கலாத்தியர் 4:27-31

கலாத்தியர் 4:27-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், “பிள்ளை பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு; பிரசவ வேதனைப்படாதவளே, மகிழ்ச்சியுடன் சத்தமிடு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்” என்று எழுதியிருக்கிறதே. பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். அக்காலத்தில் சாதாரண முறையில் பிறந்த மகன், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே, இப்பொழுதும் நடைபெறுகிறது. ஆனால் வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; ஏனெனில், அடிமைப்பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.” ஆகவே பிரியமானவர்களே, நாம் மோசேயின் சட்டத்தில் கட்டுப்பட்ட அடிமைப்பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளைகள்.

கலாத்தியர் 4:27-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது. சகோதரர்களே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஆனாலும் சரீரத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுதந்திரமுள்ளவளுடைய மகனோடு வாரிசாக இருப்பதில்லை; ஆகவே, அடிமையானவளையும், அவளுடைய மகனையும் வெளியே தள்ளு என்று சொல்லுகிறது. இப்படியிருக்க, சகோதரர்களே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாக இல்லாமல், சுதந்திரமுள்ளவளுக்கே பிள்ளைகளாக இருக்கிறோம்.

கலாத்தியர் 4:27-31 பரிசுத்த பைபிள் (TAERV)

கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது. “பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு. எப்போதும் நீ குழந்தை பெறாதவள். உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது. அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு. கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.” ஆபிரகாமின் ஒரு பிள்ளை சாதாரண முறையில் பிறந்தவன். அவரது இன்னொரு பிள்ளை தேவனுடைய வாக்குறுதிப்படி ஆவியானவரின் வல்லமையால் பிறந்தான். சகோதர சகோதரிகளே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியால் வந்த பிள்ளைகளே! சாதாரண முறையில் பிறந்தவன், ஈசாக்கை மிக மோசமாக நடத்தினான். அது போலவே இன்றும் நடைபெறுகிறது. ஆனால் வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது? “அடிமைப் பெண்ணையும் அவளது குமாரனையும் தூக்கி எறியுங்கள். அடிமையாய் இல்லாதவளின் குமாரன் அவனது தந்தைக்குரியவற்றை எல்லாம் பெற்றுக்கொள்வான். ஆனால் அடிமைப் பெண்ணின் மகனோ எதையும் பெற்றுக்கெள்ளமாட்டான்.” ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல. நாம் சுதந்தரமான பெண்ணின் பிள்ளைகள்.

கலாத்தியர் 4:27-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது. சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.