யோவான் 1:9-14

யோவான் 1:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம். அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள். வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர்.

யோவான் 1:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை. அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவான் 1:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது. அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர். வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே குமாரனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று.

யோவான் 1:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவான் 1:9-14

யோவான் 1:9-14 TAOVBSI