யாக்கோபு 1:4-11

யாக்கோபு 1:4-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.

யாக்கோபு 1:4-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மனவுறுதி உங்களில் முழுமையாய் செயலாற்றுகிறபொழுது, நீங்கள் முதிர்ச்சி பெற்றவர்களாயும், எதிலுமே குறைவுபடாது முழுநிறைவு பெற்றவர்களாயும் இருப்பீர்கள். உங்களில் யாராவது ஞானத்தில் குறைவுள்ளவராக இருந்தால், அவர்கள் இறைவனிடம் கேட்கவேண்டும். அப்பொழுது அது அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் இறைவன் குற்றங்குறை பாராமல், எல்லோருக்கும் தாராளமாய்க் கொடுக்கிறவராய் இருக்கிறார். ஆனாலும், நீங்கள் கேட்கும்போது, விசுவாசத்துடன் கேட்கவேண்டும், சந்தேகப்படக்கூடாது. ஏனெனில் சந்தேகப்படுகிறவர்கள், காற்றினால் அங்குமிங்கும் அடிக்கப்படுகிற கடலின் அலையைப் போலிருக்கிறார்கள். சந்தேகப்படுகிறவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெறலாமென்று நினைக்கக்கூடாது; அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்கள். அவர்கள் செய்வதிலெல்லாம் உறுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். தாழ்ந்த நிலைமையில் இருக்கின்ற ஒரு சகோதரன் உயர்ந்த நிலைமையைக் குறித்து மேன்மைப்பாராட்டட்டும். செல்வந்தனாய் இருக்கின்ற சகோதரனோ, தாழ்மையுள்ள மனப்பான்மையைக்குறித்து மேன்மைப்பாராட்டட்டும். ஏனெனில் காட்டுப் பூவைப்போல் செல்வந்தன் மறைந்துபோவான். கடும் வெயிலுடன் சூரியன் மேலே எழும்ப, செடி வாடிப்போகிறது; அதன் பூக்களும் உதிர்ந்து விழுகின்றன, அதன் அழகும் அழிந்துபோகிறது. இவ்விதமாகவே செல்வந்தனும் தனது வழிகளில் வீழ்ச்சியடைவான்.

யாக்கோபு 1:4-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும். உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான். அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான். ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.

யாக்கோபு 1:4-11 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை வெளிப்படக்கடவது. அப்பொறுமை உங்களை, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல் முழுமையும் நிறைவும் உள்ளவர்களாக ஆக்கித் தன் பணியை நிறைவு செய்யும். ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். ஆனால் நீங்கள் தேவனைக் கேட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அவர் மீது விசுவாசம் வேண்டும். தேவனை சந்தேகித்தல் கூடாது. சந்தேகப்படுகிறவன் கடலில் உள்ள அலைகளைப் போன்றவன். காற்று அந்த அலைகளை மேலும் கீழுமாகப் புரட்டும். சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். மேலும் தேவன் தன்னைப் பணிவுள்ளவனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு பணக்காரச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். எப்படி? “அவன் ஒரு காட்டுப் பூவைப்போல உதிர்ந்து போவான்” என்று தேவன் சொன்னார். சூரியன் உதயமானதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிறது. சூரிய வெப்பமானது செடிகளைக் காய வைக்கிறது. பூ உதிர்ந்துவிடுகின்றது. அந்த பூ அழகாக இருந்தது. ஆனால் அது வாடிப்போய் விடுகிறது. பணக்காரனும் அப்படித்தான். அவன் தன் வியாபாரத்துக்காகத் திட்டமிடும்போது இறந்துபோவான்.