யாத்திராகமம் 31:1-11
யாத்திராகமம் 31:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பார், நான் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைத் தெரிந்திருக்கிறேன். நான் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பியிருக்கிறேன். அத்துடன் எல்லா வகையான வேலைகளையும் பற்றிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறேன். நான் அவனுக்குத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும், இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், இன்னும் பல வகையான வேலைப்பாடுகளில் ஈடுபடுவதற்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறேன். மேலும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபை அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.” அத்துடன் நான் உனக்குக் கட்டளையிட்டிருக்கும் யாவற்றையும் செய்யும்படி எல்லா கலைஞர்களுக்கும் வேண்டிய திறமையையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்: “சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், அதன் மேலுள்ள கிருபாசனத்தையும், சபைக் கூடாரத்தின் சகல பணிமுட்டுகளையும், மேஜையையும், அதன் பொருட்களையும், சுத்தத் தங்கக்குத்துவிளக்கையும், அதன் எல்லா உபகரணங்களையும், தூபபீடத்தையும், தகன பலிபீடத்தையும், அதன் எல்லா பாத்திரங்களையும், தொட்டிகளையும், அதன் கால்களையும், அத்துடன் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும், ஆசாரிய ஊழியத்திற்காக பயன்படுத்தும் பரிசுத்த உடைகளான நெய்யப்பட்ட உடைகளையும், அபிஷேக எண்ணெயையும், பரிசுத்த இடத்திற்குத் தேவையான நறுமணத்தூளையும் செய்ய அவர்களுக்குத் திறமையையும் கொடுத்திருக்கிறேன்.
யாத்திராகமம் 31:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து, வித்தியாசமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்வதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் அலங்காரவேலைகளைச் செய்வதற்கும், மற்றும் எல்லாவித வேலைகளையும் யூகித்துச் செய்வதற்கும் வேண்டிய ஞானமும், புத்தியும், அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன். மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் மகனாகிய அகோலியாபையும் அவனுடன் துணையாகக் கூட்டினதுமட்டுமல்லாமல், ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள். ஆசரிப்புக்கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள எல்லா பணிப்பொருட்களையும், மேஜையையும் அதின் பணிப்பொருட்களையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் எல்லா கருவிகளையும், தூபபீடத்தையும், தகனபலிபீடத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும், ஆராதனை ஆடைகளையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும், அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வாசனைப்பொருட்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடி, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
யாத்திராகமம் 31:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயை நோக்கி, “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய குமாரனான ஊரியின் குமாரன் பெசலெயேல். தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும். பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன். அவனுக்கு உதவி செய்வதற்கு தாண் கோத்திரத்திலிருந்து அகிசாமாக்கின் குமாரன் அகோலியாபை தெரிந்தெடுத்துள்ளேன். நான் உனக்குக் கூறிய எல்லாப் பொருட்களையும் செய்யும் திறமையை எல்லாப் பணியாட்களுக்கும் கொடுத்துள்ளேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள். ஆசாரிப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம், கூடாரத்தின் பணி முட்டுகளும், மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம், காணிக்கைகளை எரிக்கும் பலிபீடம், பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொட்டியும் அதன் பீடமும், ஆசாரியனாகிய ஆரோனின் விசேஷ ஆடைகள், ஆரோனின் குமாரர்கள் ஆசாரியராக சேவை செய்ய அவர்களுக்கான உடைகள், நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும்
யாத்திராகமம் 31:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன். மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் செய்வார்கள். ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும், மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபப்பீடத்தையும், தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும், ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.