யாக்கோபு 4:1-4

யாக்கோபு 4:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களிடையே சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏன் உண்டாகின்றன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கிற, உங்கள் ஆசைகளில் இருந்தல்லவா அவை வருகின்றன? நீங்கள் ஏதோ ஒன்றைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதில்லை. நீங்கள் கொலைசெய்தும் பொறாமைகொண்டும் அபகரிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் விரும்புவதை உங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் கேட்பதில்லை, அதனாலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்கும்போதும் கூட, அவற்றைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் தவறான நோக்கத்துடனேயே கேட்கிறீர்கள். உங்கள் சொந்த இன்பங்களை நிறைவேற்றவே அவைகளைக் கேட்கிறீர்கள். விபசாரக்காரரே, உலகத்துடன்கொள்ளும் நட்பு இறைவனை பகைப்பது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகிற யாரும், இறைவனுக்கு பகைவனாகிறான்.

யாக்கோபு 4:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா? நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை. நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

யாக்கோபு 4:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள். தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா?

யாக்கோபு 4:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.