நியாயாதிபதிகள் 10:3-18

நியாயாதிபதிகள் 10:3-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவனுக்குப் பின் கீலேயாத்தியனான யாவீர் இருபத்திரண்டு வருடங்கள் இஸ்ரயேலை வழிநடத்தினான். அவனுக்கு முப்பது மகன்கள் இருந்தார்கள், இவர்கள் முப்பது கழுதைகளில் சவாரி செய்தார்கள். கீலேயாத்தில் இவர்கள் முப்பது பட்டணங்களை நிர்வகித்தார்கள். இக்குடியிருப்புகள் இந்த நாள்வரைக்கும் அவோத்யாவீர், அதாவது யாவீரின் கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. யாவீர் இறந்து காமோன் என்னும் இடத்திலே அடக்கம் செய்யப்பட்டான். திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமை செய்தார்கள். அவர்கள் பாகால்களுக்கும், அஸ்தரோத்திற்கும் பணிசெய்தார்கள். அவர்கள் சீரியரின் தெய்வங்களையும், சீதோனியரின் தெய்வங்களையும், மோவாபியரின் தெய்வங்களையும், அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தியரின் தெய்வங்களையும் வணங்கினார்கள். இஸ்ரயேலர் யெகோவாவை கைவிட்டு, தொடர்ந்து அவரை வழிபடவில்லை. இதனால் யெகோவா இஸ்ரயேலருடன் கோபங்கொண்டு. அவர் பெலிஸ்தியர் கையிலும், அம்மோனியர் கையிலும் அவர்களை விற்றுப்போட்டார். அவர்கள் இஸ்ரயேலர்களை அந்த வருடத்தில் நெருக்கித் துன்புறுத்தினார்கள். இவ்வாறு எமோரியரின் நாடான யோர்தானுக்குக் கிழக்கே கீலேயாத்தில் பதினெட்டு வருடங்களாக இஸ்ரயேலரை ஒடுக்கினார்கள். அதோடு அம்மோனியரும் யோர்தான் நதியைக் கடந்துபோய் யூதா, பென்யமீன், எப்பிராயீம் குடும்பத்தாருடன் சண்டையிடச் சென்றனர். இதனால் இஸ்ரயேலர் பெருந்துன்பத்திற்குள்ளானார்கள். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம், “நாங்கள் உமக்கெதிராகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனைக் கைவிட்டு பாகால்களுக்குப் பணிசெய்தோம்” என கதறி அழுதனர். அப்பொழுது யெகோவா இஸ்ரயேலரிடம், “எகிப்தியர், எமோரியர், அம்மோனியர், பெலிஸ்தியர், சீதோனியர், அமலேக்கியர், மீதியானியர் ஆகியோர் உங்களை ஒடுக்கியபோது நீங்கள் என்னை நோக்கி உதவிகேட்டு அழுதீர்களே. அப்பொழுது நான் உங்களை அவர்களுடைய கையினின்று காப்பாற்றவில்லையா? அப்படியிருந்தும் நீங்கள் என்னைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். அதனால் இனிமேல் நான் உங்களைக் காப்பாற்றமாட்டேன். நீங்கள் தெரிந்துகொண்ட தெய்வங்களிடம்போய் அழுங்கள். நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவை உங்களைக் காப்பாற்றட்டும்” என பதிலளித்தார். ஆனால் இஸ்ரயேலர் யெகோவாவிடம், “நாங்கள் பாவம்செய்தோம். நலமென நீர் நினைப்பதை எங்களுக்குச் செய்யும், ஆனாலும் எப்படியாவது தயவுசெய்து இப்பொழுது எங்களை விடுவியும்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் தங்கள் மத்தியிலிருந்த அந்நிய தெய்வங்களை அகற்றிப்போட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தார்கள். இஸ்ரயேலரின் அவலத்தைத் தொடர்ந்து யெகோவாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மோனியர் ஆயுதம் தாங்கி கீலேயாத்தில் முகாமிட்டார்கள். இஸ்ரயேலரும் ஒன்றுகூடி மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். அப்பொழுது கீலேயாத் மக்களின் தலைவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “முதன்முதல் அம்மோனியருக்கு எதிராக யார் தாக்கத் தொடங்குகிறானோ, அவனே கீலேயாத்தில் வாழும் எல்லோருக்கும் தலைவன்” என்று சொன்னார்கள்.

நியாயாதிபதிகள் 10:3-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தோலா இறந்தப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை 22 வருடங்கள் நியாயம் விசாரித்தான். முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது. யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள். அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள். யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும், சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா? அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன். நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார். இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி, அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார். அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 10:3-18 பரிசுத்த பைபிள் (TAERV)

தோலா மரித்தபின், தேவனால் மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டான். அவன் பெயர் யாவீர். யாவீர் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்து வந்தான். யாவீர் இஸ்ரவேலருக்கு 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தான். யாவீருக்கு 30 குமாரர்கள் இருந்தனர். அந்த 30 குமாரர்களும் 30 கழுதைகளின் மீது சவாரி செய்தனர். அவர்கள் கீலேயாத் தேசத்தில் உள்ள 30 நகரங்களைத் தம் அதிகாரத்துக்குட்படுத்திக் கொண்டனர். அவை இன்றும் யாவீரின் நகரங்கள் எனப்படுகின்றன. யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான். தீமையானவைகள் என கர்த்தரால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அஸ்தரோத்தையும் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் தொழுதுகொண்டனர். இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து அவரை ஆராதிப்பதை நிறுத்தினர். எனவே கர்த்தர் இஸ்ரவேலர் மீது கோபமடைந்தார். பெலிஸ்தரையும் அம்மோனியரையும் இஸ்ரவேலரைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். அதே ஆண்டில் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதியில் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரையும் அழித்தனர். எமோரியர் வாழ்ந்த தேசம் அதுவே. இஸ்ரவேலர் அங்கு 18 ஆண்டுகள் தொல்லையடைந்தனர். அம்மோனியர் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன், எப்பிராயீம் ஜனங்களோடு போரிடச் சென்றனர். அம்மோனியர் இஸ்ரவேலருக்கு மிகுந்த தொல்லைகள் அளித்தனர். இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிவேண்டி அழுதார்கள். அவர்கள், “தேவனே, உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தேவனை விட்டுப் பொய்த் தெய்வமாகிய பாகாலை நாங்கள் தொழுதுகொண்டோம்” என்றனர். கர்த்தர் இஸ்ரவேலரை நோக்கி, “எகிப்தியரும், எமோரியரும், அம்மோனியரும், பெலிஸ்தியரும் உங்களைத் துன்புறுத்தும்போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றினேன். சீதோனியரும், அமலேக்கியரும், மீதியானியரும் உங்களைத் துன்புறுத்திய போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் உங்களை அவர்களிடமிருந்தும் காத்தேன். ஆனால் நீங்கள் என்னை விட்டு, விட்டு பிற தெய்வங்களை தொழுதுகொள்ளத் தொடங்கினீர்கள். எனவே உங்களைக் காப்பாற்ற மறுக்கிறேன். நீங்கள் அந்த தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். எனவே அவர்களிடம் போய் உதவி வேண்டுங்கள். அந்தத் தெய்வங்கள் உங்கள் தொல்லைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றட்டும்” என்று பதில் கூறினார். ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம், “நாங்கள் பாவம் செய்தோம். உமது விருப்பம்போல எங்களுக்குச் செய்யும். ஆனால் இன்று எங்களைக் காப்பாற்றும்” என்றார்கள். பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வீசியெறிந்து விட்டு, கர்த்தரை மீண்டும் ஆராதிக்க ஆரம்பித்தனர். எனவே கர்த்தர் அவர்கள் துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார். அம்மோன் மக்கள் போருக்காக ஒன்றாகக் கூடினார்கள். அவர்களின் முகாம் கீலேயாத் தேசத்தில் இருந்தது. இஸ்ரவேலர் ஒன்றாகக் கூடினார்கள். மிஸ்பாவில் அவர்களின் முகாம் இருந்தது. கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த ஜனங்களின் தலைவர்கள், “அம்மோன் ஜனங்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தலைமை தாங்கும் மனிதன் கீலேயாத்தில் வாழும் ஜனங்களுக்குத் தலைவன் ஆவான்” என்றனர்.

நியாயாதிபதிகள் 10:3-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான். முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது. யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான். இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார். அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள். அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம்பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும், சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா? அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன். நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி, அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார். அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள். அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.