எஸ்றா 1:7-11

எஸ்றா 1:7-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்ற பணிமுட்டுகள் ஆயிரம். பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக் கொண்டுபோனான்.

எஸ்றா 1:7-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துச்சென்று தன் தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்த, யெகோவாவின் ஆலயத்துக்குரிய பொருட்களையும் கோரேஸ் அரசன் வெளியே எடுத்துக்கொடுத்தான். பெர்சியாவின் அரசன் கோரேஸ் பொருளாளனான மித்திரோத்தின்மூலம் அவற்றை வெளியே எடுத்துவரச்செய்து, அவன் அவற்றை எண்ணி கணக்கெடுத்து யூதாவின் இளவரசனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தான். பொருட்களின் பட்டியல் இதுவே: தங்கத்தினாலான 30 தட்டுகள், வெள்ளியினாலான 1,000 தட்டுகள், வெள்ளியினாலான 29 கிண்ணங்கள், தங்கத்தினாலான 30 கிண்ணங்கள், வெள்ளியினாலான 410 கிண்ணங்கள், மற்றவை 1,000 பாத்திரங்கள். மொத்தம் 5,400 தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களாகும்.

எஸ்றா 1:7-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த யெகோவாவுடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். அவைகளின் தொகையாவது: பொன் பாத்திரங்கள் 30, வெள்ளிப்பாத்திரங்கள் 1,000, கத்திகள் 29 பொற்கிண்ணங்கள் 30 வெள்ளிக் கிண்ணங்கள் 410, மற்றப் பொருட்கள் 1,000 பொன் வெள்ளிப் பொருட்களெல்லாம் 5,400, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகும்போது எடுத்துக் கொண்டுபோனான்.

எஸ்றா 1:7-11 பரிசுத்த பைபிள் (TAERV)

கோரேசு ராஜா கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை எருசலேமிலிருந்து வெளியே எடுத்திருந்தான். அவன் அவற்றை அவனது பொய்த் தெய்வங்கள் இருக்கும் ஆலயத்தில் வைத்திருந்தான். பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு அப்பொருட்களை வெளியே கொண்டு வரும்படி கருவூலக்காரனிடம் சொன்னான். அவனது பெயர் மித்திரேதாத். அவன் அதனை எடுத்து வந்து யூதாவின் தலைவனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து மித்திரேதாத் எடுத்து வந்த பொருட்களின் விபரம்: தங்கத் தட்டுகள் 30, வெள்ளித் தட்டுகள் 1,000, கத்திகளும், சட்டிகளும் 29, பொற்கிண்ணங்கள் 30 தங்கக் கிண்ணங்களைப் போன்ற வெள்ளிக் கிண்ணங்கள் 410 மற்ற தட்டுகள் 1,000 ஆக மொத்தம், பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டப் பொருட்கள் 5,400. கைதிகள் பாபிலோனில் இருந்து எருசலேமிற்குத் திரும்பிப் போனபோது சேஸ்பாத்சார் இப்பொருட்களைக் கொண்டு வந்தான்.