எசேக்கியேல் 17:22-23
எசேக்கியேல் 17:22-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கேதுருமரத்தின் உச்சியிலிருந்து நானே ஒரு துளிரை எடுத்து அதை நாட்டுவேன். அதனுடைய நுனியிலிருக்கும் துளிர்களிலிருந்து இளங்கிளை ஒன்றை முறித்து அதை உயர்ந்ததும் கம்பீரமானதுமான மலையொன்றில் நாட்டுவேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அதை நான் நாட்டுவேன். அது கிளைகளைப் பரப்பி, பழங்களைக் கொடுத்து, சிறப்பான கேதுரு மரமாகும். எல்லாவித பறவைகளும் அதில் கூடுகட்டும். அதன் கிளைகளின் நிழலிலே அவை தஞ்சமடையும்.
எசேக்கியேல் 17:22-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாக இருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு மலையின்மேல் நாட்டுவேன். இஸ்ரவேலின் உயரமான மலையிலே அதை நாட்டுவேன்; அது கிளைகளைவிட்டு, பழம்தந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே எல்லாவித பறவைவகைகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தங்கும்.
எசேக்கியேல் 17:22-23 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்: “நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன். நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன். நானே அதனை உயரமான மலையில் நடுவேன். நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன். அக்கிளை மரமாக வளரும். அது கிளைகளாக வளர்ந்து கனிதரும். அது அழகான கேதுரு மரமாகும். பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும். பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.
எசேக்கியேல் 17:22-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன். இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.