ஆகாய் 1:9-13

ஆகாய் 1:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடாமலும் போயிற்று. நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார். அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஆகாய் 1:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் அது மிகக் கொஞ்சமாக மாறிற்று. நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் ஆலயம் பாழடைந்து கிடக்கையில் நீங்கள் உங்கள் வீடுகளைப் பற்றியே அதிக கருத்தாய் இருக்கிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஆகவே உங்களின் அலட்சியத்தால் வானம் பனியைப் பெய்யாமலும், நிலம் விளைச்சலை கொடுக்காமலும் போயிற்று. நான் வயலின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத் திராட்சை இரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மேலும், மனிதர்மேலும், மந்தைகள்மேலும், உங்கள் கைகளின் முயற்சிகள்மேலும் வறட்சியை வருவித்தேன். அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவா இறைவாக்கினன் ஆகாயை அனுப்பியதால், அவனுடைய செய்திகளுக்கும் கீழ்ப்படிந்தார்கள். மக்களோ யெகோவாவுக்குப் பயந்தார்கள். அப்பொழுது யெகோவாவின் தூதுவனாகிய ஆகாய், யெகோவாவின் இந்தச் செய்தியை மக்களுக்குக் கொடுத்து, “நான் உங்களுடன் இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றான்.

ஆகாய் 1:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடுக்காமலும் போனது. நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சைரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனிதர்களின்மேலும், மிருகங்களின்மேலும், கைவேலை அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார். அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், இஸ்ரவேல் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கும், தங்கள் தேவனாகிய யெகோவா அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், மக்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள். அப்பொழுது யெகோவாவுடைய தூதனாகிய ஆகாய், யெகோவா தூதனுப்பிய வார்த்தையின்படி மக்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

ஆகாய் 1:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களாகிய நீங்கள் பெரும் அறுவடையை எதிர்பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறுவடைப் பொருட்களை எடுக்கப் போகும்போது அங்கே கொஞ்சம்தான் தானியம் இருக்கிறது. எனவே அந்தத் தானியத்தை வீட்டிற்குக் கொண்டுவருகிறீர்கள். பிறகு நான் காற்றை அனுப்புகிறேன். அதனை அது அடித்துச்செல்லும். ஏன் இவை நிகழுகின்றன. ஏனென்றால் நீங்கள் எல்லாரும் அவரவர் வீட்டை கவனித்துக்கொள்ள ஓடிப்போகும்போது எனது வீடு இன்னும் அழிந்த நிலையில் உள்ளது. அதனால்தான் வானம் பனியை வரப்பண்ணாமல் இருக்கிறது. அதனால்தான் பூமி விளைச்சலைத் தராமல் உள்ளது.” கர்த்தர் கூறுகிறார்: “நான் நிலங்களும் குன்றுகளும் வறண்டுபோகும்படிக் கட்டளை கொடுத்தேன். தானியம், புதிய திராட்சைரசம், ஒலிவ எண்ணெய், பூமி உற்பத்தி செய்கிற அனைத்தும் அழிக்கப்பட்டன. அனைத்து ஜனங்களும், அனைத்து விலங்குகளும் பலவீனமாவார்கள். மனிதரின் அனைத்து உழைப்பும் பயனற்றுப்போகும்.” தேவனாகிய கர்த்தர் செயல்த்தியேலின் குமாரானாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் கேட்க, பேசிட ஆகாயை அனுப்பினார். எனவே இம்மதனிதர்களும், அனைத்து ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய குரலுக்கும், அவர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவி கொடுத்தார்கள். ஜனங்கள் கர்த்தருக்கு முன்னால் பயந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இச்செய்தியை ஜனங்களுக்குச் சொல்ல தேவனாகிய கர்த்தர் அனுப்பிய தூதுவன்தான் ஆகாய். கர்த்தர், “நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார்.