நீங்கள் கூடுங்கள். முதலாவது, புளிப்பில்லா அப்பப் பண்டிகையாகும். நான் கட்டளையிட்டபடியே இதைக் கொண்டாடவேண்டும். புளிப்புச் சேராத ரொட்டியை நீங்கள் ஏழு நாட்கள் உண்ண வேண்டும். ஆபிப் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் அம்மாதத்தில்தான் நீங்கள் எகிப்தை விட்டு வெளியேறினீர்கள். அந்த சமயம் உங்களில் ஒவ்வொருவனும் ஒரு பலியைக் கொண்டு வரவேண்டும். “பெந்தெகோஸ்தே பண்டிகையானது ஆண்டின் இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும். உங்கள் வயல்களில் அறுவடை ஆரம்பிக்கும் கோடையின் தொடக்கத்தில் இந்த விடுமுறை நாள் வரும். “ஆண்டின் மூன்றாம் விடுமுறையானது அடைக்கலக் கூடாரப் பண்டிகையாக இருக்கும். இலையுதிர் காலத்தில் உங்கள் வயல்களின் எல்லாப் பயிர்களையும் சேர்க்கும் நாட்களில் இப்பண்டிகை வரும். “ஆகவே ஆண்டிற்கு மூன்றுமுறை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கர்த்தராகிய ஆண்டவரை வணங்கும்படி நீங்கள் எல்லோரும் கூடிவரவேண்டும். “ஒரு மிருகத்தைக் கொன்று அதன் இரத்தத்தைப் பலியாகக் கொடுத்தால், புளிப்புள்ள ரொட்டியை அதனோடு படைக்கக்கூடாது. இப்பலியிலிருந்து நீங்கள் மாமிசத்தை எடுத்து உண்ணும்போது, ஒரே நாளில் அதை முடித்துவிடவேண்டும். எஞ்சிய மாமிசத்தை அடுத்த நாளுக்காகப் பாதுகாக்க வேண்டாம். “அறுவடை காலத்தில் பயிர்களைச் சேர்க்கும்போது, பயிர்களில் முதலில் அறு வடை செய்பவற்றை தேவனாகிய கர்த்தரின் வீட்டிற்குக் (பரிசுத்த கூடாரத்திற்குக்) கொண்டுவர வேண்டும். “தாய் ஆட்டின் பாலில் வேக வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாமிசத்தைச் சாப்பிடாதீர்கள்” என்றார். தேவன், “நான் உங்களுக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்புவேன். நான் உங்களுக்கென தயாராக வைத்திருக்கிற இடத்திற்கு அத்தூதன் அழைத்துச் செல்வார். அந்தத் தூதன் உங்களைப் பாதுகாப்பார். தூதனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுங்கள். அவரை எதிர்க்காதீர்கள். நீங்கள் அவரை எதிர்த்துச் செய்கிற தவறுகளைத் தூதன் மன்னிக்கமாட்டார். அவரில் என் வல்லமை (நாமம்) இருக்கிறது. அவர் சொல்கிற எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிகொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் நான் உங்களோடிருப்பேன். உங்கள் பகைவர்களை எதிர்ப்பேன். உங்களை எதிர்க்கிற ஒவ்வொருவருக்கும் நான் பகைவனாவேன்” என்றார். தேவன், “என் தூதன் உங்களை தேசத்தில் வழி நடத்துவார். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், கானானியர், ஏவியர், எபூசியர் ஆகிய வெவ்வேறு ஜனங்களுக்கு எதிராக உங்களை வழிநடத்துவார். நான் அந்த ஜனங்களை எல்லாம் தோற்கடிப்பேன். “அந்த ஜனங்களின் தேவர்களைத் தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளுக்கு முன்பு பணியாதீர்கள். அவர்கள் வாழுகிறபடி நீங்கள் வாழாதீர்கள். அவர்களின் விக்கிரகங்களை அழித்துவிடுங்கள். அவர்கள் தெய்வங்களின் நினைவுச் சின்னங்களை உடைத்துவிடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால், உங்களை ஏராளமான ஆகாரத்தாலும், தண்ணீராலும் ஆசீர்வதிப்பேன். உங்களிலிருந்து எல்லா நோய்களையும் அகற்றுவேன். உங்களது பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும், உங்களது பெண்களின் பிரசவத்தின்போது குழந்தைகள் மரிப்பதில்லை. நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்கும்படிச் செய்வேன். “உங்கள் எதிரிகளோடு போரிடும்போது உங்களுக்கு முன்பாக என் வல்லமையின் செய்தியை அனுப்புவேன். போரில் உங்கள் எதிரிகள் குழப்பமுற்று ஓடுவார்கள். நான் உங்கள் பகைவர்களை வெல்ல உங்களுக்கு உதவுவேன். உங்கள் பகைவர்களை விரட்ட காட்டுக் குளவிகளை உங்கள் முன் அனுப்புவேன். ஏவியரும், கானானியரும் ஏத்தியரும் உங்கள் தேசத்தை விட்டுப் போவார்கள். ஆனால் உங்கள் தேசத்திலிருந்து இவர்களை உடனடியாக விரட்டமாட்டேன். ஒரே ஆண்டில் நான் இதைச் செய்தால் நாடு வெறுமையாகிவிடும். எல்லாக் காட்டு மிருகங்களும் பெருகி நாட்டை ஆக்கிரமிக்கும். அவை உங்களுக்குத் தொல்லையாக மாறும். எனவே உங்கள் நாட்டினின்று அந்த ஜனங்களை சிறிது சிறிதாக அனுப்புவேன். தேசத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் அந்நியரை உங்களுக்கு முன்பாக விரட்டுவேன். “செங்கடலிலிருந்து ஐப்பிராத்து நதி வரைக்குமுள்ள நாட்டை உங்களுக்குத் தருவேன். பெலிஸ்திய கடல் (மத்திய தரைக் கடல்) மேற்கு எல்லையாகவும் அரேபிய பாலைவனம் கிழக்கு எல்லையாகவும் இருக்கும். அங்கு வாழும் ஜனங்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்வேன். அங்குள்ள ஜனங்களெல்லோரும் விலகிப் போகும்படி செய்வீர்கள். “அவர்களோடும், அவர்களது தேவர்களோடும் எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள். அவர்கள் உங்கள் நாட்டில் தங்க விடாதீர்கள். அவர்களைத் தங்க அனுமதிப்பது உங்களுக்குக் கண்ணியாக அமையும். எனக்கு விரோதமாக பாவம் செய்யவும், அந்நிய தேவர்களை நீங்கள் தொழுதுகொள்ளவும் அவர்கள் உங்களைத் தூண்டுவார்கள்” என்றார்.

யாத்திராகமம் 23:14-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப்பண்டிகை ஆசரிப்பாயாக. புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம். நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக. வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள். எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம். உன் நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும், ஏத்தியரும், பெரிசியரும், கானானியரும், ஏவியரும், எபூசியரும், இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன். நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். கர்ப்பம் விழுகிறதும், மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன். எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன். உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன். தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல், நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன். சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய். அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்கவேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.