ஓசியா 4:6-19

ஓசியா 4:6-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன். அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள். ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள். வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும். என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம்போனார்கள். அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள். உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள். இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக. இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது; இப்போது கர்த்தர் அவர்களை விஸ்தாரமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையப்பண்ணுவார். எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு. அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள். காற்று அவர்களைத் தன் செட்டைகளில் இறுகப்பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.

ஓசியா 4:6-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள். “நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள், அதனால் நானும் உங்களை என் ஆசாரியர்களாய் இராதபடிக்கு புறக்கணிப்பேன். நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால், நானும் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க மறந்துவிடுவேன். ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது, அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள். எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து, அவர்களது கொடுமையில் ஆவலாயிருக்கிறார்கள். அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும். எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன். அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன். “அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்; அவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் பலுகமாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் தங்கள் வேசித்தனத்திற்காக யெகோவாவைக் கைவிட்டார்கள். புது மற்றும் பழைய திராட்சை இரசம் எனது மக்களின் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை பரித்துவிட்டது. எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள். வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது; அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள். எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும், மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள். “உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும், மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும் நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன். ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு, கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள், அறிவில்லாத அம்மக்கள் சீரழிந்து போவார்கள். “இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும். “நீ கில்காலுக்குப் போகவேண்டாம்; பெத்தாவேனுக்கும் போகவேண்டாம். ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம். இஸ்ரயேலரோ அடங்காத இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள். அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில் செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்? எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்; அவனைத் தனியே விட்டுவிடு! அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும், அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்; அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள். சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும், அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள் அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும்.

ஓசியா 4:6-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மக்கள் அறிவில்லாததினால் அழிகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாக இல்லாமலிருக்க நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். அவர்கள் எவ்வளவாகப் பெருகினார்களோ, அவ்வளவாக எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை வெட்கமாக மாறச்செய்வேன். அவர்கள் என் மக்களின் பாவத்தைச் சாப்பிட்டு, அவர்களுடைய அக்கிரமத்தின்மேல் பசிதாகமாக இருக்கிறார்கள். ஆதலால் மக்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்களுடைய செயல்களின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். அவர்கள் யெகோவாவை மதிக்காமல் இருக்கிறதினால் அவர்கள் சாப்பிட்டாலும் திருப்தியடையாமல் இருப்பார்கள்; அவர்கள் விபசாரம் செய்தாலும் பெருகாமல் இருப்பார்கள். வேசித்தனமும் திராட்சைரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும். என் மக்கள் மரக்கட்டையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கைத்தடி அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்று இருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி அலையச்செய்தது; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திராமல் விபச்சாரவழியில் போனார்கள். அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள். உங்கள் மகள்கள் வேசித்தனம் செய்கிறதினாலும், உங்கள் மருமக்கள்கள் விபசாரம் செய்கிறதினாலும், நான் அவர்களை தண்டிக்காமல் இருப்பேனோ? அவர்கள் விலகி விபச்சாரிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத மக்கள் அதினால் அகப்பட்டு விழுவார்கள். இஸ்ரவேலே, நீ என்னைவிட்டுப் போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்திற்கு உட்படாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும், யெகோவாவுடைய ஜீவன்மேல் என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக. இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல அடங்காதிருக்கிறது; இப்போது யெகோவா அவர்களை விசாலமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையச் செய்வார். எப்பிராயீம் சிலைகளோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு. அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் வழிவிலகிப்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று வெட்கமானதை நாடுகிறார்கள். காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் இறுகப்பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.

ஓசியா 4:6-19 பரிசுத்த பைபிள் (TAERV)

“எனது ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அறிவில்லை. நீ கற்றுக்கொள்ள மறுத்திருக்கிறாய். எனவே, நீ எனக்கு ஆசாரியனாக இருக்கிறதை நான் மறப்பேன். நீ உனது தேவனுடைய சட்டங்களை மறந்திருக்கிறாய். எனவே நான் உன் பிள்ளைகளை மறப்பேன். அவர்கள் தற்பெருமை கொண்டார்கள். அவர்கள் எனக்கு எதிராக மேலும், மேலும் பாவங்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களது மகிமையை அவமானமாக்குவேன். “ஆசாரியர்கள் ஜனங்களின் பாவத்தில் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் அப்பாவங்களை மேலும், மேலும் விரும்பினார்கள். எனவே, ஆசாரியர்கள் எவ்விதத்திலும் ஜனங்களை விட வித்தியாசமானவர்களாக இல்லை. நான் அவர்களை அவர்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிப்பேன். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக அதற்குரிய பலனை அளிப்பேன். அவர்கள் உண்பார்கள். ஆனால் அது அவர்களுக்குத் திருப்தியைத் தராது. அவர்கள் பாலினஉறவு பாவத்தை செய்வார்கள். ஆனால் குழந்தைகள் பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரை விட்டு விலகி விபச்சாரிகளைப் போன்று ஆகிவிட்டார்கள். “வேசித்தனமும், பலமான குடியும். புதிய திராட்சைரசமும் ஒருவனின் சிந்தனைச் சக்தியை அழித்துவிடும், எனது ஜனங்கள் மரக்கட்டைகளிடம் ஆலோசனை கேட்கின்றார்கள், அவர்கள் அக்கட்டைகள் பதில் சொல்லும் என்று எண்ணுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வேசிகளைப்போன்று அந்நியத் தெய்வங்களை துரத்திக்கொண்டு போயிருக்கிறார்கள், அவர்கள் தமது தேவனை விட்டு, விட்டு வேசிகளைப் போன்று ஆனார்கள். அவர்கள் மலைகளின் உச்சியில் பலிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கர்வாலி மரங்கள், புன்னைமரங்கள், அரசமரங்கள் ஆகியவற்றின் கீழே நறுமணத்தூபங்களை எரிக்கிறார்கள் அம்மரங்களின் நிழல்கள் பார்க்கையில் அழகாக இருக்கின்றன. எனவே உங்கள் மக்கள் விபச்சாரிகளைப்போன்று அம்மரங்களுக்கு அடியில் படுத்துக்கொள்கின்றனர். உங்கள் மருமகள்களும் விபச்சாரம் செய்கின்றார்கள். “நான் உங்கள் குமாரத்திகள் வேசிகளைப் போன்று நடந்துக்கொள்வதையும் உங்கள் மருமகள்கள் விபச்சாரம் செய்வதையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆண்கள் போய் வேசிகளோடு படுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் கோவில் வேசிகளோடு பலிகள் இடுகின்றார்கள். எனவே அம்முட்டாள் ஜனங்கள் தம்மைத்தாமே அழித்துகொள்கின்றார்கள். “இஸ்ரவேலே, நீ ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறாய். ஆனால் யூதாவை அக்குற்றத்துக்கு ஆளாக்காதே. கில்காலுக்குப் போகாதே. பெத்தாவேனுக்கும் போகாதே. ஆணையிடுவதற்குக் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தாதே. ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு …’ என்று ஆணையிடாதே. கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஏராளமானவற்றைக் கொடுத்திருக்கிறார். அவர் தம் ஆடுகளை ஏராளம் புல்லுள்ள சமவெளிக்குக் கூட்டிப்போகும் நல்ல மேய்ப்பனைப் போன்றவர். ஆனால் இஸ்ரவேல் பிடிவாதமாக இருக்கிறது. இஸ்ரவேல் அடங்காமல் மீண்டும், மீண்டும் ஓடும் கன்றுக் குட்டியைப் போன்றிருக்கிறது. “எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். எனவே அவனைத் தனியே விட்டுவிடு. எப்பிராயீம் குடித்தவர்களோடு சேர்ந்துகொண்டு விபசாரிகளைப்போல செயல்படுகிறான். அவர்கள் தங்கள் நேசர்களுடன் இருக்கட்டும். அவர்கள் அத்தேவர்களிடம் பாதுகாப்புக்காகச் சென்றார்கள். அவர்கள் தம் சிந்தனையின் வலிமையை இழந்துவிட்டார்கள். அவர்களது பலிகள் அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வருகின்றன.”