யோவான் 19:31-37

யோவான் 19:31-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.

யோவான் 19:31-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அது பஸ்கா என்ற பண்டிகைக்கான ஆயத்த நாளாயிருந்தது. அதற்கு மறுநாள் ஒரு பெரிய ஓய்வுநாள். அந்த நாளிலே உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பாததனால், சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். எனவே படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் அந்த படைவீரரில் ஒருவன் இயேசுவின் விலாவை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது இரத்தமும் தண்ணீரும் பீறிட்டுப் பாய்ந்தது. அதைக்கண்ட மனிதன் சாட்சி கொடுத்தான். அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. தான் சொல்வது உண்மை என்று அவன் அறிவான். நீங்களும்கூட விசுவாசிக்கும்படியாகவே அவன் இதைச் சாட்சியாய்ச் சொல்கிறான். “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன. “தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” என்று இன்னொரு வேதவசனமும் சொல்லுகிறது.

யோவான் 19:31-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான். அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.

யோவான் 19:31-37 பரிசுத்த பைபிள் (TAERV)

அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை. ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. (இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) “அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை” என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது. அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்” என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.