எரேமியா 30:12-17

எரேமியா 30:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது. உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களுமில்லை. உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும்வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிறவண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன். உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன். ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன். அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 30:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“யெகோவா கூறுவது இதுவே: “ ‘உங்கள் புண் ஆற்ற முடியாதது; உங்கள் காயமும் குணப்படுத்த முடியாதது. உங்களுக்காக வழக்காட ஒருவருமில்லை; உங்கள் காயங்களுக்கு மருந்தில்லை. நீங்கள் குணமடைய மாட்டீர்கள். உங்களுடைய கூட்டாளிகள் யாவரும் உங்களை மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு உங்களைப்பற்றிய எவ்வித அக்கறையும் இல்லை. ஒரு பகைவன் தாக்குவதைப்போல் நான் உங்களைத் தாக்கி கொடூரமானவன் உங்களைத் தண்டிப்பதுபோல் தண்டித்திருக்கிறேன். ஏனெனில் உங்கள் குற்றம் பெரியது; உங்கள் பாவங்களும் அநேகமானவை. காயத்திற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? தேற்றமுடியாத வேதனைக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? உங்களுடைய பெரிய குற்றத்திற்காகவும், உங்கள் அநேக அக்கிரமங்களுக்காகவுமே இவற்றை நான் உங்களுக்குச் செய்திருக்கிறேன். “ ‘ஆனால் வரப்போகும் அந்த நாளில் உங்களை விழுங்குகிற யாவரும் விழுங்கப்படுவார்கள்; உங்கள் பகைவர்கள் எல்லோரும் நாடுகடத்தப்படுவார்கள். உங்களைக் கொள்ளையிடுகிறவர்கள் கொள்ளையிடப்படுவார்கள்; உங்களைச் சூறையாடுபவர்கள் யாவரையும் நான் சூறையாடுவேன். ஒதுக்கித் தள்ளப்பட்டவள் என்றும், ஒருவரும் கவனிக்காத சீயோன் என்றும் நீங்கள் அழைக்கப்படுவதனால், உங்களுக்கு நான் மீண்டும் சுகத்தைக் கொடுப்பேன். உங்கள் புண்களையும் சுகப்படுத்துவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.

எரேமியா 30:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாகவும் இருக்கிறது. உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சுகப்படுத்தும் மருந்துகளுமில்லை. உன் நேசர் அனைவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினாலும் உன் பாவங்கள் பெருகினதினாலும், எதிரி வெட்டுவதுபோலவும், கொடியவன் தண்டிக்கிறதுபோலவும் நான் உன்னைத் தண்டித்தேன். உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? மிகுதியான உன் அக்கிரமத்தினாலும் பெருகிப்போன உன் பாவங்களினாலும் இப்படி உனக்குச் செய்தேன். ஆதலால் உன்னை அழிக்கிறவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; உன் எதிரிகளெல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன். அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 30:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே! ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை. எனவே நீங்கள் குணம் பெறமாட்டீர்கள். நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள். ஆனால் அந்நாடுகள் உங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன். உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன். இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்களது காயங்களைப்பற்றி ஏன் அழுகிறீர்கள்? உங்கள் காயங்கள் வலியுடையன. அவற்றுக்கு மருந்து இல்லை. கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். காரணம் உங்கள் பெரும் குற்றம்தான். உங்களது பல பாவங்களின் காரணமாக கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். அந்நாடுகள் உங்களை அழித்தனர். ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள். ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள். அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள். நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள். அந்த ஜனங்கள், ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’” என்று சொன்னார்கள்.