யாக்கோபு 1:5-8

யாக்கோபு 1:5-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

யாக்கோபு 1:5-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களில் யாராவது ஞானத்தில் குறைவுள்ளவராக இருந்தால், அவர்கள் இறைவனிடம் கேட்கவேண்டும். அப்பொழுது அது அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் இறைவன் குற்றங்குறை பாராமல், எல்லோருக்கும் தாராளமாய்க் கொடுக்கிறவராய் இருக்கிறார். ஆனாலும், நீங்கள் கேட்கும்போது, விசுவாசத்துடன் கேட்கவேண்டும், சந்தேகப்படக்கூடாது. ஏனெனில் சந்தேகப்படுகிறவர்கள், காற்றினால் அங்குமிங்கும் அடிக்கப்படுகிற கடலின் அலையைப் போலிருக்கிறார்கள். சந்தேகப்படுகிறவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெறலாமென்று நினைக்கக்கூடாது; அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்கள். அவர்கள் செய்வதிலெல்லாம் உறுதியற்றவர்களாய் இருக்கிறார்கள்.

யாக்கோபு 1:5-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான். அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.

யாக்கோபு 1:5-8 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். ஆனால் நீங்கள் தேவனைக் கேட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அவர் மீது விசுவாசம் வேண்டும். தேவனை சந்தேகித்தல் கூடாது. சந்தேகப்படுகிறவன் கடலில் உள்ள அலைகளைப் போன்றவன். காற்று அந்த அலைகளை மேலும் கீழுமாகப் புரட்டும். சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.