யோவான் 10:11-18

யோவான் 10:11-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

யோவான் 10:11-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது. கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான். “நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன. பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திற்குள் இராத வேறு ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும். நான் என் உயிரைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக் கொள்வேன். என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்றார்.

யோவான் 10:11-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

யோவான் 10:11-18 பரிசுத்த பைபிள் (TAERV)

“நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு, விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை. “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.