ஆகாய் 2:14-23

ஆகாய் 2:14-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது. இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான். இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்: நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள். சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ஆகாய் 2:14-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது ஆகாய் அவர்களிடம் சொன்னதாவது, “ ‘அப்படியே இந்த மக்களும், இந்த நாடு முழுவதும் என் பார்வையில் இருக்கிறார்கள்,’ என யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எதைச் செய்தாலும், அவர்கள் எதைச் செலுத்தினாலும் அவை எல்லாம் அவருக்கு அசுத்தமுள்ளதாய் இருக்கின்றன. “ ‘இப்போதாவது, இதை மிகக் கவனமாய் சிந்தியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி, அஸ்திபாரம் போட்டும் ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்படும் முன்பு நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள். இருநூறு கிலோகிராம் தானியக் குவியலுக்கு அருகில் ஒருவன் வந்தபோது, அங்கு பத்து நூறு கிலோகிராம் மட்டுமே இருந்தன. திராட்சை ஆலையின் தொட்டிக்கு ஒருவன் ஐம்பது குடங்கள் திராட்சை இரசம் மொள்ள வந்தபோது, அங்கு இருபது குடங்கள் மட்டுமே இருந்தன. நான், நீங்கள் கையிட்டுச் செய்த பயிர்களை இலைசுருட்டி வியாதியினாலும், பூஞ்சண வியாதியினாலும், பனிக்கட்டி மழையினாலும் அழித்தேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை,’ என யெகோவா அறிவிக்கிறார். ‘யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்த நாளிலிருந்து, ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாளாகிய இந்த நாள்வரை, நடந்தவற்றைக் கவனமாய் சிந்தித்துப் பாருங்கள். களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் ஏதாவது மீதியாயிருக்கிறதா? திராட்சைக்கொடியும், அத்திமரமும், மாதுளஞ்செடியும், ஒலிவமரமும் இதுவரை காய்க்கவில்லையே. “ ‘ஆனால், இன்றுமுதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன்.’ ” அம்மாதம் இருபத்து நான்காம் தேதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும், இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: “யூதாவின் ஆளுநரான செருபாபேலுக்கு நீ சொல்லவேண்டியதாவது, நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன். அரச அரியணைகளையும் கவிழ்ப்பேன். அந்நிய அரசுகளின் வல்லமையையும் சிதறடிப்பேன். தேர்களையும், அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன்; குதிரைகளுடன் அதில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் தங்கள் சகோதரனின் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். “சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘என் பணியாளனாகிய செருபாபேலே! செயல்தியேலின் மகனே, அப்போது நான் உன்னை எடுத்து என் முத்திரை மோதிரத்தைப் போலாக்குவேன் என யெகோவா அறிவிக்கிறார், ஏனெனில் நானே உன்னைத் தெரிந்துகொண்டேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”

ஆகாய் 2:14-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த மக்களும் இந்த தேசத்தாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லா செயல்களும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது. இப்போதும் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டதுமுதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது. பிஞ்சுக்காய்களினாலும், விஷப்பனியினாலும், கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலைகளிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியாகிய இந்நாள்முதல் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சைச்செடியும், அத்திமரமும், மாதுளம்செடியும், ஒலிவமரமும் பழங்களைக் கொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான். இருபத்திநான்காம் தேதியாகிய அதே நாளிலே யெகோவாவுடைய வார்த்தை இரண்டாவதுமுறை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்: நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையச்செய்து, இராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, தேசங்களுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள். சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ஆகாய் 2:14-23 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு ஆகாய், “தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘இந்த ஜனங்களைக் குறிக்கும் இது உண்மையாகும். அவர்கள் எனக்கு முன்னால் தூய்மையும் பரிசுத்தமும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் கைகளால் தொடுகிற எதுவுமே தீட்டாகும. பலிபீடத்திற்கு கொண்டு வருகிற எதுவுமே தீட்டாகும். “‘இன்றைக்கு முன்பு நடந்த இவற்றைப்பற்றி நினைத்துப்பாருங்கள். கர்த்தருடைய ஆலயத்தை நீங்கள் கட்டுவதற்கு முன் உள்ளதை நினைத்துப் பாருங்கள். ஜனங்கள் 20 மரக்கலம் தானியம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் அம்பாரத்தில் 10 மரக்கலம் தானியம்தான் இருந்தது. ஜனங்கள் 50 ஜாடி திராட்சைரசம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் 20 ஜாடி இரசமே ஆலையின் தொட்டியில் இருந்தது. ஏனென்றால், நான் உங்களைத் தண்டித்தேன். உங்கள் பயிர்களை அழிப்பதற்குரிய நோய்களை அனுப்பினேன். நான் கல் மழையை உங்கள் கைகளால் செய்தவற்றை அழிக்க அனுப்பினேன். நான் இவற்றைச் செய்தேன். ஆனால் நீங்கள் இன்னமும் என்னிடம் வரவில்லை.’ கர்த்தரே இவற்றைச் சொன்னார்” என்றான். கர்த்தர், “இன்று ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதி. நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டு முடித்திருக்கிறீர்கள். எனவே இன்றிலிருந்து என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். அம்பாரத்தில் இன்னும் தானியம் இருக்கிறதா? இல்லை. திராட்சை கொடிகள், அத்தி மரங்கள், மாதளஞ் செடிகள், ஒலிவமரங்கள் ஆகியவற்றைப் பாருங்கள். அவை பழங்களைத் தருகின்றனவா? இல்லை. ஆனால் இன்று முதல் நான் உங்களை ஆசீர்வதிப்பேன்!” என்றார். இன்னொரு செய்தி கர்த்தரிடமிருந்து ஆகாய்க்கு இம்மாதத்தின் இருபத்திநான்காம் நாள் வந்தது. இதுதான் செய்தி: “யூதாவின் ஆளுநரான செருபாபேலிடம் செல்லுங்கள். நான் பரலோகத்தையும், பூமியையும் அசைப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள். நான் பல ராஜாக்களையும் அரசுகளையும் தூக்கி எறிவேன். இவ்வரசுகளின் வலிமையை நான் அழித்துப்போடுவேன். நான் இரதங்களையும், அதில் பயணம் செய்வோரையும் அழித்துப்போடுவேன். அந்தப் படை வீரர்கள் இப்பொழுது நண்பர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வரும் நாட்களில் எதிரிகளாக வாளினால் ஒருவரையொருவர் கொன்றுப் போடுவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார். செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலே, நீ என்னுடைய வேலைக்காரன். நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்நேரத்தில், நான் உன்னை முத்திரை மோதிரமாகச் செய்வேன். நான் இவற்றைச் செய்திருக்கிறேன் என்பதற்கு நீயே அத்தாட்சியாக இருப்பாய்!” என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொன்னார்.