ஏசாயா 54:4-8
ஏசாயா 54:4-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பயப்படாதே, நீ வெட்கப்படமாட்டாய்; அவமானத்திற்குப் பயப்படாதே, நீ தாழ்த்தப்படமாட்டாய். நீ உன் வாலிப காலத்தின் வெட்கத்தை மறந்துபோவாய், விதவைக்கால நிந்தனையையும் இனி ஒருபோதும் நினைக்கமாட்டாய். ஏனெனில், உன்னைப் படைத்தவரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர், இஸ்ரயேலின் பரிசுத்தரே உனது மீட்பர்; அவர் பூமி முழுவதற்கும் இறைவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும், இளமையில் திருமணம் செய்தும் விலக்கப்பட்ட மனைவியைத் திரும்பவும் அழைப்பதுபோலவும் யெகோவா உன்னைத் திரும்பவும் அழைப்பார்” என்று உனது இறைவன் சொல்கிறார். “நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன், ஆனால் ஆழ்ந்த இரக்கத்துடன் நான் உன்னைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வேன். என் கோபம் பொங்கி எழுந்ததால், உன்னிடமிருந்து என் முகத்தை ஒரு நொடிப்பொழுதே மறைத்தேன்; ஆனால், நித்திய தயவுடன் நான் உன்னில் இரக்கங்கொள்வேன்” என்று, உன் மீட்பராகிய யெகோவா சொல்கிறார்.
ஏசாயா 54:4-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; வெட்கப்படாதே, நீ அவமானமடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினைக்காமலிருப்பாய். உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான பெண்ணைப்போலவும், இளம்பிராயத்தில் திருமணம்செய்து விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் யெகோவா அழைத்தார் என்று உன் தேவன் சொல்கிறார். இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று யெகோவாவாகிய உன் மீட்பர் சொல்கிறார்.
ஏசாயா 54:4-8 பரிசுத்த பைபிள் (TAERV)
அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய். உனக்கு எதிராக ஜனங்கள் தீயவற்றைச் சொல்லமாட்டார்கள். நீ இலச்சையடைவதில்லை. நீ இளைஞனாக இருந்து அவமானத்தை உணர்ந்தாய். ஆனால், இப்போது அந்த அவமானத்தை மறந்துவிட்டாய். நீ உன் கணவனை இழந்தபோது அடைந்த அவமானத்தை இப்போது நினைக்கமாட்டாய். ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவர் அவர் ஒருவரே. அவர் இஸ்ரவேலின் பரிசுத்தமானவர். அவர் பூமி முழுவதற்குமான தேவன் என்று அழைக்கப்படுவார். “கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய். உன் ஆவியில் மிகவும் துக்கமுடையவளாக இருந்தாய். ஆனால், கர்த்தர் அவருடையவளாக உன்னை அழைத்தார். இளம் வயதில் திருமணம் செய்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய். ஆனால், தேவன் உன்னை அவருடையவளாக அழைத்தார்.” தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன். ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான். நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன். நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன். நான் மிகவும் கோபம்கொண்டேன். கொஞ்ச காலத்திற்கு உன்னிடமிருந்து மறைந்திருந்தேன். ஆனால் என்றென்றும் உன்னைத் தயவுடன் ஆறுதல்படுத்துவேன்” உனது மீட்பரான கர்த்தர் இதனைக் கூறினார்.
ஏசாயா 54:4-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய். உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.