ஓசியா 2:1-16

ஓசியா 2:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்கள் சகோதரரைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள். உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள். இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன். அவளுடைய பிள்ளைகள் சோரப்பிள்ளைகளாகையால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன். அவர்களுடைய தாய் சோரம்போனாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இலச்சையான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுமயிரையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நேசர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள். ஆகையால், இதோ, நான் உன் வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக்கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன். அவள் தன் நேசர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின புருஷனிடத்துக்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள். தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள். ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன். இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை. அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன். என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும். அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி, அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.

ஓசியா 2:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அந்நாளிலே உங்கள் சகோதரர்களைப் பார்த்து, ‘நீங்கள் என் மக்கள்’ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து, ‘என் அன்புக்குரியவள்’ என்றும் சொல்லுங்கள். “உங்கள் தாயைக் கண்டியுங்கள், அவளைக் கண்டியுங்கள், அவள் என் மனைவி அல்ல, நான் அவள் கணவனும் அல்ல. அவள் தன் விபசாரப் பார்வையை தன் முகத்தை விட்டகற்றட்டும்; தன் உண்மையற்ற தன்மையைத் தன் மார்பகங்களிடையே இருந்தும் விலக்கட்டும். இல்லாவிட்டால் நான் அவளை உரிந்து நிர்வாணமாக்கி, அவள் பிறந்த நாளில் இருந்ததுபோலவே அவளை வெறுமையாக வைப்பேன்; அவளைப் பாலைவனத்தைப் போலாக்குவேன், வறண்ட நிலமாக்கி, அவளைத் தாகத்தினால் சாகப்பண்ணுவேன். நான் அவளது பிள்ளைகளில் அன்புகாட்டமாட்டேன். ஏனெனில் அவர்கள் வேசிப்பிள்ளைகள். அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்; அவர்களை வெட்கக்கேடான முறையில் கர்ப்பந்தரித்தாள். அவளோ, ‘நான் காதலர்களுக்குப் பின்னே போவேன், அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும், கம்பளி உடையும், மென்பட்டு உடையும், எண்ணெயும், பானமும் தருவார்கள்’ என்றாள். எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்; அவள் தன் வழியை கண்டுபிடிக்க முடியாதபடி அவளைச்சுற்றி மதில் கட்டுவேன். அவள் தன் காதலர்கள் பின்னால் ஓடுவாள்; ஆயினும் அவர்களைக் கண்டுபிடிக்கமாட்டாள். அவள் அவர்களைத் தேடுவாள், ஆனாலும் கண்டுபிடிக்கமாட்டாள். அப்பொழுது அவள், ‘நான் முன்னிருந்ததுபோல என் கணவனிடம் திரும்பிப் போவேன்; ஏனெனில் அப்பொழுது நான் இதைவிட நலமாயிருந்தேன்’ என்பாள். நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்றும், நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாய்க் கொடுத்தேன் என்றும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வத்துக்குப் பயன்படுத்தினார்கள். “ஆகையால், நான் எனது தானியம் முதிரும்போது, அதை எடுத்துப்போடுவேன், எனது புதுத் திராட்சை இரசம் ஆயத்தமாகும்போது, அதையும் எடுத்துப்போடுவேன். அவளது நிர்வாணத்தை மூடுவதற்கு நான் கொடுத்திருந்த எனது கம்பளி உடையையும், எனது மென்பட்டு உடையையும் எடுத்துப்போடுவேன். நான் அவளது காதலர்களின் கண்களுக்கு முன்பாக, அவளது வெட்கக்கேட்டை வெளிப்படுத்துவேன்; எனது கைகளிலிருந்து ஒருவராலும் அவளை விடுவிக்க முடியாது. நான் அவளது எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்துவேன்: வருடாந்தர விழாக்கள், அமாவாசைகள், ஓய்வுநாட்கள் ஆகிய அவளது நியமிக்கப்பட்ட எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்திவிடுவேன். தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும், அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் நான் பாழாக்குவேன். நான் அவற்றை புதர்க் காடாக்குவேன், காட்டு மிருகங்கள் அவற்றை அழித்துப்போடும். அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டிய நாட்களுக்காக, நான் அவளைத் தண்டிப்பேன்; அவள் தன் காதணிகளினாலும் நகைகளினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் காதலர்களைப் பின்தொடர்ந்து போனாள். என்னையோ மறந்துவிட்டாள்” என்று யெகோவா சொல்கிறார். “நான் அவளை வசப்படுத்தப் போகிறேன்; நான் அவளை பாலைவனத்திற்கு அழைத்துச்சென்று, அங்கே அவளோடு அன்பாகப் பேசுவேன். அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை நான் அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; நான் ஆகோர் என்னும் கஷ்டத்தின் பள்ளத்தாக்கை, எதிர்பார்ப்பின் கதவாக ஆக்குவேன். அவள் தன் வாலிப நாட்களில் தான் எகிப்திலிருந்து வந்தபோது, பாடியதுபோல் அங்கே பாடுவாள். “அந்த நாளிலே, நீ என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்காமல், ‘என் கணவனே’ என்று அழைப்பாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

ஓசியா 2:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்கள் சகோதரர்களைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள். உங்கள் தாயுடன் வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் தன் விபச்சாரச்செயலை தன் முகத்திலிருந்தும், தன் விபசாரங்களைத் தன் இருப்பிடத்தின் நடுவிலிருந்தும் விலக்கிப்போடவேண்டும். இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்கி, அவள் பிறந்தநாளில் இருந்ததுபோல அவளை நிறுத்தி, அவளை வெட்டவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகச்செய்வேன்; அவளுடைய பிள்ளைகள் விபச்சாரப்பிள்ளைகளானதால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன். அவர்களுடைய தாய் விபச்சாரம்செய்தாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இழிவான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுரோமத்தையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நாயகர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள். ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன். அவள் தன் நாயகர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின கணவனிடத்திற்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள். தனக்கு நான் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகச்செய்தவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக மாற்றினார்கள். ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சைரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுரோமத்தையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன். இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை. அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியச்செய்வேன். என் நேசர்கள் எனக்குக் கொடுத்த கூலி என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சைச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாக்கிப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைச் சாப்பிடும். அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களுக்காக அவளை விசாரிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஆனாலும், இதோ, நான் அவளுக்கு ஆசைகாட்டி, அவளை வனாந்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளுடன் ஆதரவாகப் பேசி, அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோர் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார்.

ஓசியா 2:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

“பிறகு உங்கள் சகோதரர்களிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பீர்கள். நீங்கள் உங்கள் சகோதரிகளிடம், ‘உங்கள்மேல் அவர் இரக்கம் காட்டியிருக்கிறார்’ என்பீர்கள்.” “உங்கள் தாயோடு வழக்காடுங்கள். ஏனென்றால் அவள் எனது மனைவியல்ல. நான் அவளது கணவனும் அல்ல. அவளிடம் ஒரு வேசியைப் போன்று நடந்துக் கொள்வதை நிறுத்தவேண்டும் என்று சொல்லுங்கள், அவளது மார்பகங்களில் இருந்து தனது நேசர்களை விலக்கும்படி அவளுக்குச் சொல்லுங்கள். அவள் தனது சோரத்தை நிறுத்தாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்குவேன். நான் அவளைத் தனது பிறந்தநாளில் இருந்ததைப் போலாக்குவேன். நான் அவளது ஜனங்களை வெளியேற்றுவேன். அவள் காலியான வறண்ட பாலைவனம் போலாவாள். அவளை நான் தாகத்தால் மரிக்கச் செய்வேன். நான் அவளது பிள்ளைகள் மேல் இரக்கப்படமாட்டேன். ஏனென்றால் அவர்கள் வேசிப் பிள்ளைகள். அவர்களின் தாய் ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொண்டாள். அவர்களது தாய் தனது செயல்களுக்காக அவமானம் அடையவேண்டும். அவள், ‘நான் என் நேசர்களிடம் செல்வேன். என்னுடைய நேசர்கள் எனக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பார்கள். அவர்கள் எனக்குக் கம்பளியும் ஆடையும் தருவார்கள். அவர்கள் எனக்குத் திராட்சைரசத்தையும் ஒலிவ எண்ணெயையும் தருவார்கள்’ என்றாள். “எனவே, நான் (கர்த்தர்) உங்கள் (இஸ்ரவேலின்) பாதையை முட்களால் அடைப்பேன். நான் சுவர் எழுப்புவேன். பிறகு அவள் தனது பாதையைக் கண்டுகொள்ள முடியாமல் போவாள். அவள் தனது நேசர்களின் பின்னால் ஓடுவாள். ஆனால் அவளால் அவர்களைப் பிடிக்க முடியாது. அவள் தன் நேசர்களுக்காகத் தேடிக்கொண்டிருப்பாள். ஆனால் அவளால் அவர்களைக் கண்டுக்கொள்ள முடியாது. பிறகு அவள், ‘நான் எனது முதல் கணவனிடம் (தேவன்) திரும்பிப்போவேன். நான் அவரோடு இருந்தபோது எனது வாழ்க்கை நன்றாக இருந்தது. இப்பொழுது இருக்கிறதை விட அன்று வாழ்க்கை நன்றாக இருந்தது’ என்பாள். “அவள் (இஸ்ரவேல்), நான் (கர்த்தர்) ஒருவர்தான் அவளுக்குத் தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்பதை அறியவில்லை. நான் அவளுக்கு மேலும், மேலும் வெள்ளியும் பொன்னும் கொடுத்துவந்தேன். ஆனால் இஸ்ரவேலர்கள் அந்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்தி பாகாலுக்கான உருவச் சிலைகளைச் செய்தனர். எனவே நான் (கர்த்தர்) திரும்பி வருவேன். நான், என் தானியத்தை அதன் அறுவடைக் காலத்தில் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் திராட்சை பழங்கள் தயாராக இருக்கும்போது எனது திராட்சைரசத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் எனது கம்பளியையும், சணலையும் திரும்ப எடுத்துக்கொள்வேன். இவற்றையெல்லாம் நான் அவளது நிர்வாணத்தை மறைப்பதற்காகக் கொடுத்தேன். இப்பொழுது நான் அவளது ஆடைகளை நீக்குவேன். அவள் நிர்வாணமாவாள். எனவே அவளது நேசர்கள் அவளைப் பார்க்க முடியும். எவராலும் எனது அதிகாரத்திலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது. நான் (தேவன்) அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும் எடுத்துக் கொள்வேன். நான் அவளது பண்டிகைகளையும், மாத பிறப்பு நாட்களையும், ஓய்வு நாட்களையும் சபை கூடுகிற எல்லா ஆசரிப்புகளையும் நிறுத்துவேன். நான் அவளது திராட்சைத்தோட்டங்களையும் அத்திமரங்களையும் அழிப்பேன். அவள், ‘எனது நேசர்கள் இவற்றை எனக்குக் கொடுத்தனர்’ என்பாள். ஆனால் நான் அவளது தோட்டத்தைக் காடாக்கும்படி செய்வேன். காட்டுமிருகங்கள் வந்து அவற்றைக் தின்னும். “அவள் பாகால்களுக்குச் சேவைசெய்தாள். எனவே நான் அவளைத் தண்டிப்பேன். அவள் பாகலுக்கு நறுமணப்பொருட்களை எரித்தாள். அவள் ஆடை அணிவித்தாள், அவள் தனது நகைகளையும், மூக்குத்தியையும் அணிவித்தாள். பிறகு அவள் தனது நேசர்களிடம் போய் என்னை மறந்துவிட்டாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார். “அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள்.